புதன், 5 செப்டம்பர், 2012

நெடுமாறன் சொல்வது பொய்! பாலசிங்கமே சொன்னரே! தி.மு.க. விடுவதாக இல்லை!

 எம்.ஜி.ஆர். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல’ என, அன்று புலிகள் அமைப்பு முடிவெடுத்தது
Viruvirupu
“1983-ம் ஆண்டுகளில் ஈழ போராளி இயக்கங்களுக்குள் பிரச்சினைகளையும், கருத்து மோதல்களையும் உருவாக்கியவரே கருணாநிதிதான்” பழ. நெடுமாறன் கூறியதில், உண்மை எத்தனை சதவீதம் உள்ளது என்பது, இந்த விவகாரங்களுடன் பரிச்சயமானவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், எதுவும் சொல்வதில்லை. “ஏதோ, ஐயா சொல்கிறார். சொல்லிவிட்டு போகட்டும். இதனால் டேமேஜ் ஏதும் ஆகப் போவதில்லை” என்று இருந்து விடுவார்கள்.

காரணம், இவர் குறிப்பிடும் ஐந்து ஈழ போராளி இயக்க தலைவர்களில் நால்வர் நிச்சயமாக கொல்லப்பட்டு விட்டார்கள்.
உமா மகேஸ்வரன், உள்விவகாரம் ஒன்றில் கொல்லப்பட்டார். ஸ்ரீ சபாரத்னம், பத்மநாமா ஆகியோர் பிரபாகரனின் உத்தரவின்பேரில் கொல்லப்பட்டனர். பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். பாலகுமார் உயிருடன் உள்ளாரா, இல்லையா தெரியாது.
இதனால் 2012-ல் நெடுமாறன், “1983-ம் ஆண்டுகளில் ஈழ போராளி இயக்கங்களுக்குள் பிரச்சினைகளையும், கருத்து மோதல்களையும் உருவாக்கியவரே கருணாநிதிதான்” என்று கூறுவதற்கு யாரும் பதில் கூறவில்லை.
பிரபாகரன், கருணாநிதியின் சொல் கேட்டு, சக விடுதலை இயக்க தலைவர்களை பகைத்து கொண்டு, கொலை செய்யும் அளவுக்கு போனார் என்பதை ஏற்றுக் கொண்டால், “பிரபாகரன் அவ்வளவுதானா?” என்ற கேள்வி எழும். “பிரபாகரனையே கன்வின்ஸ் செய்து சக தலைவர்களை கொலை செய்ய வைக்கும் அளவுக்கு, கருணாநிதி வல்லவரா?” என்ற ஆச்சரியமும் எழும் என்பதால், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள்கூட, நெடுமாறனின் பேச்சுக்கு பொழிப்புரை ஏதும் சொல்லவில்லை.
ஆனால், தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதில் கூறியுள்ளார்.
நெடுமாறன், 1983-ம் ஆண்டுகளில் ஈழ போராளி இயக்கங்களுக்குள் பிரச்சினைகளையும், கருத்து மோதல்களையும் உருவாக்கியவரே கருணாநிதிதான் என்று 2012-ல் சொல்கிறார். நெடுமாறனுக்கு இது நேற்றுதான் தெரிந்ததா?
கலைஞர், பேராசிரியர், கி.வீரமணி, அய்யணன் அம்பலம் ஆகியோரோடு சேர்ந்து டெசோவை உருவாக்கியவர்களில் ஒருவர் பழ.நெடுமாறன். கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை ஆகிய ஊர்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களின் பங்களிப்பை மேடையில் நின்று பார்த்தபோது, நெடுமாறனுக்கு அது தெரியாதா?
ஈழத் தமிழர் துயர் துடைக்கப்பட வேண்டுமானால் அங்கு ஆயுதம் தாங்கிப் போராடும் அனைத்துப் போராளி இயக்கங்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று கலைஞர் நினைத்தார். அனைத்து அமைப்புகளுக்கும்தான் அழைப்பு விடுத்தார். புலிகள் இயக்கம் அழைப்பை ஏற்கவில்லை. ஏற்காமல் போனதற்கான காரணத்தை திரு.பாலசிங்கம் (புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர்) அவர்களே எழுதி உள்ளார். ‘அன்றைக்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களைப் பகைத்துக் கொள்வது நல்லதல்ல’ என, அன்று புலிகள் அமைப்பு முடிவெடுத்தது என்பதுதான் உண்மை.
மதுரை டெசோ மாநாட்டுக்கு அனைத்துப் போராளிகள் அமைப்புடன் புலிகளும் பங்கேற்றனர். தலைவர் கலைஞர் தனது பிறந்த நாளையட்டி திரட்டிய நிதியை அனைத்து இயக்கங்களுடன் சேர்த்து புலிகளுக்கும்தான் பிரித்துக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்காகப் புலிகளுக்கு அவர் மறுக்கவில்லை. புலிகள் அமைப்பு அந்த நிதியைப் பெற விரும்பவில்லை. இத்தகைய உண்மைகள் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது என்பதால் நெடுமாறன் போன்றவர்களால் பொய்கள் புனையப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார், தி.மு.க. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு நெடுமாறன் ஏதாவது பதில் கூறத்தானே வேண்டும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக