வியாழன், 2 ஆகஸ்ட், 2012

Tamilnadu Express புலனாய்வு: 40-ம் இலக்க சீட் தியரி!

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ விபத்து புலனாய்வு: 40-ம் இலக்க சீட் தியரி!

Viru News
டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணைகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை கிடைத்துள்ள விபரங்கள் மர்மப் படம் ஒன்றில் வரும் காட்சிகள் போலவே உள்ளன.
அதுவரை செய்யப்பட்ட புலனாய்வின் அடிப்படையில், தீப்பிடித்த பெட்டியின் 40-ம் எண் சீட்டில் இருந்து தீ பிடித்து, 22-ம் எண் சீட் வரை பரவியது என்றும், அதன்பிறகு சடுதியாக பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த முடிவுக்கு புலனாய்வாளர்கள் வரக் காரணம், 40-ம் எண் சீட்டின் கீழே பெரிய அளவிலான ஓட்டை உள்ளது.
40-ம் எண் சீட்டின் கீழே எளிதில் தீப்பிடிக்க கூடிய ஏதோ ஒரு பொருள் இருந்திருக்கலாம் என்பதே, புலனாய்வாளர்களின் தியரி. அந்தப் பொருள் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசலாக இருக்கலாம்.
வேறு ஏதாவது ரசாயன பொருளாக இருக்கலாம். அல்லது, வெடிமருந்தாகவும் இருக்கலாம்.
முறையாக செய்யப்படும் ஒரு தடயவியல் ஆய்வில், அது என்ன பொருள் என்பது தெரியவந்துவிடும்.
ரயிலின் டிக்கெட் பரிசோதகர் சாம்பசிவ ராவ், “தீ விபத்து ஏற்பட்ட போது எஸ்-11 பெட்டியில், பயங்கரமாக ஏதோ வெடிப்பது போல சத்தம் வந்தது. அதனை தொடர்ந்து பெட்டி முழுவதும் தீ பரவியது. மீட்புப் பணிக் குழுவினர் பெட்டியை சோதனை செய்தபோது, மண்ணெய் கேன் ஒன்றும் இருந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களிடம் விசாரித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு 4 நிமிடங்களிலேயே பெட்டி முழுவதும் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது என்று கூறியுள்ளனர். அத்துடன், பெட்டி தீப்பிடிப்பதற்கு முன்பாக 3 முறை வெடி சத்தம் கேட்டது என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
4 நிமிடங்களில் பெட்டி முழுவதும் தீப்பிடித்து பயங்கரமாக எரிவதென்றால், மண்ணெண்ணெய், பெட்ரோல் அல்லது, டீசலாக இருக்க முடியாது. அதைவிட தீவிரமான ஏதோ பொருளாக இருக்க வேண்டும். ராணுவ, மற்றும் தீவிரவாத உயயோகங்களில் உள்ள RDX போன்ற ஒரு வெடிப்பொருளாக இருக்க சான்ஸ் உள்ளது.
தீப்பிடிக்க காரணமான பொருள் என்னவென்று தெரிய வந்துவிட்டால், அதனுடன் தொடர்புடைய பயணி யாராக இருக்கும் என்ற கோணத்தில் விசாரிக்க துவங்குவார்கள்.
ஆனால், தீப்பிடித்த எஸ்-11 பெட்டியில், பயணம் செய்தவர்களின் முன்பதிவு பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் பயணம் செய்து இறந்தவர்கள் யார் என்பதை முழுமையாக இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்தவர்கள் யார் என்று தெரிந்தால்தான், அதில் வெடிப் பொருளுடன் யாருக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரிக்க முடியும்.
புலனாய்வு சுலபமானதாக இருக்கப் போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக