வியாழன், 16 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் நடப்பது என்ன?

 One Killed As Violence Erupts Assam Again குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை.
இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் காயமடைந்தனர். பூடான் எல்லைப் பகுதியில் கலவரம் நடந்த பகுதி உள்ளது.
காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் அழகான ஒரு பகுதி அஸ்ஸாம்தான் என்று வர்ணித்திருந்தார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்த இரு அழகான பூமிகளும் இன்று அக்னிப் பிழம்பாக மாறி நிற்கின்றன. காஷ்மீர் பிரச்சனை தெரிந்ததுதான். அஸ்ஸாமில் இனப் பிரச்சினை பெரிய அளவில் தலைவிரித்தாடி வருகிறது.

இந்தக் கலவரத்திற்கு என்ன காரணம், அங்கு நடந்து கொண்டிருப்பதுதான் என்ன என்பது குறித்த ஒரு ரவுண்டப்....
அஸ்ஸாம் மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அஸ்ஸாமியர்கள் ஆவர். 30 சதவீதத்திற்கும் மேலான முஸ்லீம்கள் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் அஸ்ஸாமி மொழி பேசக் கூடியவர்கள்தான். இவர்கள் தவிர இன்னொரு முக்கிய இனப் பிரிவு உண்டு. அவர்கள்தான் போடோக்கள். இவர்கள் பழங்குடியினத்தவர். அஸ்ஸாமியர்களில் 5 சதவீதத்தினர் போடாக்கள் ஆவர்.
இப்போது பிரச்சனை என்னவென்றால், போடோ இனத்தவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து பெருமளவில் அஸ்ஸாமுக்குள் ஊடுறுவி வசித்து வரும் முஸ்லீம் மக்களுக்குத்தான் மோதல் முட்டியுள்ளது. போடோக்கள் அஸ்ஸாம் வனப்பகுதியில் பெருமளவில் உள்ளனர். அந்த வன வளத்தை நம்பித்தான் இவர்கள் உள்ளனர். ஆனால் தங்களுக்குப் போட்டியாக வங்கதேசத்து முஸ்லீம்கள் வந்து விட்டதாக போடோக்கள் கருதுகிறார்கள். முஸ்லீம்கள் இனியும் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தால் தங்களது வாழ்வாதாரமே நிர்மூலமாகிவிடும் என போடோக்கள் அஞ்சுகின்றனர்.
இதையடுத்து போடோக்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது தான் தற்போது இனக்கலவரமாக வெடித்துள்ளது.
போடோ இனத்தவர்கள் நடத்திய வெறித் தாக்குதலால், அஸ்ஸாம் முழுவதும் பரவி வசித்து வரும் முஸ்லீம்களில் லட்சட்கணக்கானோர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினர் கடுமையாக திணறி வருகின்றனர்.
இந் நிலையில் அஸ்ஸாமில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுவிட்ட சூழல் குறித்த தகவல்கள் மெல்ல மெல்ல வெளியே பரவியது. இந் நிலையில் தான் மும்பை, புனே, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும் அஸ்ஸாமியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.
அஸ்ஸாமியர்கள் என நினைத்து வட கிழக்கு மாநிலத்தவர் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்த திபெத்தியர்கள் மீதெல்லாம் தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால் நாடு முழுவதுமே அஸ்ஸாமியர்கள், வட கிழக்கு மாநிலத்தவர் இடையே பெரும் பதற்றமும் அச்ச உணர்வும் பரவியுள்ளது.
இந்த நிலையில்தான் புதிதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர் சிலர். அதாவது ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர் நாடு முழுவதும் அஸ்ஸாமியர்களைக் குறிவைத்து பெரும் தாக்குதல் நடக்கப் போகிறது என்பதே இந்த வதந்தி.
இதனால்தான் பெங்களூரிலிருந்து ஆயிரக்கணக்கான அஸ்ஸாமியர்களும் வட கிழக்கு மாநிலத்தவரும் அவசரம் அவசரமாக ஊர்களுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் இவர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளது ரயில்வே.
இவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தரப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. கர்நாடக காவல்துறை அமைச்சரான அசோக் நள்ளிரவில் ரயில் நிலையத்துக்கே சென்று இந்த மக்களுக்கு சமாதானம் சொல்லிப் பார்த்தும் பலனில்லை.
இந்த சூழ்நிலையில்தான் தற்போது அஸ்ஸாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
இந்த புதிய கலவரத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படப் போகின்றன் என்பது மத்திய அரசும், அஸ்ஸாம் அரசும் செயல்படும் விதத்தைப் பொறுத்தே இருக்கிறது.
அஸ்ஸாமில் கலவரத்தில் ஈடுபடுவோர் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டாக வேண்டும். அதே போல நாட்டின் பிற பகுதிகளில் அஸ்ஸாமியர்கள் மற்றும் வட கிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்துவோரும் மிகக் கடுமையாக இரும்புக் கரம் ஒடுக்கப்பட்டாக வேண்டும்.
இந்த விவகாரத்தை வைத்து எந்தக் கட்சியும் அரசியல் செய்யாமல் இருப்பதே மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக