வியாழன், 27 செப்டம்பர், 2012

போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!

தா-பாண்டியன்vinavu.com
தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை என்று டி.ராஜா சொன்னாரே இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ந்திய கம்யூ கடசியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியனுக்கு 80 வது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (25.9.2012) சென்னை காமராசர் அரங்கத்தில் நடந்திருக்கிறது. தா.பா வின் அரசியல் வாழ்க்கை பற்றி வெளியிடப்பட்ட சிறப்பு மலரை உ.த.பே.த. நெடுமாறன் (அதாவது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்) பெற்றுக்கொண்டாராம்.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்காக  நட்பை விட்டுக் கொடுத்ததில்லை. நட்புக்காக அரசியலை விட்டுக் கொடுத்ததில்லை. இந்தப் பண்பாட்டைப் பின்பற்றும் தலைவர் தா. பாண்டியன் ” என்று விழாவில் பேசினார் அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.
இந்த  ”இயங்கியல் தத்துவத்துக்கு” என்ன பொருள் என்று நமக்கு முதலில் புரியவில்லை. வைகோ, திருமா, சீமான், பண்ருட்டி, ஜி.கே.மணி, மூவேந்தர் முன்னணி சேதுராமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்த வாழ்த்தத்தான் மேற்படி தத்துவம் லேசாகப் புரியத்தொடங்கியது.
“மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,  தமிழக  பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா ஆகியோர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர்” என்று தா.பா தன்னுடைய உரையில் குறிப்பிட்ட போதுதான் தெளிவு பிறந்தது.
அடடா, நட்பு என்றால் இதுவல்லவோ நட்பு ! கம்யூனிஸ்டு என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் கொலைவெறி கொள்ளும் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, ராம கோபாலன் மாதிரியான பாசிஸ்டுகளெல்லாம் தாபாவை வாழ்த்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு இடையிலான நட்பு, எத்தகைய உயர்ந்த நட்பாக இருந்திருக்க வேண்டும்.

“தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை” என்று டி.ராஜா சொன்னாரே, இதான் அதுவா?
எண்ண எண்ணப் புல்லரித்தது. சொறிந்து முடிப்பதற்குள், அடுத்த அதிர்ச்சி.
நேற்றைக்கு (26.9.2012) மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களே நேரில் தா.பா வின் வீட்டுக்குச் சென்று மலர்க்கொத்து கொடுத்திருக்கிறார். முந்தா நாள் தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வை குண்டர் சட்டத்தில் போட்டுவிட்டு, நேற்றைக்கு தா.பா வுக்கு மலர்க்கொத்து கொடுத்து, அவரது “அரசியல் விசுவாசத்தை” அம்மா சோதித்துப் பார்த்திருக்கிறார்.
தளி ராமச்சந்திரனுக்கும் தா.பாவுக்கும் இடையிலான உறவு என்பது சாதாரண தோழமை அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. தளி தொகுதியை பெறுவதற்காக தாபாவுக்கும் கட்சியின் மாநிலத் தலைமைக்கும் ராமச்சந்திரன் லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டினார் வலது கம்யூ கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் நாகராஜரெட்டி. உடனே அவரை கட்சியிலிருந்து நீக்கியவர் தாபா.
அதுமட்டுமல்ல, பெரியார் தி.க பழனிசாமியை கொலை செய்து கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பின்னரும், கிரானைட் குவாரியில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக வழக்கு போடப்பட்ட பின்னரும், ராமச்சந்திரனின் அண்ணன் தம்பி மாமனார் மச்சான் என்று மொத்த குடும்பமுமே குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட பின்னரும், ஓசூர் நகரமே கட்சியைப் பார்த்துக் காறித்துப்பிய சூழ்நிலையிலும், “நண்பேன்டா” என்று ராமச்சந்திரனுக்காக அதே ஊரில் பப்ளிக்காக பொதுக்கூட்டம் நடத்தியவர் தாபா.
தான் மட்டுமல்ல, தன்னோடு எளிமையின் திருவுருவமான  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், எம்எல்ஏக்கள் ஆறுமுகம், உலகநாதன், முத்துப்பாண்டி, சுந்தரம், எம்பி லிங்கம் உள்ளிட்ட அத்தனை பேரையும் மேடையில் வரிசையாக நிற்க வைத்து, “நாங்கள் மானத்துக்கு அஞ்சாத மறவர்கள்” என்று நாட்டுக்கே காட்டியவர் தா.பா.
அப்பேர்ப்பட்ட கெழுதகை நண்பரான தளியை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிட்டு, அதே கையால் மலர்க்கொத்தை நீட்டும்போது தா.பா வின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? மலர்க்கொத்தைக் கொடுத்து என்ன ரியாக்ஷன் காட்டுகிறார் என்று என்று தா.பா வை சோதனை செய்து பார்த்திருக்கிறார் புரட்சித்தலைவி.
யாரு கிட்ட? ராத்திரி அமைச்சர் பதவி பறிபோன பின்னரும், காலையில் சிரித்த முகத்துடன் புரட்சித்தலைவியை வணங்குவதற்கு செங்கோட்டையனாலேயே முடியும் என்றால், தா.பா வால் முடியாதா? அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். முகமலர்ச்சியோடு புரட்சித்தலைவியிடம் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் தாபா.
சிறையில் இருக்கும் தளி ராமச்சந்திரன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து  புலம்பலாம், தான் கொட்டி அழுத கணக்கையெல்லாம் சொல்லிப் பொருமலாம். அது அறியாமை !
“அரசியலை, அம்மாவிடம் கொண்டிருக்கும் அரசியல் விசுவாசத்தை நட்புக்காக ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தனது சிரிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் தாபா.
“நட்புக்காக அரசியலையோ, அரசியலுக்காக நட்பையோ விட்டுக் கொடுக்காதவர் தாபா” என்று டி.ராஜா பாராட்டியதன் பொருள் இப்போது புரிகிறதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக