சனி, 1 செப்டம்பர், 2012

முகமூடி - நம்ம ஊரு சூப்பர் ஹீரோ!


இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே,நாசர், செல்வா நடித்து இன்று(31.08.12) வெளிவந்திருக்கும் படம் ’முகமூடி’. தமிழில் வெளியாகும் முதல் சூப்பர் ஹீரோ படம் என்ற பெருமையுடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் இன்று திரையரங்குகளில் முகமூடி அரங்கேறியது.
ஒரு குங்ஃபூ மாணவனான ஜீவா தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ப்ரூஸ் லீ மாதிரி வரவேண்டும் என்ற ஆசையுடன் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எந்த வேலைக்கும் போகாததால் தனது தந்தையிடம் ”ஊதாரித்தனமா ஊர் சுத்துறியே தண்ட சோறு” போன்ற அர்ச்சனைகளுடன் தனது குறிக்கோளில் நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் ஜீவா. ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக வரும் செல்வா இலவசமாக குங்ஃபூ சொல்லித் தருவதால் தனது இடத்திற்கு வாடகை கொடுக்கமுடியாமல் கஷ்டப்படும் போது ஜீவா அவருக்கு உதவிகள் செய்து வருகிறார்.தேவதை போன்ற பூஜா ஹெக்டேவை பார்த்ததும் வழக்கம் போல நமது ஹீரோ காதலில் விழுகிறார்.
பூஜா ஹெக்டேவின் தந்தையான நாசர் சென்னையில் தொடர்ந்து கொள்ளையடித்துவரும் கும்பலைப் பிடிக்க புதிதாக நியமிக்கப்படுகிறார். தனது காதலியான பூஜா ஹெக்டேவை மயக்க சூப்பர்மேன் மாதிரியான உடையணிந்து வந்து ஹீரோயின் வீட்டின் முன் நிற்கிறார்.>அப்போது கொள்ளையடித்துவிட்டு போலீஸிடமிருந்து தப்பியோடி வரும் கொள்ளையனை  ஜீவா பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கும் போது முகமூடியாக பொதுமக்களிடம் அறிமுகமாகிறார்.வில்லனின் கோவத்தால் நாசர் தாக்கப்படுகிறார். அந்த பழி ஜீவா மீது சுமத்தப்படுகிறது. ஜீவா தான் நாசரை தாக்கியிருப்பார் என அனைவரும் நம்பிவிட, அதே நேரத்தில் ஜீவாவின் நண்பனும் கொலை செய்யப்படுவது ஜீவாவை மிகவும் பாதிக்கிறது.வில்லனான நரேனுக்கும், தனது மாஸ்டர் செல்வாவுக்கும் பழைய பகை இருப்பது பிளாஷ்பாக்கில் தெரியவர நண்பனைக் கொலை செய்தவர்களையும், மாஸ்டரின் எதிரியை பழிவாங்கவும், விசித்திர உடைகள் தயாரிக்கும் தனது தாத்தாவின் உதவியுடன் முகமூடி எனும் சூப்பர் ஹீரோ பிறக்கிறான்.கோமாவில் இருந்த நாசர் திரும்பி வந்து முகமூடி வந்தால் தான் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கமுடியும் என ஜீவாவிற்கு அழைப்பு விடுப்பது, பூஜா ஹெக்டே கடத்தப்படுவது, மாஸ்டர் செல்வாவின் கொலை என பல திடீர் திருப்பங்களுடன் கதை நகர்கிறது. ஜீவா கொள்ளையர்களை பிடித்து, தன் மாஸ்டருக்காக கொள்ளையர்கள் கூட்டத் தலைவனை பழிவாங்கி, ஹீரோயினை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கிளைமேக்ஸ்.இயக்குனர் மிஸ்கினின்  கட் இல்லாத நீளமான காட்சி, குறைந்த அளவிலான ஒளியை பயன்படுத்தும் காட்சிகள், ஸ்டைலான ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு கைகொடுத்துள்ளன. ஜீவாவை உபயோகிக்க வேண்டிய விதத்தில் உபயோகித்திருக்கிறார் மிஸ்கின். காதல் மற்றும் சண்டை காட்சிகளில் ஜீவா பிரமாதம். 


நடிகை பூஜா ஹெக்டே நல்ல அழகு. ஜீவாவை அடிக்கும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.நரேனின் வில்லன் கேரக்டர் பேசப்படும் என மிஸ்கின் கூறியதை நிரூபிக்கும் விதத்தில் புது விதமான ஸ்டைலில் நரேன் நடித்திருக்கிறார். 
வசனங்களுக்கு பதில் பின்னணி இசையை பேசவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் கே. “வாயமூடி சும்மா இருடா” பாடலை வெளிநாட்டில் எடுத்ததற்கு பதிலாக நம் ஊரிலேயே இயல்பாக எடுத்திருக்கலாம். ”கண்ணம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்” போன்ற அற்புதமான வரிகளை கொண்ட பாடல்களை மிஷ்கின் வழக்கம் போல அவரது ஸ்டைலில் எடுத்திருக்கலாம். 
படத்தின் போக்கில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் பாதிப்புகள் இல்லாமல் இல்லை. அப்படிப் பார்த்தால் எல்லா எம்.ஜி.ஆர் படங்களிலும் கெட்டவனை அழிக்க ஒரு சூப்பர் ஹீரோ வருவதைப் போல் இதே ஃபார்முலா தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
முகமூடி பிரம்மிப்பில்லை என்றாலும் நம்ம ஊரு ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி நல்லா எடுத்திருக்காங்க. நிச்சயமா முகமூடிக்கு போனா, ரசிகர்கள் ஏமாற்றமில்லாம ரசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக