வெள்ளி, 5 அக்டோபர், 2012

அரவிந்த் கெஜரிவால்:பிரியங்காவின் கணவர் வத்ராவுக்கு ரூ.300 கோடி லஞ்சம்

டெல்லி: ராபர்ட் வத்ராவுக்கு டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை லஞ்சமாகத் தந்துள்ளதாக சமீபத்தில் அன்னா ஹசாரேவிடமிருந்து பிரிந்த அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அக்டோபர் 6ம் தேதி (நாளை) நாட்டின் மிக முக்கியமான இரு நபர்களின் ஊழல்களை வெளியிடப் போவதாக புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள அரவிந்த் கெஜரிவால் தெரிவித்திருந்தார். இந் நிலையில் கெஜரிவாலும் India Against Corruption (IAC) அமைப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான சாந்தி பூஷணும் அவரது மகன் பிரசாந்த் பூஷணும் 5ம் தேதியே (இன்று) இந்த விவரத்தை வெளியிடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று மூவரும் டெல்லியில் நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ராவுக்கு வட்டி கூட இல்லாமல் ரூ. 65 கோடி பணத்தைத் தந்துள்ளது டிஎல்எப். இதற்காக 6 நிறுவனங்களை சும்மா பெயருக்காக உருவாக்கி, கடனைத் தந்துள்ளனர்.

இதைக் கொண்டு ராபர்ட் வத்ரா டிஎல்எப் நிறுவனத்திடமே சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 300 கோடிக்கும் மேலாகும்.
குர்காவ்ன் நகரில் உள்ள டிஎல்எப் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வத்ராவுக்குச் சொந்தமான 4 பெண்ட் ஹவுஸ்கள் உள்ளன. இதே டிஎல்எப் நிறுவனத்திடமிருந்து வத்ராவுக்கு 7 பிளாட்களும் தரப்பட்டுள்ளன. ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இந்த பிளாட்கள் வெறும் ரூ. 5 கோடிக்குத் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன?
வத்ரா மூலமாக டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குக் கிடைத்த லாபங்கள், சலுகைகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
வத்ராவின் சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் ரூ. 50 லட்சத்தில் இருந்து ரூ. 300 கோடியாகிவிட்டது. வத்ரா மற்றும் அவரது தாயார் 5 நிறுவனங்களின் அதிபர்களாக உள்ளனர். ஆனால் இதில் எந்த நிறுவனமும் கடந்த பல ஆண்டுகளாக செயல்படவே இல்லை.
இந்தப் பணம் எல்லாமே டிஎல்எப் நிறுவனத்தால் வத்ராவுக்கு தரப்பட்ட லஞ்சமாகும். இதன்மூலம் டிஎல்எப் நிறுவனத்துக்கு வத்ரா மூலம் பெரும் லாபம் கிடைத்திருப்பது உறுதியாகிறது.
டிஎல்எப் நிறுவனத்தின் அராலியா அபார்ட்மெண்டில் உள்ள வத்ராவின் பெண்ட் ஹவுஸ் 10,000 சதுர அடி கொண்டது. இதன் விலை ரூ. 25 கோடியாக இருக்கும்போதே அதை வத்ராவுக்கு ரூ. 85 லட்சத்துக்கு விற்றுள்ளனர். இப்போது இதன் சந்தை மதிப்பு ரூ. 40 கோடியாகும்.
இவ்வளவு விலை உயர்ந்த வீட்டை வத்ராவுக்கு டிஎல்எப் நிறுவனம் குறைந்த விலைக்குக் கொடுத்திருக்கிறது என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகத் தானே அர்த்தம். இதில் டிஎல்எப் நிறுவனத்துக்கு ஏதோ லாபம் கிடைத்திருக்கிறது என்று தானே அர்த்தம்.
டிஎல்எல் ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலங்களை வளைத்துப் போட டெல்லி காங்கிரஸ் அரசு மூலமும் ஹரியாணா காங்கிரஸ் அரசு மூலமும் வத்ரா உதவி வந்துள்ளார். இதனால் வத்ரா மீது முழு விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
விரைவிலேயே இது தொடர்பாக சிபிஐ, வருமான வரித்துறை விசாரணை கோரி நீதிமன்றத்தை அணுகுவோம். நீதிமன்றம் சொல்லாமல் இந்த விசாரணையை இந்த அமைப்புகள் மேற்கொள்ளாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
டிஎல்எப் நிறுவனத்தின் ஹோட்டலில் 50 சதவீத பங்கை வாங்குவதற்குக் கூட அந்த நிறுவனமே வத்ராவுக்கு பணம் தந்துள்ளது. இதைக் கொண்ட அந்த ஹோட்டலிலும் பங்கை வாங்கிக் கொண்டு மீதிப் பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
இதற்குப் பிரதிபலனான டிஎல்எப் நிறுவனத்துக்கு பெரும் விலை கொண்ட நிலங்கள் கூட மிகக் குறைந்த விலைக்குத் தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் டிஎல்எப் நிறுவனமும் ராபர்ட் வத்ராவும் இணைந்து ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து சகேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு டெல்லியில் ஹில்டன் கார்டன் இன் என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது.
116 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலின் நிலம் டிஎல்எப் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த ஹோட்டலை விற்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் விலை ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் வத்ராவின் சகேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு டிஎல்எப் ரூ. 3.5 கோடி கடன் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் வத்ராவுக்கு டிஎல்எப் ஏராளமான லஞ்சத்தைத் தந்துள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
10ம் தேதி இரண்டாவது நபரின் ஊழல்கள் குறித்து கெஜரிவால் தரப்பு விவரங்களை வெளியிடும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக