சனி, 29 செப்டம்பர், 2012

தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான் Is It?

Director Vijay S Letter On Thaandavam Issue தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்

சென்னை: தாண்டவம் படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடையதுதான். இந்த விவகாரத்தில் அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.
தாண்டவம் கதையின் உரிமை பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கமே இரண்டாக உடைந்துள்ளது.
இந்த நிலையில், தாண்டவம் படத்தின் இயக்குநர் என்ற முறையில், விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தாண்டவம் படத்தின் இயக்குனர், கதாசிரியர் என்ற முறையில் , இப்படத்ன் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்தும், அதில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்தது பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த ஒரு மாத காலமாக, தாண்டவம் திரைப்பட பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் சங்கம் உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமி தொடுத்த வழக்கை எடுத்து, இரு தரப்புக்கும் நியாயமான முறையில் விசாரித்து வந்ததும், பின் இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட அனுமதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. உதவி இயக்குனர் பொன்னுச்சாமி தொடுத்த இவ்வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இதுநாள் வரையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கை கையிலெடுத்துக் கொண்ட நாள் முதல், நான் முழுமையான ஒத்துழைப்பு தரவிழைந்ததற்கு காரணம் இயக்குனர் அமீர் மற்றும் இயக்குனர் ஜனநாதன் அவர்கள் மேல் வைத்த அளவு கடந்த நம்பிக்கை , சங்கத்தின் மீது எனக்கிருக்கும் அளவற்ற மரியாதை, இவையனைத்தையும் மீறி உதவி இயக்குனர் திரு.பொன்னுச்சாமிக்கு அவர் கதை வேறு, என் கதை வேறு என்று தெளிவுபடுத்த விரும்பியதால், நான் எனது திரைக்கதையை வாசிக்கக் கொடுத்தேன், தொடர்ந்து என் படத்தையும் பார்க்க அனுமதித்தேன்.
இன்று இவ்வழக்கு வெற்றி பெற்றதால், இதுவரை போராடிய நியாயத்தின் பக்கம் கிடைத்த வெற்றிக்காக நான் மகிழ்ச்சியடையலாம், ஆனால் உள்ளூர வேதனையும், வருத்தமும் எனக்குள் இருக்கிறது. காரணம், இப் பிரச்சனை தொடர்பாக, இயக்குனர் அமீர் அவர்கள், தனது இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை கேட்டு , அதிர்ச்சி அடைந்தேன்.
உண்மையில் இப்பிரச்சனையை நேர்மையாகவும், உண்மையாகவும் விசாரித்து, இரு குழுவினரையும் படம் பார்க்க வைத்து, அதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், என்னையும் பொன்னுச்சாமியையும் நீதிமன்றத்துக்கு சென்று சரியான தீர்வு காணும்படி அறிவுறுத்தினார்.
அவர் ஒரு போதும் ஒரு சாராராக நடந்து கொள்ளாமல் உண்மையே வெல்ல வேண்டும் என்று தனது அனைத்து வேலைகளின் நடுவிலும், ஒரு மாத காலமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்.
அப்படி நடுநிலை வகித்த திரு. அமீர் அவர்கள் மீது, இன்று சில பேர் அவதூறு பேசுவதாக அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இயக்குனர் சங்கம் இன்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கியமான சங்கமாக உருவெடுத்ததற்கும், காரணம் அமீர் அவர்களும் இன்று பதவி வகிக்கும் சக நிர்வாகிகளுமே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்பேர்ப்பட்ட ஒருவர் மீது அவதூறு சுமத்துவது நீதியை குலைப்பது போன்ற செயலாகும். இயக்குனர் அமீர் அவர்கள் சங்க நலன் கருதியும், உறுப்பினர்கள் நலன் கருதியும் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுப்பினர் என்ற முறையில் ஊடக நண்பர்கள் மூலமாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். "
-இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக