புதன், 5 செப்டம்பர், 2012

நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் பெரியார்


மொழிப்போர் / ஆர். முத்துக்குமார்
சில ஆண்டுகளாக நின்றுபோயிருந்த இந்தித் திணிப்பு முயற்சிகள் ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் மீண்டும் தொடங்கின. அப்போது சென்னை மாகாண அரசியலில் சில முக்கிய மாற்றங்கள் நடந்திருந்தன. சென்னை மாகாண அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆகியிருந்தார். அரசியல் கட்சியான நீதிக்கட்சியையும் சமுதாய சீர்திருத்த இயக்கமான சுயமரியாதை இயக்கத்தையும் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒன்றாக இணைத்து நடத்திக் கொண்டிருந்தார் பெரியார்.
இந்நிலையில் ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மொழிப்பாடம் தொடர்பாக 20 ஜூன் 1948 அன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, சென்னை மாகாணத்தின் தமிழ் வழங்கும் பகுதிகளில் இந்தி மொழி விருப்பப் பாடமாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி வழங்கும் பகுதிகளில் கட்டாயப் பாடமாகவும் இருக்கும் என்று அறிவித்தது ஓமந்தூரார் அரசு.

இந்த உத்தரவுக்கு கட்டாய இந்திக்கு எதிரானவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்தி ஆதரவாளர்கள் வேறொரு கருத்தை வெளியிட்டனர். தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு மட்டும் காட்டப்பட்ட இந்தச் சலுகை இந்தி ஆதரவாளர்களை உசுப்பேற்றியது. மற்ற பகுதிகளில் கட்டாயம் என்று சொல்லிவிட்டு, தமிழ் வழங்கும் பகுதிகளுக்கு மட்டும் விருப்பம் என்று சொல்வதை ஏற்கமுடியாது என்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ் வழங்கும் பகுதிகளிலும் இந்தி கட்டாயப் பாடம் என்று அரசின் உத்தரவு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தம் நுணுக்கமான திருத்தம்.
இந்தி, சமஸ்கிருதம், அரபி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை இரண்டாவது பாடமொழியாக மாற்றி, இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் படிக்கவேண்டும். அந்த மொழிப் பாடத்தில் நடக்கும் பள்ளித் தேர்வுகளில் மாணவர்கள் கண்டிப்பாகத் தேர்ச்சி பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தி தவிர ஏனைய மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காமல் இப்படியொரு உத்தரவு போட்டிருப்பது இந்தியை மட்டுமே படிக்கச்செய்வதற்கான தந்திரமான முயற்சி என்று கண்டித்தது திராவிடர் கழகம்.
முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமியை பெரியார் நேரில் சந்தித்துப் பேசினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரிடமும் பேசினார். எப்படியேனும் இந்தித் திணிப்பு ஆணையை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இனி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் 17 ஜூலை 1948 அன்று சென்னையில் உள்ள புனித மேரி மண்டபத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திராவிடர் கழகத்தினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மறைமலை அடிகள் தலைமையில் தொடங்கிய அந்த மாநாட்டில் பெரியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ம.பொ. சிவஞானம், கவிஞர் பாரதிதாசன், அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தர்மாம்பாள், அருணகிரி அடிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக முக்கியத் தலைவர்கள் பலரும் பேசினர். அண்ணா பேசும்போது,
‘மறைமலை அடிகளாரும் திரு.வி.க அவர்களும் இந்தி நுழைவால் தமிழ் கெடும், தமிழ் கலாசாரம் கெடும் என்று அழுந்தம் திருத்தமாகக் கூறிவிட்டபிறகு, அவர்கள் சாட்சியம் நமக்குக் கிடைத்துவிட்ட பிறகு போர் முழக்கம் செய்வது தவிர நமக்கு வேறென்ன வேலையிருக்கிறது?’ என்று கேட்டார்.
பிறகு பேசிய பெரியார், ‘திராவிட நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிறுவனும் சிறுமியும் இந்தித் திணிப்பை எதிர்க்க முன்வரவேண்டும்.. நமது பிரிவினை உணர்ச்சியை ஒழிக்கத்தான் அவசர அவசரமாக இந்தியைக் கொண்டுவந்து புகுத்துகிறார்கள். இது எல்லோரும் ஒன்றுசேரக் கூடிய நல்வாய்ப்பாக இருக்கிறது’ என்று பேசினார்.
2 ஆகஸ்டு 1948. திராவிடர் கழகத்தின் செயற்குழு பெரியார் தலைமையில் கூடி இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து சில
முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையில் இந்தி மொழி கட்டாயப் பாடமில்லை என்று முதலில் சொன்ன அரசாங்கம், ஒரு சிலரின் தூண்டுதலால் இப்போது இந்தியைக் கட்டாயப் பாடமாகியிருக்கிறது. இதனை திராவிடர் கழக செயற்குழு கண்டிக்கிறது என்பது ஒரு தீர்மானம்.
இந்தியை விருப்பப் பாடமாகவோ, கட்டாயப் பாடமாகவோ மேற்கண்ட வகுப்புகளில் வைக்கக்கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தது இன்னொரு தீர்மானம்.
பொதுமக்களின் கோரிக்கையையோ, திராவிடர் கழகத்தினரின் கருத்தையோ, தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பையோ அரசாங்கம் கண்டுகொள்ளாததால் திராவிடர் கழகம் இந்தித் திணிப்புக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் இறங்குகிறது. பள்ளிகளில் மறியல் செய்வது, படை, ஊர்வலம், பொதுக் கூட்டங்கள், மந்திரிகளைப் புறக்கணித்தல் ஆகியவற்றின்மூலம் மக்களின் எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்த இருக்கிறது என்பது மூன்றாவது தீர்மானம்.
ஒருவேளை, மேற்கூறிய போராட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் பட்சத்தில் அந்தத் தடைகளை மீறுவது என்றும் அந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மறியல் நடத்துவது என்றும் அந்தப் போராட்டத்துக்கு அண்ணா ‘சர்வாதிகாரியாக’ செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி 10 ஆகஸ்டு 1948 அன்று போராட்டம் தொடங்கியது. சர்வாதிகாரி அண்ணா, படைத்தலைவர் சி.டி.டி. அரசு உள்ளிட்டோர் மாணவர்களைச் சந்தித்து, ‘கட்டாய இந்தியை எதிர்க்கவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். காலையிலும் மாலையிலும் தொடர்ச்சியாக மறியல்கள் நடந்தன. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது மட்டுமல்ல, கண்ணீர்ப்புகை வீச்சும் தடியடியும் துப்பாக்கிச்சூடுகளும் நடந்தன.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடந்துகொண்டிருந்த சமயத்தில் 22 ஆகஸ்டு 1948 அன்று சென்னையில் திராவிடர் கழகச் செயற்குழு கூடியது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் பெரியார், அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மறுநாள் சென்னை வரவிருந்த இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
‘வடநாட்டு ஆதிக்க, சுரண்டல், முதலாளித்துவ, வர்ணாசிரம ஆட்சியின் கண்காணியாக தென்னாட்டுக்கு நீர் பவனி வருவதால், உயர்தனிச் செம்மைத் தமிழ்மொழியைச் சிதைத்து அதன் மூலம் திராவிட மக்களின் கலை, நாகரிகப் பண்புகளை அழித்தொழித்து, ஆரிய வடவர்க்கு அடிமையாக்கும் திட்டத்தில் இங்கு இந்தி மொழியைப் புகுத்தச் செய்து, அதன் எதிரொலி எப்படியிருக்கிறதென்று வேவு பார்க்க வருவதால், பகிஷ்கரிக்காவிடில் வடநாட்டு ஆட்சி அக்கிரமத்தை ஒப்புக்கொண்டவர்களாவோம்; பயங்காளியாகப் பின்னடைந்தவர்களாக ஆவோம், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்தவர்களாவோம்’ என்று போராட்டத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது விடுதலை நாளிதழ்.
கறுப்புக்கொடி போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்ணூறுக்கும் மேற்பட்டோரை முன்கூட்டியே கைது செய்தது காவல்துறை. ஆனாலும் தொண்டர்களின் கூட்டுமுயற்சியால், தடியடிகளுக்கும் கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கும் மத்தியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைத்து கவர்னர் ஜெனரல் ராஜாஜி, மாகாண ஆளுநர் பவநகர் மகாராஜா ஆகியோருக்குக் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன.
ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டிய தமிழ்ப்புலவர் கா. அப்பாத்துரையும் அவரது மனைவியும் காவலர்களின் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகினர்.
காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஓமந்தூராருக்கும் காவேரிப்பாக்கத்தில் கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாருக்கும் ஆலந்தூரில் அமைச்சர் மாதவனுக்கும் திண்டுக்கல்லில் அமைச்சர் சந்திரமௌலிக்கும் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொத்துக்கொத்தாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி போராட்ட வேகத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
15 செப்டெம்பர் 1948 அன்று பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. முந்நூறுக்கும் மேற்பட்ட ஊர்களில் மறியல் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் போராட்டக்காரர்களைச் சோர்வடையச் செய்யும் வகையில் மறுநாள் பெரியாரிடம் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக