ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

புதுசாக இப்போதும் சாமிகள் பிறக்கின்றனவா?

சாமிகளின் பிறப்பும் இறப்பும்சாமிகளின் பிறப்பும் இறப்பும்
சாமிகளின் இறப்பும் பிறப்பும் என்ற பாரதி புத்தகாலய வெளியீட்டிலிருந்து இந்தக் கட்டுரைத் தொடர் இந்த இதழிலிருந்து இடம்பெறுகிறது. கடவுள்களின் பெயரால் மனிதர்களைப் பிரிக்கும் மடமை மிகுந்துவருவதைக் காண்கிறோம். ஆனால், இந்தக் கடவுள்களின் கதைதான் என்ன? இன்றைய காலக்கட்டத்தில் கடவுள்களின் நிலைதான் என்ன ?தன் வாழ்வின் வழியில் மனிதன் கடவுளை எப்படிப் பார்க்கிறான்? என்பவை குறித்து சுவைபட எளியநடையில் உரையாடும் இத்தொடர் உங்களுக்காக...
கொசுக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன,
ஈக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன,
பறவைகள் பிறக்கின்றன, இறக்கின்றன.
மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்.
அதே போல... சாமிகளும் கடவுள்களும் பிறக்கிறார்கள்,  இறக்கிறார்கள்
தப்பு, தப்பு, இப்படியெல்லாம் பேசக்கூடாது. வாயிலே போட்டுக்கோ, சாமி பிறக்கிறதாவது இறக்கிறதாவது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கோபப்படுவார்கள்
ஆனால் யாரும் கோபப்படுவார்கள் என்பதற்காக அறிவியலும் வரலாறும் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் ஒரு வளர்ச்சியும் உலகில் வந்திருக்காது.
இந்த உலகம் உருண்டை என்று முதன் முதலாகச் சொன்னவரை அன்று அந்த ஊர்ப் பெரியவர்கள்போட்டுத் தள்ளினார்கள்.
ஆனால் உலகம் உருண்டைதான் என்று இன்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நமக்குத் தெரியும்.
பூமிதான் நடுவில் இருக்கிறது. சூரியன், சந்திரன், புதன், வியாழன் போன்ற கிரகங்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன என்று முற்காலத்தில் பெரியவர்கள் நம்பினார்கள். ஆனால் அப்படி இல்லை. சூரியன் தான் நடுவில் இருக்கிறது. சூரியன் ஒரு கிரகமல்ல. அது ஒரு நட்சத்திரம். பூமியும் மற்ற கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றுகின்றன என்று முதன் முதலாகச் சொன்ன மனிதரை அன்றைய பெரியவர்கள் வாழவிடவில்லை.
ஆகவே பெரியவர்கள் வருத்தப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டாம். அறிவியல் என்ன சொல்கிறது என்பது தான் நமக்கு முக்கியம்.
சரி, இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மரங்கள் சாமி கும்பிடுவதில்லை.
பறவைகள் சாமி கும்பிடுவதிலலை.
மிருகங்கள் (டைனோசர்கூட) சாமி கும்பிடுவதில்லை.
பூச்சிகள் (கொசுக்கள் கூட) சாமி கும்பிடுவதில்லை.
நம்ம வீட்டு நாய்க்குட்டி சாமி கும்பிடுவதில்லை.
உலகத்தில் சாமி கும்பிடுகிற ஒரே   உயிரினம் மனிதன்தான். இது ஏன்?
இன்னொன்று என்னவெனில்,

நாம் பூமியில் இருக்கிறோம். பூமி சூரியக் குடும்பத்தில் இருக்கிறது. சூரியக்குடும்பம் பால்வீதி என்கிற நம் கேலக்ஸியில் இருக்கிறது. பலகோடி கேலக்ஸிகள் இப்பிரபஞ்சத்தில் இருக்கின்றன. பூமி தவிர வேறு எந்த கிரகத்திலாவது - புதன், வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட செட்னா உள்ளிட்ட எந்தக் கிரகத்திலாவது _ சூரியன் உள்ளிட்ட எந்த நட்சத்திரத்திலாவது _ எந்த கேலக்ஸியிலாவது _ இந்தப் பிரபஞ்சத்தின் எந்த இடத்திலாவது எந்த மூலையிலாவது கோவில், குளம், மசூதி, சர்ச், சாமி, கடவுள் ஏதாச்சும் இருக்கிறதா? இல்லவே இல்லை. இந்த சமாச்சாரம் எல்லாம் பூமியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆகவே ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகிவிட்டது. சாமி என்பது பூமியில் மட்டும் உள்ள ஒன்று. பூமியிலும் கூட எல்லா உயிர்களுக்கும் தேவையற்ற ஒன்று.
மனிதனோடு மட்டுமே தொடர்புடையது சாமி. மனிதனுக்கு மட்டுமே தேவைப்படுகின்ற ஒன்று. மனிதன் மட்டுமே கும்பிடுகிற ஒன்று. மனிதன் மட்டுமே தொழுகின்ற ஒன்று. மனிதன் மட்டுமே தோப்புக்கரணம் போடுகிற ஒன்று. மனிதன் மட்டுமே முழந்தாள் போட்டு வணங்குகின்ற ஒன்று. குட்டிக்கரணம் போடும் குரங்குகள் கூட சாமி முன்னால் தோப்புக்கரணம் போடுவதில்லை. ஆகவே கடவுளை நாம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக்கக் கூடாது. சும்மா சாமி, கடவுள் என்று சொல்லக்கூடாது. மனிதனின் கடவுள், மனிதனின் சாமி என்றுதான் அழைக்க வேண்டும். சரிதானே?
சரி.. அடுத்த கேள்விக்குப் போகலாம்.
பூமியில் சாமி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறதா?
பூமி பிறந்து 450 கோடி வருடங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து சாமி இல்லை. மனிதன் பிறந்து சில லட்சம் வருடங்களே ஆகின்றன. அதிலும் இப்போதுள்ள நட்டமாக கை வீசி நடக்கும் மனிதன் தோன்றி ஒன்றரை லட்சம் வருடங்கள் தான் ஆகின்றன. புதைபொருள் ஆராய்ச்சிகள் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலாளர் கண்டது என்ன? சாமிகள், கோவில், குளங்கள் எல்லாம் இப்பூமிக்கு வந்து சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன என்பதுதான். கிறிஸ்து பிறந்தே 2012 வருடங்கள்தான் ஆகின்றன. ஆகவே பூமியில் சாமியை விட சீனியர் மனிதன் தானே? அது ஒருபக்கம் இருக்கட்டும்.
பிரபஞ்சத்தில் யாருக்குமே தேவைப்படாத சாமி, மனிதனுக்கு மட்டும் ஏன் தேவைப்பட்டது? எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக ஒரே சாமி இல்லையே ஏன்? நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் இத்தனை சாமிகள் ஏன் வந்தன? எப்படி வந்தன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டும். சில சாமிகளின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்ட வரலாற்றைத் தெரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை தெரியும்.
அப்புறம் சாமியின் மரணம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? மக்கள் விடாமல் கும்பிடும் வரைதான் அந்தச் சாமிக்கு வாழ்க்கை இருப்பதாகக் கூற முடியும். மக்கள்கண்டுக்காம விட்டுவிட்டால் அந்த சாமியின் கதை அதோடு முடிந்துவிடும்.
தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண் தெய்வம் இருந்தது. ஊரெல்லாம் அதற்காகக் கோவில்கள் இருந்தன. காமக் கோட்டங்கள் எனப்பட்ட பெண் தெய்வக் கோவில்கள் இருந்தன. இப்போது கொற்றவையை யாரும் கும்பிடுவதில்லை. உங்களில் யாருக்கும் அப்படி ஒரு சாமி இருந்தது என்றே தெரியாதல்லவா? பூமியிலும் கொற்றவை கோவில்கள் காணாமல் போய்விட்டன. தமிழ்நாட்டு மக்களின் மனங்களிலும் கொற்றவை இப்போது வாழவில்லை. சாமிகள் இருக்கும் இடம் ரெண்டுதானே. ஒன்று கோவில், இன்னொன்று மனித மனம். இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் போன சாமிகளைத்தான் நாம் செத்துப்போன சாமிகள் என்று சொல்கிறோம். இப்படிச் செத்துப் போன கடவுள்களும் சாமிகளும் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நிறைய உண்டு. சாமிகள் வரும், போகும் மனிதன் தான் இருந்துகொண்டே இருக்கிறான்.
சில சாமிகள் இப்படி சுத்தமாக செத்துப் போகும். இன்னும் சில சாமிகள் அரை உயிராக இழுத்துக் கொண்டு கிடக்கும். சில சாமிகள் மனித மனதில் மட்டும் இருக்கும். சில கோவிலில் மட்டும் இருக்கும். சில சாமிகள் சில ஊர்களில் மட்டும் இருக்கும். சில தெய்வங்கள் ஒரு மாவட்டத்தில் மட்டும் இருக்கும். சரஸ்வதி என்றொரு சாமியை இந்துக்குடும்பங்களில் கும்பிடுவார்கள். சரஸ்வதி பூஜை என்று ஒருநாள் வரும். அன்று மட்டும் எல்லோரும் புத்தகங்களை அடுக்கி வைத்து சரஸ்வதி போட்டோவை மேலே வைத்துக் கும்பிடுவார்கள். இது ஒருநாள் வாழும் சாமி. சரஸ்வதி கோயில் என்று எங்காவது பார்த்திருக்கிறீர்களா? கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களிலும் போட்டோக்களிலும் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்று ஒரு பெண்சாமி உண்டு.திருப்பரங்குன்றத்திலும் நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் என்கிற ஊரிலும் அந்த சாமிக்கு கோவில் உண்டு. வண்ணார் சமூகம் தவிர வேறுயாரும் அதை வணங்குவது இல்லை.
இப்படி வாழ்ந்தும் வாழாமலும் இருந்தும் இல்லாமலும் செத்தும் சாகாமலும் பல சாமிகள் இருக்கின்றன. ஆனால் சாமிதான் நம்மைக் காப்பாத்தும். சாமி கண்ணைக் கெடுத்திடும் என்று மனிதர்கள் நம்புகிறார்கள்.
கொசுக்களைப் போல ஈக்களைப் போல விலங்குகள் போல பறவைகள் போலவே பிறந்து குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து பின்னர் மடிந்தும் போகிற சாமிகள் மனித மனங்களை இந்த ஆட்டு ஆட்டுவது எப்படி? ஏற்கனவே உள்ள சாமிகள் போக புதுசாக இப்போதும் சாமிகள் பிறக்கின்றனவா? சாமிகளுக்கு அப்பா அம்மா யார்?...ச.தமிழ்ச்செல்வன்
அடுத்த இதழில்...
எத்தனை எத்தனை சாமிய  http://www.periyarpinju.com/new/jan2012/566-high-court-news-school-news.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக