சனி, 8 செப்டம்பர், 2012

நிஜ ஓனர் அ.தி.மு.க. மெகா வி.ஐ.பி.!! சிவகாசி பட்டாசு ஆலை:மர்மங்கள்

Viruvirupu

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்து ஏற்படுத்திய சோகம் ஒருபுறம் கவிந்திருக்க, காவல்துறைக்குள் கடகடவென சில காரியங்கள் நடப்பதாக விஷயம் அறிந்த வட்டாரங்களில் சொல்கிறார்கள். விபத்து நடந்த ஓம்சக்தி பட்டாசு ஆலை தொடர்பாக ஒரு பெரிய ரகசியமே உள்ளதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.
உளவுத்துறை வட்டாரத்தில் உள்ள எமது தொடர்பாளர் ஒருவர், பின்னணியில் அவசர அவசரமாக சில காரியங்கள் நடப்பதாக சொன்னார். காவல்துறைக்கும் சென்னையில் இருந்து சில உத்தரவுகள் சென்றிருப்பதாகவும் கூறினார்.
கிடைத்த தகவல்களில் இருந்து, ‘ஓம்சக்தி பட்டாசு ஆலை உரிமையாளர்’ என்று ஒருவரை தேடுகிறார்கள் அல்லவா? அந்த நபர் நிஜமாகவே இந்த பட்டாசு ஆலைக்கு உரிமையாளர் கிடையாதாம். வேண்டுமானால், முன்னாள் உரிமையாளர் என்று சொல்லலாம்.

வெளியே பெரிதாக யாருக்கும் தெரியாமல், பட்டாசு தொழிற்சாலை சில தினங்களுக்கு முன் கைமாறியதாக தகவல் உள்ளது. தொழிற்சாலையை வாங்கியவர், ஆளும் கட்சியின் ஒரு ‘ஏரியா கமாண்டர்’ பிரமுகர். மற்றொரு சர்ச்சையில் சமீப காலத்தில் சிக்கியவர். ஆனால், அம்மாவின் ஹிட்-லிஸ்ட்டில் இருந்து ‘எப்படியோ’ தப்பித்துக் கொண்டவர்.
“தொழிற்சாலை கைமாறி 8 நாட்களின் பின்னரே விபத்து ஏற்பட்டது” என்று கூறி நிறுத்திய எமது தொடர்பாளர், “…விபத்து ஏற்படுத்தப்பட்டது” என்றார்.
எமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த விவகாரமே, நாலைந்து வெவ்வேறு புள்ளிகளுடன் தொடர்புடையது. தொழிற்சாலையை லீஸூக்கு எடுத்து நடத்தியவர் ஒருவர், உரிமையாளராக இருந்தவர் மற்றொருவர், தற்போதைய உரிமையாளர், ஏரியாவில் சர்வ வல்லமை பொருந்திய அ.தி.மு.க. வி.ஐ.பி.
போலீஸ் தேடுவதாக கூறிக்கொண்டிருக்கும் நபரை காணவில்லை. குடும்பத்துடன் யாத்திரை சென்ற அவரை, ‘அன்போடு’ அழைத்துச் சென்றுவிட்டார்கள் அரசியல்வாதியின் ஆட்கள். காரணம், ஆலை கைமாறிய கதையை அவர் வெளியே விடக்கூடாது என்பதற்காக!
“ஆலை கைமாறவே இல்லை” என்ற டீலுக்கு, முன்னாள் உரிமையாளர் ஒப்புக்கொண்டால்தான், அவர் சரணடைய விரும்பினால்கூட வெளியே வர முடியும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தை இவர்கள் தமக்குள் தீர்த்துக் கொள்ளும்வரை ‘அடக்கி வாசிக்கவும்’ என்ற உத்தரவு சென்னையில் இருந்து வந்திருக்கிறது!
அ.தி.மு.க. வி.ஐ.பி., தமது ஷார்ட்-கட் ஒன்றின் ஊடாக ‘பெரிய’ போலீஸில் சொல்லி, மாவட்ட போலீஸூக்கு உத்தரவு போக செய்திருக்கிறார். இந்த விஷயம் முதல்வருக்கு தெரிய வரும்போது, என்னாகும் என்பது சஸ்பென்ஸ்! காரணம், இப்படியொரு சிக்கலில் ஏற்கனவே சிக்கி, தலை உருளாமல் தப்பிய சாமர்த்தியசாலி அந்த வி.ஐ.பி.
அந்த விவகாரத்தில் “அவரது பதவி நிச்சயமாக காலி” என்று உளவுத்துறையில் பெட் வைத்த ஆட்களும் உண்டு. அப்போது, வேறு சிலரது தலைகள்தான் உருண்டதே தவிர, சிறு கீறல்கூட இவர்மீது விழவில்லை. பழைய பதவியில் மாற்றம்கூட செய்யப்படவில்லை. அம்மாவிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பது, அவருக்கும், ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம்!
எமக்கு கிடைத்துள்ள சில தகவல்கள் சுவாரசியமானவை. சில உறுதிப்படுத்தல்கள் செய்ய வேண்டியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் மீதி விபரங்களை தருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக