வெள்ளி, 12 அக்டோபர், 2012

Infosys இன்போசிஸ் லாபம் 24% உயர்வு.

 Infosys Q2 Fy13 Results It Major Wage Hike Employees பெங்களூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸின் லாபம் 24.29% அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு காலத்தில் இதன் லாபம் ரூ. 2,369 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது ரூ. 2,289 கோடியாக இருந்தது.
அதே போல, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,616 கோடியில் இருந்து ரூ. 9,858 ஆக அதிகரித்துள்ளது. அதாவது வருவாய் 21.7% அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அமலாக்கப்படும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சிபுலால் தெரிவித்துள்ளார். எவ்வளவு சதவீத ஊதிய உயர்வு இருக்கும் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆனால், ஊதிய உயர்வு 6 முதல் 8 சதவீதத்துக்குள் தான் இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் இன்போசிஸ் மட்டுமே ஊதிய உயர்வை வழங்காமல் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பதவி உயர்வு பெற்ற 16,000 பேருக்கு மட்டும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஊதிய உயர்வை தந்தது இன்போசிஸ்.
சிஎப்ஓ ராஜினாமா:
இதற்கிடையே இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரியாக இருந்த வி.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதில் துணை தலைமை நிதியாரியான ராஜிவ் பன்சால், அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்று இன்போசிஸ் அறிவித்துள்ளது.
பாலகிருஷ்ணன் எதற்காக ராஜினாமா செய்தார் என்பதை இன்போசிஸ் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருப்பார் என்று மட்டும் கூறியுள்ளது.
சாப்ட்வேர் துறை வளர்ச்சி 14%க்குள் தான் இருக்கும்:
இந் நிலையில் இந்திய சாப்ட்வேர் துறையின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 11 முதல் 14 சதவீதத்துக்குள் தான் இருக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு 16 சதவீதமாகவும், சர்வதேச பொருளாதார சிக்கல் உருவாவதற்கு முன் 30 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ. 5 லட்சம் கோடி மதிப்புள்ள இந்திய சாப்ட்வேர், பிபிஓ துறை இன்னும் அமெரிக்கா, ஐரோப்பாவையே பெருமளவில் சார்ந்துள்ளது. அந்த நாடுகளின் தொடர் பொருளாதாரத் தேக்கம் இந்திய சாப்ட்வேர் துறையின் வளர்ச்சியை பாதித்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக