வியாழன், 9 ஆகஸ்ட், 2012

வெள்ள அபாய எச்சரிக்கை கபினி அணை நிரம்பும் நிலையில்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து 10,000 கண அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரளாவின் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 20,000 கண அடி அளவுக்கு தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
அணையின் மொத்த கொள்ளவு 2,284 அடி. தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் 2,282 அடி வரை தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி 10,000 கண அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சிம்சா வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணை நிரம்ப இன்னும் 2 அடி மட்டுமே உள்ளதால் கபினி ஆற்றங்கரையோரம் வாழும் மகக்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 124 அடியில் 86.50 அடி வரை தண்ணீர் உள்ளது. அதுவும் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக