சனி, 29 செப்டம்பர், 2012

எதியூரப்பாவுக்காக-காங்கிரஸ்: கதவு திறந்தது

 Congress Doors Are Open Bsy எதியூரப்பா போட்ட போடு.. பயந்து ஒடுங்கிய பாஜக தலைமை: காங்கிரஸ் விடும் தூது!

டெல்லி: கர்நாடகத்துக்கு புதிய பாஜக தலைவரை தேர்வு செய்ய இருந்த கட்சித் தலைமை எதியூரப்பா கொடுத்த மிரட்டலுக்குப் பயந்து அந்த முடிவை ஒத்தி வைத்துவிட்டது.
கர்நாடக பாஜக தலைவர் பதவியைக் கோரி வருகிறார் முன்னாள் முதல்வரான எதியூரப்பா. ஆனால், அந்தப் பதவியில் இருக்கும் துணை முதல்வரான ஈஸ்வரப்பாவுக்கு அதை விட்டுத் தர மனமில்லை.
ஆனாலும், கட்சியின் தலைமை எம்.பி. அனந்த் குமாரின் ஆதரவாளரான பிரகலாத் ஜோஷி என்பவருக்கு அந்தப் பதவியை தர முடிவு செய்தது. இது தொடர்பான முடிவை நேற்று ஹரியாணாவில் முடிவடைந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்க இருந்தனர்.

இதையடுத்து இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த எதியூரப்பா நேற்று டிவி சேனல்களில் தோன்றி பாஜகவுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.
கட்சியின் தலைவரான கட்காரி எப்போதுமே சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதில்லை. இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பாராட்டியே ஆக வேண்டும். அவர் தனது கட்சியினருக்கு கொடுத்த உறுதி மொழியை காப்பாற்றுபவர். ஆனால், பாஜகவில் நல்லவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை என்று தாக்குதல் தொடுத்த எதியூரப்பா, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை பேசாமல் அனந்த் குமாருக்கே கொடுத்துவிடலாம். அவர் தான் டெல்லியில் உள்ள தலைவர்களின் காதுகளைக் கெடுத்து வருபவர். அவர் தான் வேண்டும் என்றால், அவருக்கே தலைவர் பதவியைத் தந்துவிடலாம். நான் டிசம்பவர் வரை பொறுத்துப் பார்ப்பேன். அதன் பின் என் வழியில் போய்க் கொண்டே இருப்பேன் என்றார் எதியூரப்பா.
எதியூரப்பாவின் இந்த ஓபன் மிரட்டலையடுத்து புதிய தலைவர் தேர்வை அப்படியே ஒத்தி வைத்துவிட்ட பாஜக தலைமை டிசம்பர் வரை ஈஸ்வரப்பாவே இடைக்காலத் தலைவராக நீடிப்பார் என்று அறிவித்துவிட்டது.
எதியூரப்பாவுக்காக கதவுகளை திறந்தே வைத்திருக்கிறோம்-காங்கிரஸ்:
இந் நிலையில் எதியூரப்பாவை அப்படியே அமுக்கி வளைத்துப் போடும் முடிவில் இருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று தூதுவிட்டுப் பார்க்கிறது
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, "காங்கிரஸின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. அவர் காங்கிரஸின் கதவுகளைத் தட்டலாம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
எதியூரப்பாவை வளைத்துப் போட்டால் 17 விழுக்காடு லிங்காயத்துகளின் வாக்குகளை அப்படியே அள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் கணக்கு. ஆளும் பாஜகவின் உட்கட்சி அக்க்ப்போரும் ஊழல் முறைகேடுகளும் நிச்சயம் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதாலேயே எதியூரப்பாவும் இப்படி ஒரு முடிவெடுத்து எப்படியாவது முதல்வராகிவிடுவது என்று கனவு காண்பதாகவும் கூறப்படுகிறது.
1990கள் வரை லிங்காயத்து சமூகத்தினர் காக்கிரஸ் பக்கம்தான் இருந்தனர். ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர் வீரேந்திர பாட்டீலை மாநில முதல்வர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியதால் லிங்காயத்துகள் அப்படி ஒதுங்கிப் போக அந்த இடத்தை பாஜக நிரப்பிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது லிங்காயத்துகளை இணைத்துக் கொள்வதன் மூலம் இழந்த அரசுப் பொறுப்பை மீண்டும் பெற்றுவிடலாம் என நம்புகிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் ஜோதியில் எதியூரப்பா ஐக்கியமாகி ஆட்சியைப் பிடித்துவிடுவார்களா? என்பதை கர்நாடக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக