புதன், 29 ஆகஸ்ட், 2012

வங்கத்தின் ஜெயலலிதா – மம்தா பானர்ஜி!


ஜெயலலிதா, மம்தா பானர்ஜி – இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வது என்றால் செவப்பா பயங்கரமா இருக்குமாம் மாமி, பயங்கரமா செவப்பா இருக்குமாம் தீதி.









தீதி அக்கா என வங்க மக்களால் அழைக்கப்படும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஓராண்டு ஆட்சியில் தன்னை விமர்சனம் செய்பவர்களை, அல்லது கேள்வி கேட்பவர்களை ஒன்று மாவோயிஸ்டுகள் என்பார். அல்லது மார்க்சிஸ்டுகள் என்பார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மாத்திரம் கைதாகவில்லை. ஒரு ஏழை விவசாயி கூட மாட்டி பதினைந்து நாள் சிறைவாசம் முடித்து கடந்த வாரம்தான் திரும்பியிருக்கிறார்.
தேசிய குற்ற நடவடிக்கை பதிவின்படி பெண்களுக்கெதிரான வன்முறையில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது வங்காளம். திரிணாமூல் காங்கிரசு கட்சியில் சேர மறுத்த பெண்ணை மானபங்க படுத்திய வழக்கு ஒன்று கடந்த மே மாதம் வெளியானது. அதன்பிறகு பாலியல் வல்லுறவுக்காளாகிய பெண் ஒருவரை அவர் மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர் என்பதால் தனது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு புகார் தந்திருப்பதாக கூறினார் மம்தா. சமீபத்தில் போலீசாரால் தமிழகத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இருளர் சாதிப் பெண்களை காசுக்காக பொய்ப்புகார் சொல்வதாக கூறிய ஜெயலலிதாவைப் போலவே அக்காவும் சிந்திக்கிறார்.

பணம் கொடுத்து தனக்கெதிராக செய்தி உருவாக்கும் பத்திரிகையாளர்களால்தான் தனது ஆட்சிக்கு கெட்ட பெயர் என்றும், குற்றம்சாட்டுகிறார் மம்தா. ஜெயாவோ வழக்கே போடுகிறார். நிருபர்களை தலைமைச் செயலகத்தின் சில பகுதிகளுக்குள் நுழையவும் தடை ஏற்படுத்திய மம்தா அவர்களையும் மார்க்சிஸ்டுகள் என்றே வர்ணிக்கிறார். எதையும் பாசிடிவாக பார்க்க பழகுங்கள் ஆயிரம் பிரச்சினைகளை சந்திக்கும் போலீசார் செய்யும் சிறு தவறுகளை பெரிது படுத்தாதீர்கள் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அறிவுரை வழங்குகிறார் மம்தா.
ஆகஸ்டு 8 ஆம் தேதி மேற்கு மிதுனாபூர் மாவட்டத்தை சேர்ந்த சவுதிரி எனும் சிறு விவசாயி மம்தா பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில், ‘விவசாயிகளுக்காக என்ன செய்தீர்கள்?’ எனக் கேட்டார். உடனே அவரை மாவோயிஸ்டு என முத்திரை குத்திய மம்தா தீதி அவரைக் கைது செய்து சிறையிலடைத்தார். பதினைந்து நாள் ரிமாண்டுக்கு பிறகு கடந்த வெள்ளியன்றுதான் அவர் சொந்த ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
முன்னதாக கடந்த மேமாதம் தன்னைப் பற்றிய கேலிச்சித்திரத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்ட காரணத்துக்காக ஜாதாப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரை மம்தாவின் போலீசு கைது செய்தது. மனித உரிமை அமைப்புகள் இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தாலும் தீதி அதற்கு அஞ்சுவதே இல்லை. பின்னர் தொலைக்காட்சி நேர்படப்பேசும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்தா, கேலிச்சித்திரம் பற்றி கேள்வி எழுப்பிய மாணவியை மாவோயிஸ்டா நீ? எனக் கேள்வி கேட்டபடியே நிகழ்ச்சியிலிருந்து பாதியில் எழுந்து சென்று விட்டார். ஜெயாவின் கரண் தாப்பர் பேட்டி ஞாபகம் வருகிறதா?  என்ன செய்ய பாசிஸ்டுகளிடன் காணப்படும் ஒற்றுமைக்கு இது ஒரு பதம்.
சிபிஎம் ஆண்டபோது மோட்டார் வாகனம் தயாரிக்க முன்வராத டிவிஎஸ் இப்போது தொழில் தொடங்க வந்திருக்கிறான், வேலை வாய்ப்பை பெருக்குவேன் என்றெல்லாம் தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக பேசும் மம்தா வின் திரிணாமூல் கட்சியும் சிங்கூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக 2005 வாக்கில் போராடியது. இப்போது இன்னும் சிங்கூரில் நட்ட ஈடு தரப்படவில்லை. சிபிஎம் அல்லது மம்தா என யார் ஆட்சியில் இருந்தாலும் தங்களை கேள்வி கேட்பவர்களை அல்லது எதிர்த்துப் போராடுபவர்களை மாவோயிஸ்டுகள் என்றுதான் சொல்கிறார்கள். தவிர்க்கவியலாமல் அப்படி அவர்கள் சொல்பவர்கள் எல்லாம் நாட்டின் பெரும்பான்மை உழைக்கும், நடுத்தர  மக்களாக இருக்கிறார்கள்
திரிணாமூலின் மாணவர் பிரிவு சமீப காலமாக தமது தலைவியை விமர்சித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களை அவ்வப்போது தலையில் குட்டினாலும், தீதியின் ஆசிர்வாதம் அவர்களுக்கு நிரம்பவே உள்ளது. எமர்ஜென்சியை ஆதரித்த சித்தார்த்த சங்கர் ரேயின் வழித் தோன்றலாக அப்போதைய மாணவர் பிரிவில் இருந்து பாசிச இந்திராவை ஆதரித்து அரசியலுக்கு வந்தார் மம்தா. இந்த பாசிச பாரம்பரியத்திற்கு உண்மையில் அவரும் ஒரு வாரிசுதான். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில் சி.பி.எம்மை வெற்றிபெறச் செய்வதற்கு தீதியே போதும்.
ஜெயலலிதா, மம்தா பானர்ஜி – இரண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று  தெரியுமா? வடிவேலு பாணியில் சொல்வது என்றால் செவப்பா பயங்கரமா இருக்குமாம் மாமி, பயங்கரமா செவப்பா இருக்குமாம் தீதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக