வியாழன், 25 அக்டோபர், 2012

ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை


பாளையில் இன்று ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை பாளை கிருஷ்ணன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 37). இவர்களுக்கு மணிகண்டன் (10), மகாலட்சுமி (8), மகாராஜன்(6), மகாதேவன்(4), மலர்வனம் (2)ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டன் பாளையில் உள்ள பள்ளியில் 5-ம்வகுப்பும், மகாலட்சுமி 3-ம்வகுப்பும், மகாராஜன் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று காலை ரவிசங்கரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ரவி சங்கரை அழைத்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் ரவிசங்கர், அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் 5 குழந்தைகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த நிலையில் கிடந்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் மாநகர கமிஷனர் கருணாசாகர், உதவி கமிஷனர் ராஜ மன்னார், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்வையிட்டனர். அப்போது மாரியம்மாள், அவரது குழந்தைகள் மகாலட்சுமி, மகாராஜன்,மகாதேவன், மலர்வனம்  ஆகிய 5 பேரும் இறந்திருப்பதும், ரவிசங்கர்  மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகிய 2  பேரும் உயிருக்கு போராடி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இறந்த 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும்  சிகிச்சை பலனின்றி ரவிசங்கர் இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 6 ஆனது.

மணிகண்டனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 குழந்தைகளை கொன்று கணவன் -மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.  மேலும் ரவிசங்கர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது  வீட்டில் இருந்து  ஒரு நோட்டையும், ஒரு பேப்பரையும் போலீசார்  கைப்பற்றினர். அதில் ரவிசங்கர் எழுதிய  உருக்கமான 2 கடிதங்கள் இருந்தன.

அதில் தனது இளையமகள் மலர் வனம்  மூளை வளர்ச்சி குன்றி பிறந்ததன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருந்தார். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று பாளை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ரவிசங்கர் சென்னையில் தச்சு வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வார். முதலில் பாளை போஸ்ட் ஆபீஸ் தெருவில்  உள்ள வாடகை வீட்டில் ரவிசங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் அவர் பாளை கிருஷ்ணன் கோவில் தெருவில் ஒரு வீட்டை  வாடகைக்கு எடுத்து அதில் தனது குடும்பத்தை அமர்த்தினார். தற்போது தசரா விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்த அவர் தனது குடும்பத்தினருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரவிசங்கரின் தாய்  மூக்கம்மாள் பாளை திம்ம ராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவர் தனது மகன், பேரன், பேத்தி உடல்களை பார்த்து கதறி  அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இறந்ததால் பாளை கிருஷ்ணன் கோவில் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக