வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஆனந்த விகடனின் தமிழை சிதைக்கும் பார்பன சதி

 அந்தக் காலத்து ஆனந்த விகடன் இதழ்களின் படங்கள், செய்திகள், நேர்காணல்கள் எல்லாம் பொக்கிஷம் என்ற தலைப்பில் இந்தக் காலத்து ஆ.வியில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இன்று (23.8.12)வந்த இதழில் அட்டைப்பட ஜோக்குகள் என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் வசனங்களைப் பாருங்கள்:

“தலையைப் பின்னிண்டு பூ வெச்சுண்டு இருக்கேன் பார், அப்பா!”
சித்த இப்படி வாயேன்டி பார்க்கலாம்!” -31.8.1941

“டாக்டர்! நீங்க தூக்க மருந்து அனுப்புறேன்னு சொல்லிட்டுப் போனேளே… அதுக்காகத் தூங்காமக் காத்துண்டு இருக்கேன்!” – 8.2.1942
“பார்த்துப் பார்த்து ரவிக்கைக்குத் துணி வாங்கிக் கொடுத்தேளே…அந்தக் குரங்கு என்ன போட்டுண்டு இருக்கு பாருங்கோ!”
“உங்க கண் என்ன எங்கெல்லாமோ சுத்தறது?”
“ஒண்ணுமில்லே….உனக்கும் அதே மாதிரி புடவை வாங்கித் தரலாமேனுதான் பார்க்கிறேன்!” – 22.11.1942
இந்த நகைச்சுவைகளில் இடப்பெற்றிருக்கும் மொழி பார்ப்பன வழக்கு என்பதைப் கவனியுங்கள்! கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பே ஆ.வியில் அவாள் மொழிதான் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்திருக்கிறது. இந்த ஜோக்குகளின் மாந்தர்கள் அநேகமாக பார்ப்பன அடையாளங்களோடுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களே அதிக அட்டைப்படங்களில் இடம் பெற்றிருக்கக் கூடும். பார்ப்பன அடையாளம் இல்லாத நகைச்சுவைகளில் பார்ப்பன வழக்கு இல்லை என்றாலும் அக்ரஹாரத்து மொழியே அன்று  ஊடகங்களில் செல்வாக்குடன் இருந்தது. தமிழை சிதைக்கும் பார்பன சதி
இன்றும் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் சமையல் குறிப்பு, டாக் ஷோ, நடனம் உள்ளிட்ட எல்லா அரட்டைகளிலும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட அவாள் ஸ்லாங்கில் பேசுவதைக் காணலாம். இவர்களுக்கு இது அவாள் மொழி என்பது கூட தெரியாது. ஆனால் அப்படிப் பேசுவதுதான் நாகரீகம் என்ற அடிமைத்தனம் உள்ளவர்கள். எஸ்வி.சேகர், கிரேசி மோகன் போன்ற அக்கிரகார அரட்டைகளையே நாடகமாக்குபவர்களும், துக்ளக் சோவும் கூட அப்படித்தான் பார்ப்பன மொழியை இன்றும் பயன்படுத்துகிறார்கள். தட்டுத் தடுமாறி பேசும் சுப்ரமணிசுவாமியும் கூட தடுமாறாமல் பார்ப்பன மொழியில் பேசுவார் அல்லது உளறுவார்.
பொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக திரைப்படம், ஊடகங்களில் பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது. இன்று ஆ.வியில் அக்கிரஹாரத்து மொழியில் வரும் ஜோக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அன்று அவாள்கள் அதிகம் வாங்கிய ஆ.வியை இன்று கருப்புத் தமிழர்களாக இருக்கும் நடுத்தர வர்க்கம் அதிகம் வாங்குகிறது. அதாவது பார்ப்பனர்களை விட பார்ப்பனரல்லாத வாசகர்கள் ஆ.விக்கு அதிகம்.

இதே பொக்கிஷம் பகுதியில் மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டிலை அவரது கவர்ச்சியான ஸ்டில்லோடு நேர்காணல் கண்டவர் பெயர் சுகந்தா ஐயர் என்று இருக்கிறது. இன்று ஆ.வியின் நிருபர்களில் பார்ப்பனர்களே இருந்தாலும் அப்படி ஐயர், ஐயங்கார் என்று போட முடியாது. வட இந்திய ஊடகங்களில் இன்றும் அப்படி ஐயர் பாணி பட்டங்களை போட்டு எழுதும் பார்ப்பனர்கள் பலர் இருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படி சாதி பெயர் போட்டு எழுதுவது அநாகரீகம் என்பதை திராவிட இயக்கம் செய்து காட்டியிருக்கிறது.
சரி ஆ.வியின் மொழியில் பார்ப்பன நீக்கம் இருந்தாலும் அதன் அரட்டை, அக்கப்போர் நகைச்சுவையில் ஏதும் மாற்றம் இருக்கிறதா என்றால் இல்லை. அதே மாமியார்-மருமகள் ஜோக்குகள், மனைவிக்கு அடங்கிய கணவனது காமடிகள் என்ற பெயரில் பெண்ணடிமைத்தனத்தை போற்றும் பார்வைகள், சீசனல் க்ரைம் செய்திகளை ஜோக்காக்குவது என்று தீவிரமான சமூக விசயங்களைக் கூட அரட்டையாக கற்றுத்தரும் அரசியலற்ற பார்வை என்று பழைய ஆ.வி அப்படியே தொடர்கிறது. மொந்தை மாறினாலும் கள்ளு அதேதான்!
படம் – நன்றி சாத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக