சனி, 8 செப்டம்பர், 2012

மன்னாரு. மன்னிக்கக் கூடியதாக ரசிக்க முடிகிறது

மன்னாரு, ஒரு மலைக் கிராமம் சார்ந்த எளிமையான காதல் கதை. நல்ல பாடல்கள், இனிமையான இசை, கண்களை நிறைக்கும் பசுமை சூழல் போன்றவை படத்தைப் பார்க்க வைக்கின்றன. சின்னச் சின்ன குறைகளை மறக்கடிக்கின்றன.
அப்புக்குட்டிதான் மன்னாரு. 'நாய் கூட மதிக்காத' அவருக்கும் முறைப்பெண் மல்லிகாவுக்கும் அப்படி ஒரு காதல். இத்தனைக்கும் மன்னாரு படித்தது 3-ம் வகுப்பு. லாரிக்கு மணல் நிரப்பும் வேலை. ஒரு நாள் ஷகிலா படம் பார்க்கப் போக, படம் முடிந்து நண்பன் அறையில் தங்க நேர்கிறது. அந்த நண்பனின் காதல் திருமணத்துக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான் மன்னாரு. அந்தக் கையெழுத்து அவன் வாழ்க்கையில் பல தொல்லைகளை இழுத்துவிடுகிறது.

நண்பனின் மனைவியை தன் மனைவியாகக் காட்டி நடிக்க வேண்டிய சூழல். இதில் காதலியை கைப்பிடிக்க முடியாமல் போகிறது. இறுதியில் மன்னாரு எப்படி சிக்கலிலிருந்து வெளிவருகிறான் என்பது கதை.
அப்புக்குட்டிக்கு ஏற்ற வேடம். ரொம்ப அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர். குடித்துவிட்டு அவர் போடும் ஆட்டம், ஆடு திருடியதாக பொய்யான குற்றச்சாட்டில் சிக்கி அடிவாங்கி அழும் காட்சி என அனைத்திலும் மன்னாருவாகவே மாறியிருக்கிறார். ஆனால் அடுத்த படமும் இதே இமேஜ் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாதி ஆளும் நடிப்பும் அம்சம். அந்த மலைக் கிராமத்தில் அவர் மட்டும் பளிச்சென்று ஈர்க்கிறார்.
மற்றொரு நாயகி வைஷாலிக்கு முகத்தில் கறுப்பு மையடித்து உலவ விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர் தற்கொலைக்கு கிணற்றின் மீதேறி நிற்பதும், ஒரு பாட்டி வந்து ஒரு குடம் தண்ணி இறைச்சுத் தா என்று கேட்டு கெஞ்சுவதும் ரொம்ப இயல்பான நகைச்சுவை.
எப்போதும் வெற்றிலையைக் குதப்பியபடி , எங்கே நம்மீது துப்பிவிடுவாரோ என நினைக்க வைக்கும் அந்த அத்தைக்காரி, அவர் கணவராக வரும் சூர்யகாந்த் ஆகியோரும் குறிப்பிடும்படி செய்திருக்கின்றனர்.
தம்பி ராமையா ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். படத்தின் திரைக்கதை வசனமும் அவர்தான். வசனங்களில் காமெடி தூக்கல். திரைக்கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடியதாகவே இருப்பதால் அனுபவித்து ரசிக்க முடிகிறது படத்தை.
படத்தின் முக்கிய பலம் இசையும் ஒளிப்பதிவும். உதயன் இசையில் ஊரை எல்லாம் காவல் காக்கும்... பாடலும் படமாக்கப்பட்ட விதமும் மனசை அள்ளுகிறது. டுபு டுபு டுபாயி பாடல் நன்றாக இருந்தாலும், அதை சரியான இடத்தில், சரியாக பிரசன்ட் செய்யாதது இயக்குநரின் தவறுதான்!
பின்னணி இசை சரியாகப் பொருந்தியிருப்பதால், சாதாரண காட்சி கூட பார்ப்பவர்களை ஈர்க்கும்படி உள்ளது.
அகு அஜ்மலின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் அழகை அள்ளிப் பருகுகின்றன விழிகள்.
மன்னாரு... பேஜாரு இல்லே!
-எஸ் ஷங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக