வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

மம்தா பானர்ஜி மீது அவதூறு வழக்கு Contempt of court

கோல்கட்டா: "நீதித்துறையை விமர்சித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, கோல்கட்டா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "மம்தாவின் பேச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையானவையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, இரண்டு "டிவி' சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டனர்.
மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நடந்த விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


"சிடி' ஒப்படைப்பு: இதையடுத்து, மம்தா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, மூத்த வழக்கறிஞரான பிகாஷ் பட்டாச்சார்யா என்பவரும் மற்றும் பலரும், கோல்கட்டா ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் சென்குப்தா மற்றும் மண்டல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று விசாரித்தது. அப்போது, பிகாஷ் பட்டாச்சார்யா, ""மம்தாவிற்கு எதிராக, கோர்ட் தானாகவே முன்வந்து, அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மம்தா பேசியுள்ளார்,'' என்றார். அத்துடன், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட மம்தாவின் பேச்சுக்கள் அடங்கிய இரண்டு"சிடி'க்கள் மற்றும் அவரின் பேச்சுக்கள் வெளியான இரண்டு பத்திரிகைகளின் பிரதிகளையும் நீதிபதிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, மம்தாவின் பேச்சை ஒளிபரப்பிய இரண்டு "டிவி' சேனல்களும் மற்றும் அவரின் பேச்சை செய்தியாக வெளியிட்ட இரண்டு ஆங்கில பத்திரிகைகளும், "அந்தப் பேச்சுக்கள் உண்மையானவையா என்பதற்கு, மூன்று வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசிய, மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

புகழுக்கு களங்கம்: ஜம்மு - காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான பீம்சிங், இந்த மனுவை தாக்கல் செய்தார். மனுவில், "மம்தாவின் பேச்சு, நீதித்துறை மீது, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது. நீதி முறையின் நேர்மை மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது' என தெரிவித்துஇருந்தார்.

"மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன': மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில், நேற்று நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது: "நீதித்துறை நியாயமுறையில் செயல்பட வேண்டும்' என்ற அர்த்தத்தில், நான் சில கருத்துகளை தெரிவித்தேன். அதை சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன. நாட்டில் நல்லவர்களும் உள்ளனர்; கெட்டவர்களும் உள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாரும் ஊழல்வாதிகள் என்பது உண்மையல்ல. அதுபோலத்தான், அனைத்து நீதிபதிகளும் ஊழல்வாதிகள் என, நான் ஒரு போதும் சொல்லவில்லை. நீதித்துறையிலும், அரசியலிலும், நிர்வாகத்திலும், சுதந்திரத்திற்குப் பின், சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப் படவில்லை. அந்த நிலை மாற வேண்டும். இவற்றில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவோருக்கு அரசே நிதி அளிக்க வேண்டும். நான் சொல்லும் இவை எல்லாம் தவறு எனில், ஆயிரம் முறை மீண்டும், மீண்டும் சொல்வேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக