ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழி!


Viruvirup
தி.மு.க.வில் சமீப காலமாக ஸ்டாலின் அணியின் கை ஓங்கியுள்ள நேரத்தில், இளைஞர் அணிக்கு போட்டியாக ஒரு அணியை, கனிமொழி முன்னிலை படுத்தப் போகிறார் என்று தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது. கனிமொழி நடத்தப் போகும் போட்டி அணி, கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை.
இது ஏற்கனவே தி.மு.க.-வில் உள்ள அணிதான். ஒரு விதத்தில் சொல்லப்போனால், கடந்த, 2009-ம் ஆண்டு, கனிமொழிக்காகவே தி.மு.க.-வின் துணை அணியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவை தொடக்கப்பட்டது. பேரவையின் தலைவி கனிமொழிதான்.

தி.மு.க.-வின் முப்பெரும் தலைவர்களில் இருவருக்கு (ஸ்டாலின், அழகிரி) கட்சிப் பதவிகள் உள்ள நிலையில், கனிமொழிக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற கட்டயத்தில் உருவாக்கப்பட்ட அணி இது. ஆனால், இதுவரை அப்பேரவை சார்பில் பெரிய அளவில் மாநாடு, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.
காரணம், பெரும்பான்மையான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்களாக இருப்பதால், கனிமொழிக்கு முக்கியத்துவம் தரும் அணியை பலப்படுத்த யாரும் முன்வரவில்லை.
இந்த பேரவைக்கு மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என இரண்டு முறை தனது கைப்பட, மாவட்டச் செயலர்களுக்கு, கனிமொழி கடிதம் எழுதியும், சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகத்தை தவிர வேறு யாரும் பதில் எழுதவேயில்லை. வீரபாண்டி ஆறுமுகம் மட்டும், தனது மாவட்டத்திற்கு, நியமிக்க வேண்டிய நிர்வாகிகளின் பட்டியலை கனிமொழிக்கு அனுப்பி வைத்தார்.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், தி.மு.க.வை பலப்படுத்த பொருளாளர் ஸ்டாலின், இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர்களை மாவட்ட வாரியாக சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, இளைஞர் அணி நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தி, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
அதே பாணியில், ஸ்டாலினின் இளைஞர் அணிக்கு போட்டியாக, கலை, இலக்கியம், பகுத்தறிவு பேரவையை பலப்படுத்த கனிமொழி திட்டம் வகுத்துள்ளார் என்கிறார்கள்.
விரைவில் கனிமொழியில் மாவட்ட சுற்றுப்பயணங்கள் தொடங்கவுள்ளன என்று கூறப்படுகிறது.
தற்போது, தி.மு.க.-வை பலப்படுத்தும் முயற்சிகளில் இரு தரப்புகளே செயல்படுகின்றன. முதலாவது, ஸ்டாலின் அணி. தி.மு.க. அணிகளுக்குள் இவர்கள்தான் ஆக்டிவ்வாக கட்சி நடவடிக்கைகளில் உள்ளனர்.
மற்றைய தரப்பு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.
இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளால், “தி.மு.க. ஆட்சியே பரவாயில்லை” என்ற நிலைக்கு மக்களை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த முயற்சியில், அ.தி.மு.க.-வினர் வெற்றி பெறுவார்கள் என்றே தோன்றுகிறது.
இந்த நிலையில்தான், ஏற்கனவே லெட்டர் பேடில் உள்ள கனிமொழி அணி ஒன்று, லைவ்வாக வலம்வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பார்க்கலாம், இந்த அணி என்ன செய்யப் போகின்றது என்பதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக