புதன், 12 செப்டம்பர், 2012

ஊட்டியின் பயங்கர முகம் ரசாயான கழிவுகள்

அந்த போட்டோவை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை. சகலவிதமான கெமிக்கல் விஷத்தையும் சுமந்துகொண்டு ஆறு போல அந்த தண்ணீர் வளைந்து, நெளிந்து போய்ச் சேர்ந்து கொண்டு இருந்தது, சேர்ந்த இடம் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக மழைநீர் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் அணைப்பகுதியாகும்.
விஷ(ய)ம் இதுதான். மலைகளின் அரசி, நீலகரி மாவட்டத்தின் தலைநகர், உலகில் உள்ள 14 முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்று, பொட்டனிக்கல் கார்டன், ரோஸ்கார்டன், போட்ஹவுஸ், மலைரயில் என்று மக்களை மகிழ்விக்கும் அனைத்தும் இங்கே உண்டு. ஆம், இவ்வளவு நேரத்திற்குள் தெரிந்துதிருக்கும் ஊட்டியைப்பற்றித்தான் சொல்கிறோம் என்று.
அழகான, பசுமையான, குளுமையான ஊட்டியைத்தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஊட்டியை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அங்கே இன்னொரு கோரமுகம் இருப்பது நிறையபேருக்கு தெரியாது. அந்த கோரமுகம் அங்குள்ள பைகாரா அணைப்பகுதியில் மருந்து கம்பெனி என்ற பெயரில் அமர்ந்திருக்கிறது.


கடந்த முப்பது ஆண்டுகளாக மருத்துவ பொருட்கள் தொடர்பான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம், தயாரிப்பு தொடர்பான ரசசாயன கழிவுகளை எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல் பைக்காரா அணையில் திறந்து விடுகிறது.

ஊட்டி பைகாரா அணையின் சாண்டிநல்லா பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் கழிவுநீர் அணையின் அடிப்பகுதியில் சேருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் தேங்கியிருக்கும்போது இந்த கழிவுகள் அணையில் கலப்பதே யாருக்கும் தெரியாது, பார்க்கவும் முடியாது. எப்போதாவது மழையில்லாமல் போய் கடும் வறட்சி ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையும்,அப்போது மட்டுமே இந்த ரசாயான கழிவுகள் ஆறு போல அணைக்குள் போய் கலப்பதை பார்க்கமுடியும்.

இப்போது அந்த அவல நிலை அங்கு நிலவுகிறது. இப்படி திறந்துவிடப்படும் ரசாயனக்கழிவு கலந்த கழிவு நீரானது முதுமலை புலிகள் சரணாலயம் செல்கிறது, அங்குள்ள விலங்குகள் இந்த கழிவு நீரைக்குடிக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறது. அடுத்தபடியாக பைகாரா அணையில் இருந்து மோயாறு ஆறாக மாறி பவானி நதியோடு கலக்கிறது. பவானி நீர்தான் ஈரோடு மற்றம் கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகும்.

கொஞ்சம் மழை பெய்து அணையில் தண்ணீர் வந்துவிட்டாலே மெள்ள கொல்லும் இந்த கழிவு நீர் பயங்கரம் வெளியே தெரியாது, ஆகவே அதற்குள் இந்த விவகாரத்தை வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக படம் எடுத்து எல்லா ஊடகங்களுக்கும் இயற்கை ஆர்வலரும், ஊட்டியின் நேசிப்பாளருமான மதிமாறன் அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை யாரும் "கண்டுகொள்ளததால் 'தினமலர்.காம் பற்றி கேள்விப்பட்டு அனுப்பியிருந்தார்.

படத்தை பார்த்துவிட்டு மதிமாறனிடம் பேசியபோது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார், ஒரு முறை இந்த கொடுமையை சுற்றுச்சுழல் ஆர்வலர்களோ, பசுமை இயக்கத்தினரோ, இயற்கை நேசிப்பாளர்களோ வந்து பார்த்தால் போதும் அதன்பிறகு அவர்களே இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கண்டுவிடுவார்கள் என்றார்.

சரி மதிமாறன் இந்த கழிவாற்றின் பின்னாடியே போய் இன்னும் கொஞ்சம் படம் எடுத்து அனுப்ப முடியுமா என்றபோது அவருக்கு இருந்த "ரிஸ்க்கையும' பொருட்படுத்தாமல், நல்லது நடந்தால் சரி என்று கழிவு நீர் பயணம் செய்யும் பாதையோடு முடிந்த மட்டும் சென்று அதன் கோரமாக முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டியிருந்தார். (அந்த படங்களை போட்டோ காலரியில் பார்க்கலாம்)

பார்த்துவிட்டு மனசு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. பூனைக்கு யாராவது மணிகட்டுவார்களா என்ற ஆதங்கமும் எழுந்தது.

-எல்.முருகரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக