சனி, 22 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் தனிச் சிறப்பு கொண்டதாகும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் எரிபொருளை நிரப்பும் பணி தொடங்கி விட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் கூடங்குளத்தில் ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி அணுக்கள் உடைபட இருக்கின்றன.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலை( Nuclear Reactor) செயல்பட ஆரம்பித்ததும் இது நிகழும்http://www.ariviyal.in/.
அணுக்களை உடைக்கப்போவது அணு மின் நிலைய விஞ்ஞானிகள் அல்லது எஞ்சினியர்கள் அல்ல. அவர்கள் தொடக்கி வைத்த பின்னர் அணு உலையில் அணுக்கள் தாமாகவே இந்த உடைப்பு வேலையை மேற்கொள்ளும்.இது ஓயாது நடைபெறும்.  விஞ்ஞானிகள் இதைத் தொடர் அணுப்பிளப்பு (Nuclear Chain Reaction)  என்று கூறுவர்.அணு சக்தி மூலமான மின்சார உற்பத்திக்கு இதுவே அடிப்படை.
கூடங்குளம் அணு மின்சார நிலையம்

அணுக்கள் தொடர்ந்து பிளவுபடும் போது வெப்ப வடிவில் ஆற்றல் வெளிப்படும். இந்த வெப்பம் தண்ணீரை ஆவியாக்கி நீராவியை உண்டாக்கும். இந்த நீராவி ட்ர்பைன்களை இயக்கும். அதன் பலனாக ஜெனரேட்டர்கள் இயங்கும். ஜெனரேட்டர்கள் இயங்கும் போது மின்சாரம் உற்பத்தி ஆகும்.

தங்க அணு, தாமிர அணு, இரும்பு அணு என எவ்வளவோ வகையான அணுக்கள் உள்ளன. அவற்றை இப்படிப் பிளக்க முடியுமா? அவற்றின் மூலம் மின்சார உற்பத்தி சாத்தியமா?

நிச்சயம் இல்லை.பொதுவில் இதற்கு யுரேனிய அணுக்கள் மட்டுமே லாயக்கு.ஆகவே தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா அணுமின் நிலையங்களிலும் தான்.

யுரேனியம் விஷயத்திலும் ஒரு பிரச்சினை உள்ளது. எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் யுரேனியம்- 235 என்ற வகை அணுக்கள் உள்ளன. அவை தான் தொடர்ந்து பிளவுபடக்கூடியவை.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் 0.71 சத விகித அளவுக்கே உள்ளன. அதாவது மிக அற்ப அளவில் தான் உள்ளன. ஆனாலும் அது போதும். எனினும் கூடங்குளத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் இந்த வகை அணுக்கள் சத விகித அளவில் கூடுதலாக்வே இருக்கும்.

யுரேனியம்-235 அணுக்கள் எப்படி தாமாக பிளவுப்டுகின்றன? எந்த அணுவிலும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருப்பது நமக்குத் தெரியும். இவற்றில் நியூட்ரான் என்பது. துப்பாக்கித் தோட்டா மாதிரி. யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடைந்து போய்விடும். அதை அப்படி உடைப்பதற்கு . நியூட்ரான் எங்கிருந்து வரும்? அதே போன்ற இன்னொரு யுரேனியம் அணுவிலிருந்து வரும்.
தொடர் அணுப் பிளப்பு
பழக்கடை ஒன்றில் பெரிய கூடையில் ஆப்பிள்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இலந்தைப் பழம் ஒன்றை அந்த ஆப்பிள்களை நோக்கி வீசுகிறீர்கள். அது மெதுவாகச் சென்று லேசாக ஓர் ஆப்பிளைத் தாக்குகிறது. அந்த ஆப்பிள் கீழே விழுந்ததும் அது திராட்சைப் பழங்களாகவும் அத்திப் பழங்களாகவும் மாறுகிறது.

யுரேனியம்-235 அணுவை ஒரு நியூட்ரான் மெதுவாகத் தாக்கினால் இப்படித் தான் நிகழ்கிறது. யுரேனியம்-235 அணு உடைந்து பல்வேறு வகை அணுக்களாக மாறுகிறது. அப்போது ஒவ்வோர் அணுவிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் தோன்றுகின்றன.

அந்த ஒவ்வொன்றும் மேலும் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க வல்லவை. அப்போது மேலும் நியூட்ரான்கள் தோன்றும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நொடியில் எண்ணற்ற யுரேனியம்- 235 அணுக்கள் பிளவு படும். எனினும் நமது தேவை அனைத்தும் ஒரே கணத்தில் பிளவு பட வேண்டும் என்பது அல்ல.

நாம் மேலே கூறிய ஆப்பிள் கூடை உதாரணத்தில் இலந்தைப் பழம் தான் நியூட்ரான். இலந்தைப் பழம் தாக்கிய பிறகு தோன்றும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் சேர்த்து எடை போடுங்கள். அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிள் ஒன்றின் எடைக்கு சமமாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிளின் எடையை விடக் குறைவாகவே இருக்கும்..காணாமல் போன எடையானது ஆற்றலாக மாறிவிடுகிறது. அணுசக்தியின் ரகசியமே இது தான்.

பொருளானது அப்படியே ஆற்றலாக மாறும் போது மிகுந்த ஆற்றல் தோன்றும் என்று ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார். அதைத் தான் அவர் சுருக்கமாக E = mc2
 என்று கூறினார். யுரேனியம்-235 அணு உடையும் போது இவ்விதமாகப் பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அணுவே சிறியது. நியூட்ரான் அதையும் விடச் சிறியது. அதையும் விட சிறிய துணுக்கு தான் ஆற்றலாக மாறுகிறது.

ஆனால் தொடர்ந்து எண்ணற்ற யுரேனியம்-235 அணுக்கள் பிளவு படும் போது மொத்தத்தில் நிறைய ஆற்றல் தோன்றும். யுரேனியம்-235 அணுக்கள் மட்டுமே அடங்கிய ஒரு கிராம் யுரேனியத்தில் கோடானு கோடி அணுக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது நிறையவே ஆற்றல் உறபத்தியாகும். ( 26 என்று எழுதி விட்டு 19 பூஜ்யங்களைப் போடுங்கள்.ஒரு கிராமில் அவ்வளவு யுரேனியம்-235 அணுக்கள் இருக்கும்)

ஐம்பது காசு எனபது பெரிய பணம் அல்ல. பிச்சைக்காரருக்கு ஐம்பது காசு போட்டால் உங்களைக் கேவலமாகவே கருதுவார். ஆனால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் ஒருவரிடம் தலா  ஐம்பது காசு கொடுத்தால் அது பெரும் தொகையாகி விடும். அப்படியாகத்தான் கோடானுகோடி அணுக்கள் உடைபடும் போது பிரும்மாண்டமான ஆற்றல் வெளிப்படுகிறது.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் அடங்கிய யுரேனியத்தில் அனைத்து அணுக்களும் யுரேனியம்- 235 அணுக்களாக இராது. சுமார் 4 சதவிகித அணுக்கள் இவ்விதமாக இருக்கும்.

சாதாரண யுரேனியக் கட்டியில் 0.71 சதவிகித அணுக்களே யுரேனியம்- 235 அணுக்களாக இருக்கும் என்று கூறினோம். பெரும் செலவு பிடிக்கிற, மிக சங்க்டமான, மிக நுட்பமான முறைகள் மூலம் விசேஷ ஆலைகளில் இதை 4 சதவிகித அளவுக்கு உயர்த்த முடியும். இதை செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம் (Enriched Uranium)  என்று கூறுவர்.(காண்க. செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம்)

செறிவேற்ற்பபட்ட யுரேனியத்தை அணு உலைக்குள் அப்படியே கட்டி கட்டியாக வைப்பது கிடையாது. பொதுவில் அணு உலைக்குள் வைக்க வேண்டிய் யுரேனியத்தை சந்தன வில்லைகள் போல வில்லைகளாக்குவர். பின்னர் சுமார் 3 மீட்டர் நீளமுள்ள் குழல்களில் அவற்றை நிரப்புவர். ஒரு குழலில் சுமார் 350 வில்லைகள் இருக்கலாம்.
எரிபொருள் தண்டுகள்
பிறகு பல நூறு குழல்களை குறிப்பிட்ட பாணியில் பக்கம் பக்கமாக அடுக்கி வைப்பர். இதற்கெல்லாம் கணக்கு உள்ளது. இவற்றை எரிபொருள் தண்டுகள் (Fuel Rods) என்று குறிப்பிடலாம். கூடங்குளத்தில் மொத்தம் 311 எரிபொருள் தண்டுகள் ( 163 கட்டுகள்)  இருக்கும். இந்த தண்டுகளைச் சுற்றிலும் தண்ணீர் இருக்கும். இது தான் அணு உலை. 

இக்குழல்களை இப்படி அடுக்கி வைத்ததைத் தொடர்ந்து நியூட்ரான்கள் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க ஆரம்பிக்கும். அப்படி இல்லை எனில் விஞ்ஞானிகளே . நியூட்ரான்களை வெளிப்படுத்தும் பொருளை சிறிது நேரம் வைத்து விட்டு தொடர் அணுப்பிளப்பைத் தொடக்கி வைப்பர். ஓர் அணு உலை முதன் முதலாக, தொடர் அணுப்பிளப்பு நிலையை எட்டுவதை கிரிடிகாலிடி (Criticality) என்று குறிப்பிடுவர்.  எரிபொருள் தண்டுகளை அடுக்கி வைத்து முடித்த பின்னர் இக்கட்டம் எட்டப்படும்.

தொடர் அணுப்பிளப்பு ஆரம்பித்த உடனேயே வெப்பம் வெளிப்பட ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டால் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே அந்த வெப்பத்தை வாங்கிக் கொள்வதற்காகத்தான் எரிபொருள் தண்டுகளைச் சுற்றிலும்  தண்ணீர் இருக்கிறது..

வீடுகளில் காஸ் அடுப்பில் எவர்சில்வர் பாத்திரத்தை . வைத்தால் அதில் தண்ணீர் இருக்கும்..அப்படியின்றி வெறும் பாத்திரத்தை வைத்து விட்டு மற்தியாக அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்? பாத்திரம் பயங்கரமாகச் சூடேறி த்க தக என்று அனல் பிழம்பாகக் காட்சி அளிக்கும். அப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அடுப்பில் த்ண்ணீருடன் தான் பாத்திரத்தை வைப்பார்கள்.
அணு மின்சார நிலையத்தின் செயல்பாட்டை விளக்கும் வரைபடம்
அது மாதிரியில் அணு உலையில் எரிபொருள் தண்டுகளைச் சுற்றித் தண்ணீர் இருக்கும். தண்ணீரானது பயங்கரமாகச் சூடேறும். எனினும் தண்ணீர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் என்பதால் ஆவியாகாமல் கடும் வெப்பத்தில் இருக்கும். ஒரு புறத்திலிருந்து அணு உலைக்குத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். சூடேறிய தண்ணீர் அணு உலையிலிருந்து வேறு பகுதிக்குச் சென்று கொண்டே இருக்கும்..அணு உலை ஒன்றுக்கு மிக ஏராளமான அளவுக்குத் த்ண்ணீர் தேவை.

கடுமையாகச் சூடேறிய தண்ணீர் வேறு பகுதிக்கு குழாய் மூலம் செல்லும். அணு உலையிலிருந்து வருவதால் அது ஆபத்தான கதிரியக்கம் கொண்டதாக இருக்கும். ஆகவே அத் தண்ணீரானது வேறு பகுதியில் வேறு குழாயின் ஊடே செல்லும். அப்போது வேறு குழாயில் அடங்கிய தண்ணீர் சூடேறிப் பின்னர் ஆவியாகி டர்பைன்களை இயக்கும்.கதிரியக்கம் கொண்ட தண்ணீர் வேறு குழாயில் உள்ள தண்ணீருடன் கலக்காமல் மறுபடி அணு உலைக்கே திரும்பிவிடும்.

எரிபொருள் தண்டுகளைச் சுற்றியுள்ள தண்ணீர் இருவகைப் பணிகளைப் புரிகிறது. இத்தண்ணீர் எரிபொருள் தண்டுகளின் வெப்பத்தை வாங்கிக் கொள்கிறது.அந்த அள்வில் அது எரிபொருள் தண்டுகள் அளவுக்கு மீறி சூடேறி விடாதபடி தடுக்கிறது. அதே சமயத்தில் யுரேனியம்=235 அணுக்கள் பிளவு படும் போது வெளிப்படும் நியூட்ரான்களின் வேகத்தை அத்தண்ணீர் குறைக்கிறது.ஏனெனில் மெதுவாகச் செல்கின்ற நியூட்ரான்கள் தான் பிற யுரேனியம் அணுக்களை நன்கு தாக்கும்.

 நியூட்ரான்கள் விஷய்த்தில் ஜாக்கிரதை தேவை. காஸ் அடுப்பில் காஸ் கட்டுப்பட்ட அளவில் சிலிண்டரிலிருந்து வெளியே வருவதால் சமையல் சாத்தியமாகிறது. காஸ் சிலிண்டரில் உள்ள காஸ் அனைத்தும் ஒரே சமயத்தில் தீப்பிடித்தால் ஆபத்து தான்.அது மாதிரி ஏற்படாமல் அணு உலையில் நியூட்ரான்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி வைத்தாக வேண்டும்.
யுரேனிய அணு
யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் சராசரியாக மூன்று நியூட்ரான்கள் .கூட வெளிப்படலாம். அவ்வளவு நியூட்ரான்கள் தேவையில்லை. அந்த மூன்றில் ஒரு நியூட்ரான் போதும். அதாவது யுரேனியம்-235 அணுவை ஒரு நியூட்ரான் தாக்க,  அதிலிருந்து . வெளிப்படும் மூன்று நியூட்ரான்களில் நமக்கு ஒன்று இருந்தால் போதும். ஆனால் மீதி நியூட்ரான்களை வெளியே போ என்று உத்தரவிட முடியாது. அவை செயல்படாதபடி தடுக்க வழி இருக்கிறது.

நியூட்ரான்களை நேசிக்கும் தனிமங்கள் . உண்டு. காட்மியம், ஹாப்னியம், போரான் ஆகியவை நியூட்ரான்களை விழுங்குபவை. ஆகவே இவற்றால் ஆன தண்டுகளை அணு உலைக்குள் தொங்க விட்டிருப்பார்கள்.   இரவில் டியூப் லைட் அருகே வருகின்ற பூச்சிகளை விழுங்கும் பல்லி போல இத்தண்டுகள் கூடுதல் நியூட்ரான்களை விழுங்கிக் கொண்டிருக்கும்.இவற்றுக்குக் கட்டுப்பாட்டு தண்டுகள் (Control Rods) என்று பெயர்

கட்டுப்பாட்டு தண்டுகளை அணு உலைக்குள் மேலும் ஆழமாக இறக்கினால் நிறைய நியூட்ரான்கள் விழுங்கப்படும். மேலே அதிகம் இழுத்தால் நியூட்ரான்கள் விழுங்கப்படுவது குறையும்.ஆகவே இத்தண்டுகளை அணு உலைக்குள் தகுந்தபடி இற்க்குவர் அல்லது மேலே தூக்குவர்.இதன் மூலம்  தொடர் அணுப்பிளப்பு நிர்ணய அளவில் நடைபெறும்.

தொடர் அணுப்பிளப்பை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதாவது அணு உலை செயல்படாமல் நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அத்தனை கட்டுப்பாட்டு தண்டுகளையும் உள்ளே இறக்கினால் போதும். அணு உலை செயல்படுவது நின்று விடும். எரிபொருள் தண்டுகளில் பலவற்றை அவ்வப்போது வெளியே எடுத்து விட்டு புதிதாக எரிபொருள் தண்டுகளை உள்ளே இறக்குவர். அப்படிப்பட்ட சமயங்களில் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டி வரும்.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்பதை மேலே குறிப்பிட்டோம். அத்துடன் ஒப்பிட்டால் இயற்கை யுரேனியத்தில் 99.27 சதவிகித அளவுக்கு யுரேனியம்-238 என்ற வேறு வகை அணுக்களும் இருக்கும்.

கூடங்குளம் அணு உலையின் எரிபொருள் தண்டுகளில் மொத்தத்தில் 4 சதவிகித அணுக்கள் யுரேனியம்- 235 அணுக்களாக இருக்க மீதி அணுக்களில் பெரும்பாலானவை யுரேனியம்-238 அணுக்களாக இருக்கும்.

ஆனால் யுரேனியம்-238 அணு ஒன்றை நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடையாது.  அது அந்த நியூட்ரானை விழுங்கி ஏப்பம் விடும். அப்படி விழுங்கிய பின்னர் அது புளூட்டோனியம்-239 என்ற அணுவாக மாறிவிடும். அது நல்லது தான். ஏனெனில் புளூட்டோனியம் அணுவானது யுரேனியம்- 235 அணு போலவே நியூட்ரான்களால் பிளவு படத்தக்கது.

ஆகவே அணு உலை ஒன்றில் தொடர்ந்து அணுபிளப்பு ஏற்படும் போது யுரேனியம்-235 அணுக்களும் உடையும். புதிதாகத் தோன்றும் புளூட்டோனியம்- 239 அணுக்களும் உடையும்.அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம்-239 பிளவு மூலம் கிடைக்கிறது.

இதுவரை நாம் யுரேனியம் அணுக்களுக்கும், அத்துடன் புளூட்டோனியத்துக்கும் நம்பர் கொடுத்து வந்தோம். அந்த நம்பரானது ஒரு வீட்டில் ஆண் பெண் மொத்தம் எவ்வளவு பேர் என வாசற் கதவில் எழுதி வைப்பது போன்றதாகும்.

எந்த ஓர் அணுவாக இருந்தாலும் அதன் மையக் கருவில் (Nucleus) புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து இருக்கும். யுரேனியக் கட்டி ஒன்றில் இருக்கக்கூடிய கோடானு கோடி யுரேனிய அணுக்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சரியாக 92 புரோட்டான்கள் இருக்கும். அப்ப்டி 92 புரோட்டான் இருப்பதால் தான் அது யுரேனியம் அணுவாக உள்ளது.

ஆனால் யுரேனியம் அணு ஒன்றின் மையக் கருவில் 143 நியூட்ரான்கள் இருக்கலாம். வேறு யுரேனிய அணுவில் 146  நியூட்ரான்கள் இருக்கலாம். 143 நியூட்ரான்கள் இருந்தால் அத்துடன் 92 ஐயும் சேர்த்துக் கூட்டி யுரேனியம்-235 என்று சொல்வார்கள். 146 நியூட்ரான்கள் இருந்தால் 92 புரோட்டான்களையும் சேர்த்து அது யுரேனியம்-238

அதே போலவே புளூட்டோனியம் அணுவின் 94 புரோட்டான்களையும் 145 நியூட்ரான்களையும் சேர்த்தால் அது புளூட்டோனியம்-239. யுரேனியம் போல புளூட்டோனியமும் ஓர் உலோகமே. 

கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணு உலையானது VVER- 1000  மாடல் என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காலும் மற்றும் பிற நாடுகளிலும் இதே மாதிரியான அணு உலைகள் PWR மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்தியாவில் தாராப்பூர் நீங்கலாக மற்ற இடங்களில் செயல்படும் அணுமின் நிலையங்களின் அணு உலைகள் PHWR  மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.
கல்பாக்கத்தில் உள்ள அணுமின்சார நிலையத்தின் அணு உலைகளும் இதே மாடல்களே.

PWR  மாடல்களில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படும்.சாதாரண நீரானது வெப்பவாங்கியாகவும் நியூட்ரான்களின் வேகத் தணிப்பனாகவும் பயன்படுத்தப்படும்

PWHR  மாடல்களில் இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படும். சாதாரண நீருக்குப் பதில் கன நீர் பயன்படுத்தப்படும்.(காண்க பச்ச்த் தண்ணீரும் லகு நீரும்)

கூடங்குளம் அணுமின் நிலையம் தனிச் சிறப்பு கொண்டதாகும்.இனி இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக விளங்கும். இப்போதைக்கு கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு யூனிட்டுகள் நிறுவப்படுகின்றன.

முதல் யூனிட் விரைவில் இயங்க இருக்கிறது.இரண்டாவது யூனிட் சில மாதங்களில் செயல்பட ஆரம்பிக்கும். இவை அல்லாமல் மேலும் இரு யூனிட்டுகளை அமைக்க அண்மையில் உடனபாடு கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி இங்கு மொத்தம் 6 யூனிட்டுகள் அமைக்கப்படுமானால்  மொத்தம் 6680 மெகாவாட் மின்சாரம் இங்கு உறபத்தியாகும்.

இத்துடன் ஒப்பிட்டால் உலகிலேயே மிகப் பெரிய அணுமின் நிலையம் ஜப்பானில் உள்ளது. காஷிவாசாகி-கரிவா என்னும் அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஏழு யூனிட்டுகள் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக