ஞாயிறு, 28 அக்டோபர், 2012

முதல்வர் மோடிக்கு அமெரிக்க விசா ?

புதுடில்லி:""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிப்பது குறித்த விஷயத்தில், அமெரிக்க குடியேற்ற சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்போம்,'' என, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள், விசா அளிக்க மறுத்தன. நரேந்திர மோடியுடனான, அனைத்து உறவுகளையும், இந்த நாடுகள் துண்டித்தன.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின், பிரிட்டன் அரசு, தன்னுடைய கட்டுப்பாட்டை தளர்த்தியது. பிரிட்டன் தூதரக அதிகாரி, நரேந்திர மோடியை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவும், நரேந்திர மோடி விஷயத்தில், கட்டுப்பாட்டை தளர்த்துமா என்ற, கேள்வி எழுந்தது.


இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர், வில்லியம் பர்ன் கூறியதாவது:குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு விசா அளிக்கப்படுமா என்று, கேள்வி கேட்கப்படுகிறது. நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு வருவதற்காக விசா கோரி விண்ணப்பித்தபோது, அப்போதிருந்த அதிகாரிகள், சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்தனர்.தற்போதும், இது தொடர்பான முடிவு, அமெரிக்க குடியேற்ற சட்ட விதிமுறைகளின் படியே, எடுக்கப்படும். உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில், தனிப்பட்ட நபர் குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

அதேநேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த பல தொழில் அதிபர்கள், குஜராத்தில் தொழில் துவங்க, ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அதேபோல், குஜராத்தை சேர்ந்த ஏராளமானோர், அமெரிக்காவின் பல பகுதிகளிலும் வசிக்கின்றனர்.எனவே, இந்த விவகாரத்தில், குஜராத்துக்கும், அமெரிக்காவுக்கும், பலமான தொடர்பு உள்ளது. ஆனால், குறிப்பிட்ட நபரைப் பற்றிய, எந்த கருத்தையும், தற்போது தெரிவிக்க விரும்பவில்லை.இவ்வாறு வில்லியம் பர்ன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக