திங்கள், 24 செப்டம்பர், 2012

அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

கூடிய விரைவில் அப்துல் கலாம் தலைமையில் நடிகை அமலா பாலுக்கு பாராட்டு விழா நடந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. அதை நிரூபிப்பதற்காகவே ’5வது தூண்’ எனும் தன்னார்வக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
கி.பி.2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் லட்சியம். இதற்காக செல்வந்தர்களின் வாரிசுகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளை கனவு காணச் சொல்லி தொண்டைத் தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நல்ல விஷயம் நடக்க வேண்டுமென்றால் ஒரு கெட்ட விஷயம் அகற்றப்பட வேண்டும். அதுதான் ஊழல் நிறைந்த இந்தியாவை சுத்தப்படுத்தும் வேலை.
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை மற்றும் பேட்டி அளிப்பதில் ஆரம்பித்து அம்பானி, விஜய் மல்லையாவுக்கு சாமரம் வீசுவது, அன்னிய முதலீடு – வால்மார்ட்டின் வருகையினால் ஆபத்தில்லை என்று உபதேசிப்பது வரை கலாமுக்கு எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன.
இந்த தள்ளாத வயதில் இதற்கு மேல் அப்துல் கலாமால் பணியாற்ற முடியாது; இயலாது.
எனவே அவருக்கு கை கொடுக்கவும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும் தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார். இதற்காகவே ’5வது தூண் எனும் ’தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு திட்டத்துக்கு தூதுவராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கான ஊதியத்தை அவர் கருப்பாக வாங்கினாரா, இல்லை வெள்ளையாக வாங்கினாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. முக அழகுக்காக அமெரிக்கா சென்று செலவிடும் நேரமும், வசதியும் கொண்ட அமலா பாலுக்கு ஊழலை ஒழிப்பதற்கான நேரமும், மனதும் இருப்பது ஆச்சரியமான ஒன்று.
ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் இந்தியா, கிரிக்கெட்டில் உலகளவில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இந்தியா, அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்திருக்கும் இந்தியா, ஏன் பின் தங்கியிருக்கிறது? காரணம் லஞ்சம், ஊழல். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் லஞ்சம் என்றால் என்ன ஊழல் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த சமாச்சாரங்களை எப்படி அகற்றுவது? அதற்கான வழியை அமலா பால், கண்டுபிடித்திருக்கிறார். சரிவர அவரால் இதை துல்லியமாக விளக்க முடியாததால் ’5வது தூணின்’ தலைவர் விஜய் ஆனந்த், ஊழலை ஒழிப்பதற்கான வழியை சொல்கிறார். இதை இந்தக் காணொளியில் காணலாம், கேட்கலாம்.
அதாவது லஞ்சம் தராமல் எதுவும் நடக்காது என்ற நிலையை மாற்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊர் எங்கும் குழுக்களை ஏற்படுத்த போகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட், பட்டா ஆகியவற்றை வாங்க என்ன வழிமுறை, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பவே அவற்றை வாங்க போராடுவது. மீறி லஞ்சம் கேட்பவர்களை பொது மக்களிடம் அம்பலப்படுத்துவது… சுருக்கமாக சொல்வதெனில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே லஞ்சம் தாண்டவமாடுவதால், தனியார் நிறுவனங்களில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல் அரசு நிறுவனங்களை மாற்ற போராடுவோம் என அறைகூவல் விடுத்திருக்கிறார் அமலா பால்.
ரேஷன் கார்ட், பட்டா, பாஸ்போர்ட் என ’5வது தூண்’பட்டியலிடும் அனைத்தும் நடுத்தர வர்க்கத்துடன் தொடர்புடையவை. எப்படியாவது ’வாழ்க்கையில் முன்னேற’ வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் வர்க்கம் இதுதான். அரசு அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பதுதான் நடுத்தர வர்க்கத்திற்கு பிரச்சினை. அல்லது கெட்டுப் போன பிசாவுக்காக கொடுக்கப்பட்ட பணம் போராடி திருப்பி வாங்கினால் அது புரட்சி. மற்றபடி மருத்துவ பட்டத்திற்காக்க பல இலட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளிடம் கொடுத்தால் அது ஊழலில்லை. பென்ஷன் பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்தால் அது நேர்மையானது.
மற்றபடி நாடறிந்த ஊழல்கள் அனைத்தும் தனியார் மயத்தின் விளைவு என்பதை நடுத்தர வர்க்கம் அறியாது. அறிந்தாலும் கவலைப்படாது. எனினும் இந்த மக்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்வுக்கு வடிகாலாக 5வது தூண் போன்ற நகைச்சுவைகள் அவ்வப்போது அரங்கேறும். அதனால்தான் ரொம்ப சீரியசாக வெறும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக லஞ்சம், ஊழலை ஒழித்து விடலாம் என்று பேசவும், நம்பவும் முடிகிறது.
அண்ணா ஹசாரே பின்னால் வீக் எண்ட் புரட்சியாளர்கள் திரண்டதும், ’சத்தியமேவ ஜெயதே’ என ஆமிர்கான் அருகில் உருகியதும், இப்போது அமலா பாலின் பின்னால் இருந்தபடி 5வது தூண் தொடை தட்டுவதும் ஒரே நாடகத்தின் பல காட்சிகள்தான்.
ஆனால் அமலா பால் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கும் முதலாளிகள் வரவு செலவை கருப்பு, வெள்ளையாக வைத்திருப்பது குறித்தோ, இல்லை நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மமாக கருப்பில் மட்டும் வைத்திருப்பது குறித்தோ பேசினால் கொஞ்சம் பயனளிக்கும். பெரிய திமிங்கலங்களை விட்டு விட்டு திரும்பத் திரும்ப கலெக்டர் ஆபீஸ் பியூன் ஊழலைத்தான் எதிர்ப்பார்கள் என்றால் நமக்கு அழுகையே வந்து விடும்! என்ன சொல்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக