செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மன உளைச்சலால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திடீர் ராஜினாமா

 Acharya Resigns As Special Public Prosecutor
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதாடிவரும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா திடீரென தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடக மாநில உள்துறை செயலருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆச்சார்யா, மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆச்சார்யாவை கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றமே சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் ஆச்சார்யாவும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் ஜெயலலிதா தரப்புக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வந்தனர். அதே நேரத்தில் கர்நாடக ஆளும் பாஜகவின் துணையோடு ஆச்சார்யாவை அரசு தலைமை வழக்கறிஞராக்கியும் அகற்றப் பார்த்தனர். ஆனால் ஆச்சார்யா அந்தப் பதவியை ராஜினாம செய்துவிட்டு தொடர்ந்து ஜெயலலிதா வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்,.
வழக்கின் விசாரணைகளின் போது பலமுறை ஜெயலலிதா தரப்பினரை கடிந்தும் சாடியிருக்கிறார் ஆச்சார்யா. இந்நிலையில் திடீரென கர்நாடக உள்துறை செயலருக்கு ஆச்சார்யா இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மன உளைச்சல் காரணமாக தாம் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஆச்சார்யாவின் ராஜினாமாவால் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான விவாதம் தொடங்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக