ஞாயிறு, 28 அக்டோபர், 2012

சிரஞ்சீவி உட்பட 10 பேருக்கு பதவி மத்திய அமைச்சரவை இன்று மாற்றம்

மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்படுகிறது. புதுமுகங்கள் பலர் அமைச்சராகிறார்கள். அதே நேரத்தில் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அப்போது, அந்த கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்த பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதவிர திமுகவை சேர்ந்த 2 அமைச்சர்களும் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். பல முக்கிய இலாகாக்கள், கேபினட் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/


இதனால், அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங்  முடிவு செய்தார். பல மாதங்களாக இழுபறியாக இருந்த இந்த நடவடிக்கை, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடக்கிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தின்போது காங்கிரசை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் பலர் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதற்காக, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முன்தினமே ராஜினாமா செய்தார்.திரிணாமுல் காங்கிரஸ் விலகியதால் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பல காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா முன்ஷி, மற்றொரு மாஜி அமைச்சர் கனிகான் சவுத்ரியின் சகோதரர் ஏ.எச்.கான்சவுத்ரி, பிரதீப் பட்டாச்சாரியா ஆகியோர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது.

ஆந்திராவில் காங்கிரசில் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை இணைத்த நடிகர் சிரஞ்சீவி அமைச்சராகிறார். ராகுல் காந்தியின் ஆதரவாளர்களான மீனாட்சி நடராஜன், விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர் உட்பட 10 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஜார்கண்டை சேர்ந்த பிரதீப் பல்மூசு, ஒடிசாவை சேர்ந்த பிரதீப் மஜ்ஹி ஆகியோரும் அமைச்சராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேசியவாத காங்கிரசை சேர்ந்த அகதா சங்மா தனது தந்தை பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால், அந்த கட்சியை சேர்ந்த தாரிக் அன்வர் மத்திய இணை அமைச்சராகிறார். ஐமு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு பதவி வழங்கப்படவில்லை. திமுக சார்பில் யாரும் புதிதாக அமைச்சரவையில் சேர மாட்டார்கள் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. புதிதாக அமைச்சராக உள்ளவர்களும், பதவி உயர்வு பெற உள்ள அனைவரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். தற்போது இணையமைச்சர் பதவியை வகித்து வரும் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, ஜோதிராதித்ய சிந்தியா, அஜய் மாகென், ஹரீஷ் ராவத் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவோ அல்லது தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என தெரிகிறது. மேலும் பல அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளது.புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு  நடைபெற உள்ளது. மக்களவைக்கு 2014ல் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன்பாக செய்யப்படும் கடைசி அமைச்சரவை மாற்றமாக இது இருக்கும் என்று தெரிகிறது.பாஜ கருத்து: டெல்லியில் பாஜ செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி அளித்த பேட்டி:திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அதனால் அமைச்சரவை மாற்றத்துக்கு முன் மன்மோகன் சிங் அரசு தேர்தலை சந்திக்க வேண்டும். அதை விடுத்து அமைச்சரவையை மாற்றம் செய்வது வீண் வேலை. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை முடக்குவதால், அரசுக்கு வருவாய் கிடைக்கு என்றால் அதை செய்ய பாஜ தயங்காது. 2 ஆண்டுகளுக்கு முன் 2ஜி ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் குளிர்கால கூட்டத்தொடரை முடக்கினோம். இதனால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணராகவும், நேர்மையானவராகவும் அறியப்பட்டார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது ஆட்சியில் அது மாறிவிட்டது. மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர், நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உட்பட பல சிறந்த பதவிகளை வகித்தவர். இவ்வளவு தகுதிபடைத்த பிரதமர் உலகில் வேறு எங்கும் இல்லை. ஆனால், நாட்டின் வளர்ச்சி சதவீதம் 9.2 சதவீதமாக இருக்கும் என உறுதியளித்தார். ஆனால் 5.2 சதவீதத்திலேயே அது நீடிக்கிறது. இவ்வாறு ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

இலாகா மாற்றம்
மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தவர் புரந்தேஸ்வரி. என்.டி.ராமராவின் மகளான இவர் கேபினட் அமைச்சராகிறார். அவருக்கு வர்த்தக துறை பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வெளியுறவுத் துறை அமைச்சராகிறார். நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சரான கமல்நாத்துக்கு, நாடாளுமன்ற விவகாரத் துறை பொறுப்பு கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ராகுல் சஸ்பென்ஸ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் இன்று அமைச்சர் பதவியேற்பார் என்று காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இப்பதவியை ஏற்க ராகுல் தயங்குகிறார். கட்சி பணியில் தீவிர கவனம் செலுத்தவே அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியை அவர் இன்று ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக