புதன், 26 செப்டம்பர், 2012

தமிழக அரசின் "ஈகோ'வால் பறிபோகிறது ரசாயன தொழில் முதலீட்டு மண்டல திட்டம்

தமிழகத்தில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்து, நான்கு மாதங்களாகி விட்டன. இருந்தாலும், இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட, தமிழக அரசு முன்வராததால், திட்டம் அமலாவது கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, நான்கு மாதங்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது.இந்த மண்டலத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், 1.5 கோடி டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்றும், இது தவிர, தனியார் நிறுவனங்கள் பல, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூலை, 3ம் தேதி அளித்தது.


அதனால், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டல துவக்க விழா, விரைவில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் இல்லை. இந்தத் திட்டம் தொடர்பாக, முதல் கட்டமாக, தமிழக தொழிற்துறை மற்றும் ரசாயனத் துறையுடன், மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதுவே, திட்டம் துவங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை. ஆனாலும், அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மத்தியில், இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை, தி.மு.க., அமைச்சர் அழகிரியின் வசம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், திட்டம் வழக்கம் போல, நழுவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த, பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம் அமைந்தால், தமிழகத்தின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த, ஏறத்தாழ, எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அதற்கான உதவிகளை, மத்திய அரசு செய்யும். மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும், 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசு செலவிட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.

இதன் சார்பிலும், கடலூர் பகுதியில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 60 லட்சம் டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில், பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம், ஏற்கனவே அமைக்கப்பட்டு, அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும், அறிவிக்கப்பட்டும், இந்தத் திட்டம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.


பறிபோவது தவிர்க்கப்படுமா?

தமிழகத்திற்கு, மத்திய அரசின் திட்டங்கள் கிடைப்பது என்பதே, குதிரைக் கொம்பாக உள்ளது. அப்படியே கிடைக்கும், ஓரிரு முக்கிய திட்டங்களும், அறிவிப்போடு நின்று போவதுண்டு. அறிவிக்கப்படும் திட்டத்தை, முறையான வகையில், அடுத்தடுத்து எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளை, மாநில அரசு அதிகாரிகள் ஆர்வத்துடன் செய்யாததற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., இடையே நடக்கும், பனிப்போர் காரணமாகக் கூறப்படுகிறது.வெறும் அரசியல் காரணங்களுக்காக, தமிழகத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் பல திட்டங்கள் பறிபோக, தமிழக அரசு காரணமாக இருந்து விடக்கூடாது.

இதிலும் கோட்டை:

தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், மிகப்பெரிய துறைமுகங்களை அமைப்பது என, மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக, உரிய விவரங்களை அளிக்கும்படி, மாநில அரசுகளிடம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கேட்டிருந்தது. நான்கு மாதங்களாகியும், இதற்கான முறையான பதில் எதுவும், தமிழக அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை.இது குறித்து கடிதம் எழுதி கேட்டும் கூட, உரிய பதில் தரப்படவில்லை என, கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆந்திராவில், ஓங்கோல் என்ற இடத்தில், மிகப் பெரிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. அதனால், இந்த விஷயத்திலும், தமிழகம், தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது, மேலும் வேதனை தரும் தகவல்.

-நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக