திங்கள், 13 ஆகஸ்ட், 2012

E,V,K,S இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?

 Evks Elangovan Getrs Aicc Notice
டெல்லி: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்து பேசியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜுலை 15ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.

இது குறித்து சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்தக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், செயலாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் ஓராவும் உள்ளனர்.
மேலும் இதன் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் சுசில்குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், மிஜோராம் முன்னாள் முதல்வர் முகுத் மித்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் 17ம் தேதி கூடி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய பேச்சை ஆராய்ந்து அவருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், மறைந்த தலைவர்கள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் குறித்தும் நீங்கள் விமர்சனம் செய்து பேசிய பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. இதற்காக, உங்கள் மீது காங்கிரஸ் கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உங்கள் விளக்கத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த இளங்கோவன் எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை பார்த்து வருத்தப்பட்டேன். நான் அது போல பேசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இளங்கோவன் நேரடியாகவே டெல்லிக்கு சென்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், சோனியா காந்தி அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
இளங்கோவனின் விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அடுத்த கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு தனது முடிவை அறிவிக்கும்.
முதல் முறையாக...
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தமட்டில், இதுவரையில் எந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு இதுபோல நோட்டீசு அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோட்டீஸைப் பெற்று சாதனை படைத்துள்ள முதல் ஆள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக