ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வைகோ பஸ் டில்லிக்கு போகாதுங்களா?” பா.ஜ.க. அறிந்து கொள்ள ஆவல்!

Viruvirupu
“மத்தியப் பிரதேசம் வரை போராடச் சென்ற வைகோ, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவுக்கு வரவேற்பு அளித்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராகப் போராட டில்லி செல்லாதது ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
அவர் என்ன சொல்கிறார்? “இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவுக்கு, டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளார்.
இப்போது மட்டுமல்ல 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் போதும், மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போதும் ராஜபக்ஷேவை அழைத்து அவருக்கு வரவேற்பு அளித்தது காங்கிரஸ் அரசு.
அப்போதெல்லாம் டில்லி, மும்பை சென்று போராட்டம் நடத்தாத ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இப்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்துக்கு சென்றுள்ளார்” என்கிறார் இவர்.
அது ராஜதந்திரமுங்க.
காமன்வெல்த் போட்டி, கிரிக்கெட் போட்டி எல்லாம் பாபுலர் ஆட்டமுங்க. ஸ்பான்சர் எல்லாம் இருங்காங்க. நம்ம அரசியல்ல அப்படியான போட்டிகளில் சிங்கள வீரர்கள் தாராளமாக வந்து விளையாடலாம். ராஜபக்ஷேவும் வரலாம். ராஜபக்ஷே தாத்தாவும் வரலாம்.
எப்போதாவது, எந்தக் கட்சியாவது வாய் திறந்திருக்கோமா? எல்லாக் கட்சிக்கும் பொளப்பு கெட்டுப் போயிருமுங்க.
நாம ஏதோ ஏழைக்கேத்த எள்ளுறுண்டை போல, அமெச்சூர் கால்பந்து டீம் வந்தா மட்டுமே வீரம் கொள்வோம் என்று தெரியாத இவரையெல்லாம்,  தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவராக்கியது யாருங்க?
பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் என்ன சொல்கிறார்? “2009-ல் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது டில்லி சென்று போராடாதவர்கள், இப்போது, இலங்கை ஜனாதிபதி பௌத்த சின்னமான அரச மரம் நடுவதற்கு வந்தபோது, மத்திய பிரதேசத்துக்கு போயிருப்பதில், ஏதோ உள்நோக்கம் உள்ளது” என்கிறார்!
அடப்பாவி. அடி மடியில் கை வைக்கிறாரே! 2009-ல் கொடியோடு டில்லி போனால், “யுத்தத்தின் இறுதி நாட்களில் லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேற விடாமல் மடக்கி வைத்திருந்தது யார்?” என்ற கேள்வி எழுந்திருக்குமே!
சில விஷயங்களில் கண்களை மூடிக்கணும் கண்ணா!
இறுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், “இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்களுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வரும் பா.ஜ.க.-வை, மத்திய பிரதேசம்வரை சென்று எதிர்ப்பதில் நிச்சயம் ஏதோ உள்நோக்கம் உள்ளது.
வைகோ ஏன் டில்லிக்கு போகவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்” என்றார்.
என்னங்க கேள்வி இது? டில்லிக்கு பஸ்ல போக ரொம்ப நாளாகாதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக