வெள்ளி, 14 செப்டம்பர், 2012

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு மத்திய அரசு அதிரடி

 Government Clears Fdi Multi Brand Retail டெல்லி: கூட்டணிக் கட்சிகள், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்று அதிரடியாக அனுமதி வழங்கியது.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் வணிகர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மேலும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. ஒற்றை பிராண்டை விற்கும் நிறுவனங்களில் மட்டும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டது.
இந் நிலையில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சரான பிறகு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுங்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு, சமையல் கேஸுக்கான மானியக் கட்டுப்பாடு ஆகியவற்றை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இன்று அடுத்த அதிரடி அறிவிப்பைச் செய்துள்ளது மத்திய அரசு.
இதையடுத்து பெரும் போராட்டங்களை நாடு சந்திக்கும் என்று தெரிகிறது.
சிறு வணிகத்தில் அன்னிய முதலீடுகள் மூலம் பொருளாதார சீரழிவு என்ற ஒரு பிரமாண்டமான சுனாமியைச் சந்தித்துத் தீர வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பு எச்சரித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில் வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை நம் ஊர் கடைகளை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மெட்ரோ நிறுவனம் தனது ஸ்டோர்களை இந்தியாவில் நடத்தி வந்தாலும் சில்லறை வணிகம் செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வணிகர்களுக்கு மட்டுமே (வர்த்தக வரி செலுத்துவோர்) பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இப்போதைய மத்திய அரசின் முடிவின் மூலம் மெட்ரோ ஸ்டோர்களில் பொது மக்களும் கூட பொருட்களை வாங்க முடியும்.
விமானத்துறையிலும் அன்னிய முதலீட்டு அனுமதி:
அதே போல இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும்.
இது திவால் நிலையில் உள்ள கிங்பிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு பெரும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக