புதன், 1 ஆகஸ்ட், 2012

நாளைய இயக்குனர். ஆயிரக்கணக்கான குறும்படங்களுடன் போட்டி

 நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தமிழ் திரைப்பட / சின்னத்திரை நிகழ்சிகளிலேயே ஒரு மாபெரும் புரட்சியை உண்டு பண்ணி விட்டது 
நாளைய இயக்குநர்  : சீசன் -4 க்கு ரெடி!
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு ‘நாளைய இயக்குநர்’  நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  சீசன் -1, சீசன் -2, சீசன் -3 முடிந்து சீசன் -4க்கு தயாராகி வருகிறது நாளைய இயக்குநர் டீம்.‘ஜேவி மீடியா ட்ரீம்ஸ்’ஜெயவேல் இந்த நிகழ்ச்சியை தயாரித்து, இயக்கிவருகிறார்.  சிவகணேசன் இந்த நிகழ்ச்சியின் ஷோ டைரக்டராக உள்ளார்.
ஒவ்வொரு சீசனிலும்   பல்லாயிரம் பேர் போட்டிக்கு கலந்துகொள்கிறார்கள்.  அதிலிருந்து 36 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.    7 கட்டமாக இந்த போட்டி நடைபெறுகிறது.  ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு தலைப்பில்  குறும்படங்கள் இயக்கி, அவை திரையிடப்படுகின்றன.   நடுவர்கள் அக்குறும்படங்களின் நிறைகுறைகளை கூறி நாளைய இயக்குநர்களை தயார்படுத்துகிறார்கள்.   
சீசன் முடிவில் நடக்கும் போட்டியில் மூன்று இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் கொடுக்கிறார்கள்.   முதல் பரிசாக இரண்டரை லட்சம் ரூபாயும்,  2வது பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாயும்,  3 வது பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
இதுவரை மூன்று சீசன்களிலும் இயக்குநர் பிரதாப்போத்தன், மதன், பாக்யராஜ், சுந்தர் -சி, வெற்றிமாறன், விக்ரமன், பிரபுசாலமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள்.   நாளைய இயக்குநர் சீசன் -4க்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடுவராக வரப்போகிறார்.சீசன் -1ல் வெற்றி பெற்ற பாலாஜி மோகன்,  ‘காதலில் சொதப்புவது எப்படி’என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிவிட்டார். 

சீசன் - 2ல் வெற்றி பெற்ற கார்த்திக்,  ‘பீசா’ என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். நாளைய இயக்குநர் போட்டியில் சிறப்பான படங்களைத்தந்த அஸ்வினுக்கு இயக்குநர் பிரபுசாலமன் தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார்.


சீசன் -3ல் நித்திலன் - பாக்யராஜ் ஆகியோர் முதல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.  பாரதிபாலா, இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறார்.  குகன், மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார்.அண்மையில் சீசன் -3 விழா நடைபெற்றது.   இவ்விழாவில் நடிகர் கமல், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் கே.பாலசந்தர், வெற்றிமாறன்,பிரபுசாலமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் நடிகர் கமல் பேசும்போது,  ‘’நாளைய இயக்குநர்களுக்கு இது பெரிய ப்ளாட்பார்ம்.  இது மாதிரி எங்களுக்கு கிடைக்கல.  அதனால கொஞ்சம் வருத்தம் கூட இருக்கு.  இப்போ இருக்குறவங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட் பார்ம் கிடைச்சிருக்கிறது சந்தோசமா இருக்கு’’ என்று கூறினார்.


நக்கீரன்கோபால் பேசும்போது,  ‘’நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், இயக்குநருமான  ஜெயவேலுவை எனக்கு ரொம்ப காலங்களாக தெரியும்.   அவர் எனக்கு நல்ல நண்பர்.  நான் ரொம்ப ராசிக்காரன் என்று சொல்லி, இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கச்சொன்னார்.  அவர் சொன்ன மாதிரியே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  நாளைய இயக்குநர்களை உருவாக்கும் நல்ல நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருக்கும் நண்பரை வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார்.
இயக்குநர் பிரபுசாலமன் பேசும்போது,  ‘’எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட் கிடைச்சிருந்தா 12 வருசங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்’’ என்றார்.  ‘’நாளைய இயக்குநர் சீசன் -4க்கு தயாராகி வருகிறோம்.   கடந்த மூன்று சீசன்களை விட இந்த சீசனுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.  பல ஆயிரக்கணக்கான குறும்படங்களுடன் போட்டியாளர்கள் குவிந்து வருகிறார்கள்.   நாளைய தமிழ்சினிமாவில் நாங்கள் உருவாக்கிய நாளை இயக்குநர்கள் அதிகம் இருப்பார்கள்’’ என்று மிகுந்த நம்பிக்கையோடும், நெகிழ்ச்சியோடும் கூறுகிறார் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜெயவேல்.கதிரவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக