சனி, 22 செப்டம்பர், 2012

இலங்கையில் பெரிய அகதிகள் முகாம் மூடப்படுகிறது! அடுத்த பெரிய முகாம், தமிழகத்தில்!

Viruvirupu,
இலங்கையின் மிகப்பெரிய அகதிகள் முகாமான வவுனியா மனிக்பாம் முகாம், இந்த மாத இறுதியில் மூடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்பின், அதிகளவு தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் இதுதான். 2009-ம் ஆண்டு இந்த முகாமில் மூன்று லட்சம் அகதிகள் வரை தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குணரட்ன விஜயக்கோன், “வவுனியா மனிக்பாம் முகாமில் இருந்தவர்கள் பகுதி பகுதியாக தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது இறுதியான 1185 பேர் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும், அடுத்த வாரத்தில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர்.
அதையடுத்து இந்த முகாம் நிரந்தரமாக மூடப்படவுள்ளது.
தற்போது, இலங்கைத் தமிழர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் இலங்கையில் கிடையாது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலேயே, அதிகளவு இலங்கை தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பின் தகவல்படி, வவுனியா மனிக்பாம் முகாமில் இறுதியாக தங்க வைக்கப்பட்டுள்ள  1185 பேரும், அலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் அடுத்த வாரம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் மீள் குடியேற்றப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், தமது சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்” என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் முதல், இலங்கை தமிழர்களுக்கான அளவில் பெரிய அகதிகள் முகாம் அமைந்திருக்கப் போவது தமிழகத்தில்தான் என்று இலங்கை அமைச்சர் சொல்கிறார்.
அப்படியானால்,  “அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், தமது சொந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும்” என்று இனி குறிப்பிட்டால், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை குறிக்கும் என்று  அர்த்தம் வர போகிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக