புதன், 29 ஆகஸ்ட், 2012

குஜராத் கலவர வழக்கு:VHP பஜ்ரங்கி, மோடி அமைச்சர் மாயா உள்பட 32 பேர் குற்றவாளிகள்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2008ம் ஆண்டு, நரோடா பாடியாவில் நடந்த கொடும் இனவெறி கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என அகமதாபாத் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ஏளது. 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில்தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது.

28ம் தேதி பந்த் நடத்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அன்றைய தினம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் நரோடா பாடியா என்ற இடத்தில் பெரும் திரளான விஎச்பி தொண்டர்கள் கூடினர். அவர்கள் பயங்கர வன்முறை வெறியாட்டத்தில் குதித்னர். கண்ணில் பட்ட முஸ்லீம்களையெல்லாம் வேட்டையாடினர். இதில் 97 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் 33 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு அகமதாபாத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை விசாரித்த கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தீர்ப்பை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி தலைவர் பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
மாயா கோத்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர்.
மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கெய்தான். முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர்.
இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் வன்முறையிலேயே ஒரே இடத்தில் அதிக அளவிலான பேர் கொல்லப்பட்டது இந்த நரோடா பாடியாவில்தான் என்பது வேதனைக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக