வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கமல்ஹாஸன்:தலைமுறைகளைக் கடந்த இசை எம்எஸ்வியுடையது!

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.
ஜெயாடிவி 14-ம் ஆண்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைப் பாராட்டி கமல்ஹாஸன் பேசியது:
"இது என் குடும்பம். அதேபோல் முதல்-அமைச்சரும் நினைத்ததால் தான் இங்கே நம்முடன் அமர்ந்திருக்கிறார். என் குருநாதர் கே.பாலச்சந்தர் அவர்கள் சொன்னது போல, நாங்கள் செய்யவேண்டியதை நீங்கள் செய்து எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை மூன்று, நான்கு தலைமுறைகளையும் தாண்டி இன்றைய தலைமுறையையும் கவர்ந்திருக்கிறது. என் மகளை நான் இசை பயில அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அவள் இசைப்பயிற்சி முடித்ததும் என்னிடம் போனில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த ஒரு பாடலை டியூன் பண்ணி 'இது யாருடைய இசை?' என்று கேட்டாள். அந்த அளவுக்கு இந்த தலைமுறையையும் கவர்ந்தது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

அதன்பிறகு அவள் பயிற்சி முடிந்து வந்ததும் நேராக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து வந்தேன். இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை எனறார், இளையராஜா. அவரே அப்படி சொல்லி விட்ட பிறகு நான் என்ன சொல்லிப் பாராட்டுவது?
இங்கே வந்திருந்த அத்தனை கலைஞர்களையும் நமது முதல்-அமைச்சர் கவுரவித்து பாராட்டியபோது என்னையே பாராட்டியதாக உணர்ந்தேன். முக்கியமாக பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்களை பாராட்டியபோது நான் சினிமாவில் முதன்முதலாக அவர்கள் பாடிய `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடலுக்குத்தான் வாயசைத்து நடித்தது மனதில் வந்தது. அவர்களை முதல்-அமைச்சர் பாராட்டியபோது என்னையே கவுரவித்தது போல் உணர்ந்தேன்", என்றார்.
கே பாலச்சந்தர்
இயக்குநர் கே பாலச்சந்தர் பேசுகையில், "1950-ம் ஆண்டுகளில் இருந்து இசையில் சாதனை செய்து வரும் இந்த இசை மேதைகளை போற்றும் விதத்தில் இவர்களுக்கு திரையுலகம் எடுத்திருக்க வேண்டிய விழாவை ஜெயா டி.வி. எடுத்திருக்கிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தமிழில் 24 படங்களிலும் தெலுங்கில் 10 படங்களிலும் பணியாற்றிய காலகட்டத்தை மறக்க முடியாது. நான், எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் மூவரும் பணியாற்றிய நாட்களில் எனக்கு கிடைத்த பெயரையும் புகழையும் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவரது இசைக்கு இன்னும் தேசிய அங்கிகாரம் கிடைக்காதது மட்டும் இன்னும் எனக்குள் ஏக்கமாகவே இருக்கிறது,'' என்றார்.
ஏவிஎம் சரவணன்
ஏவி எம் சரவணன் பேசுகையில், "மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிடைக்கவில்லை என்ற மனக்குறை எங்களுக்கு உண்டு. அவருக்குப் பின் வந்த இளையராஜா, ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது.
அது அவர்கள் திறமைக்காக கிடைத்தது என்றாலும், இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். நிச்சயமாக அம்மா (முதல்வர்) அவர்களின் ஆசியுடன் அந்த விருதுகளும் இவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக