ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது கர்நாடக BJPஅரசு

பெங்களூரு : "கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால், தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதை, வரும், 19ம் தேதி டில்லியில் நடக்கவுள்ள காவிரி நதி நீர் ஆணையத்தில் கூற வேண்டும்' என, கர்நாடக அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறப்பு மற்றும் வரும், 19ம் தேதி டில்லியில் நடக்கவுள்ள காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து, கர்நாடக சட்டசபை, மேலவை தலைவர்கள் கூட்டத்தை பெங்களூருவிலுள்ள, தன் இல்லமான, "கிருஷ்ணா'வில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூட்டினார். இந்த கூட்டம், இரண்டரை மணி நேரம் நடந்தது.
கூட்டம் துவங்கியவுடன், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:வரும், 19ம் தேதி காவிரி நதி நீர் ஆணையத்தில், கர்நாடகத்தின் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து, தமிழகத்துக்கு, பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. போதுமான தண்ணீர் இல்லை. மழையின்மையால் அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் நிரம்பவில்லை. விவசாயத்துக்கும், குடி நீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு ஷெட்டர் பேசினார்.

கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா, ரேவண்ணா உட்பட அனைவரும் கர்நாடகத்திலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. கர்நாடகத்தின் நிலைமையை காவிரி நதிநீர் ஆணையத்தின் முன் எடுத்துரைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று, காவிரி நதி நீர் ஆணையத்தில் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:கர்நாடக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் கர்நாடகாவில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக உள்ளனர்.கர்நாடகத்திலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையை, வரும், 19ம் தேதி டில்லியில் நடக்கவுள்ள காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு ஷெட்டர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக