சனி, 22 செப்டம்பர், 2012

தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி


நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
கே ஆர் விஜயா பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா ராஜஸ்ரீ போன்றவர்களை விட இவர் ஆரோக்கியமாக இருக்கிறார் .
  இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!
'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
 இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.
நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.

பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!

பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .

ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.

அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.

இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.

சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.

கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன்  ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”


இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.


சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
 ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.

பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம். http://rprajanayahem.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக