வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ராம்தேவ் குருஜியின் வண்டவாளம் அம்பலமாகிறது

பாபா ப்ளாக் ஷீப்


வீட்டைவிட்டு ஓடிப்போவது என்று ராமகிருஷ்ணன் முடிவெடுத்தபோது அவனுக்கு வயது பதினைந்து. ஹரியானா மாவட்டத்தில் இருக்கும் அலிப்பூர் கிராமம். புழுதிபடிந்த பஞ்சபூமி அது. அவனுடைய தந்தைக்கு கைவசம் வேலை மட்டும்தான் இருந்தது.  சம்பளம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் கிடைக்கவில்லை. வறுமை. ராமகிருஷ்ணனுக்கோ படிப்பு ஏறவில்லை. வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டான். எங்கே போவது?
ஓடிப்போகும் சிறுவர்கள் எல்லாம் ஒன்று ராணுவத்தில் சேர்வார்கள் அல்லது பிச்சை எடுப்பார்கள். ஆனால் ராமகிருஷ்ணன் தேர்வு செய்தது ஆசிரமத்தை. இலவசமாக சோறுபோடும் அனாதை ஆசிரமத்தை அல்ல; யோகா போன்ற ஆரோக்கியக் கலைகளைக் கற்றுத்தருகின்ற குருகுல ஆசிரமத்தை.
கிராமத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சியில் ஆர்வம் செலுத்தியது இப்போது வசதியாக இருந்தது. ஆச்சார்ய பிரதம் என்ற யோகா குருவிடம் மெல்ல மெல்ல ஆசனங்களைக் கற்றுக்கொண்டான். அது தொடர்பான புத்தகங்களையும் படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டான்.
யோகக்  கலையைக் கற்றது போக எஞ்சியிருந்த நேரத்தில் சமஸ்கிருத மொழியைக் கற்பதிலும் கவனம் செலுத்தினான். அதற்கு அந்த ஆசிரமத்தில் வாய்ப்பு இருந்தது. பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டான். அடித்தளம் அமைவது முக்கியமில்லை; ஆழமாக இருக்கவேண்டும்; வலுவாக அமைய வேண்டும் என்பதில் அந்தச் சிறுவன் காட்டிய ஆர்வம் ஆசிரம நிர்வாகிகளை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

கலையில் கணிசமான தேர்ச்சியைப் பெற்றபோதும் ராமகிருஷ்ணனுடைய தேடல் நின்றுவிடவில்லை. ஆச்சார்ய பல்தேவ்ஜி என்ற சாமியாரைச் சந்தித்தான். பேசினான். பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். பல்தேவ்ஜியின் வழிகாட்டுதலில் தனது பெயரை மாற்றிக்கொள்ளவும் முடிவுசெய்தான். சுவாமி ராம்தேவ். ஆம். இன்று யோகக்கலை வித்தகராக, சமூக ஆர்வலராக, மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக, நடுத்தர மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, ஏழை மக்களின் ஆபத்பாந்தவராக ஊடகங்கள் முன்னிறுத்தும் பாபா ராம்தேவ்தான் இந்த சுவாமி ராம்தேவ்.
புதிய பெயரை வைத்துக்கொண்ட ராம்தேவ், தான் கற்றுக்கொண்ட ஆசனங்களையும் படித்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க முடிவுசெய்தார். சின்னதும் பெரியதுமாக அவர் நடத்திய யோகா முகாம்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. உடல்பிரச்னைகளைத் தீர்க்க மருத்துவ உதவிகளை நாடி, அதுவும் பலிக்காதபோது மக்களின் ஒரே வடிகாலாக இருந்தது யோகா மட்டுமே. அதைத்தான் ராம்தேவ் குறிவைத்தார்.
நடுத்தர, வசதி நிறைந்த மக்கள் பலரும் அவருடைய முகாம்களுக்கு வரத்தொடங்கினர். மெல்ல மெல்ல பிரபலம் அடையத் தொடங்கினார். பெரிய மனிதர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பணமும் சேரத் தொடங்கியது. கிடைத்த பணத்தைக் கொண்டு ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் குருகுலம் ஒன்றை உருவாக்கினார் ராம்தேவ். அங்கு வைத்து இலவச யோகா முகாம்களை நடத்தினார். இதன்மூலம் வசதியற்ற ஏழை மக்களையும் அவருடைய குருகுலத்துக்கு அழைத்துவர முடிந்தது. இலவச முகாம்களுக்கு வந்தவர்கள் செய்த வாய்வழி பிரசாரம் ராம்தேவுக்கு மேன்மேலும் பிரபலத்தைப் பெற்றுக் கொடுத்தது.
அப்போது ராம்தேவுக்கு புதிய யோசனை ஒன்று உதித்தது. நாம் ஏன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கக்கூடாது? அப்போது உதவிக்கு வந்தவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. அவருடன் இணைந்து திவ்ய யோக மந்திர் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். யோகக்கலையை பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்ற விரும்பிய ராம்தேவ் எடுத்துவைத்த முதல் அடி இது.
நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. போதாக்குறைக்கு ஆஸ்தா என்ற டிவி சேனல் ஒன்று ராம்தேவை அணுகியது. காலை நேரத்தில் யோகா கலையைக் கற்றுத்தரும் நிகழ்ச்சி ஒன்றை எங்கள் சேனலில் நடத்த இருக்கிறோம். நீங்களே அதைச் செய்துகொடுத்தால் நல்லது.  ஒப்புக்கொண்டார் ராம்தேவ். 2003ஆம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. விளைவு, வீட்டின் வரவேற்பறைக்கே வந்து யோகா கற்றுத்தரத் தொடங்கினார் ராம்தேவ்.
அடுத்தடுத்து காட்சிகள் மாறத் தொடங்கின. பத்தும் இருபதுமாக உயர்ந்துகொண்டிருந்த சீடர்களின் (ஆம், சுவாமி ராம்தேவ் குரு என்றால் அவரிடம் கற்றுக்கொள்பவர் சீடர்கள்தானே!) எண்ணிக்கை ஆயிரங்களில் பெருகத் தொடங்கியது. செய்தித்தாள்கள். பத்திரிகைகள். தொலைக்காட்சிகள். எல்லாவற்றிலும் ராம்தேவின் பெயர்தான். தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அடிக்கடி முகாம்கள் நடத்தினார்.
அடுத்து பதஞ்சலி யோக பீடம் என்ற புதிய அறக்கட்டளையைத் தொடங்கினார் ராம்தேவ். இதைத் தொடங்கிவைத்தவர் பைரோன்சிங் ஷெகாவத். புகழ்பெற்ற ஆர்.எஸ்.எஸ்காரர். முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர். வெறுமனே யோகக்கலைக் கற்றுத்தருவது என்பதைத் தாண்டி நோய் தீர்க்கும் காரியங்களில் ராம்தேவ் ஈடுபடத் தொடங்கியது இதன்பிறகுதான். நீரிழிவு, மன அழுத்தம், உடல்பருமன் போன்ற பிரச்னைகளுக்கு யோகாவின் மூலன் பலன் கிடைக்கும் என்ற ராம்தேவின் பிரசாரத்துக்கு நல்ல பலன். கூடுதல் சீடர்கள்.
விளைவு, ராம்தேவின் அறக்கட்டளை அகலவாக்கில் வளரத் தொடங்கியது. பதஞ்சலி ஆயுர்வேதக் கல்லூரி, பதஞ்சலி மூலிகைத் தோட்டம், ஆர்கானிக் விவசாயப் பண்ணை, பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா என்பன போன்ற ஏராளமான நிறுவனங்களை உருவாக்கி, நடத்தத் தொடங்கினார் ராம்தேவ். அனைத்தையும் நேர்த்தியாக நிர்வகிக்கும் பொறுப்பு ஆச்சார்ய பாலகிருஷ்ணாவுடையது. அவரை நிர்வகிப்பவர் பாபா ராம்தேவ். ஆம். சுவாமி ராம்தேவ் இனிமே பாபா ராம்தேவ்.
திவ்ய பிரகாஷன் என்ற நிறுவனத்தின் மூலம் யோகக்கலை தொடர்பான புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்தார் ராம்தேவ். யோக சந்தேஷ் என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். இந்தப் பத்திரிகை இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 11 மொழிகளில் வெளியாகிறது. நேபாள மொழியிலும் ஒரு பதிப்பு வருகிறது.
பத்திரிகை. தொலைக்காட்சி. புத்தகங்கள். இலவச முகாம்கள். எல்லாமே இருந்ததால் ராம்தேவின் பதஞ்சலி யோக பீடம் பணம் காய்ச்சி மரமாக மாறியது. கிடைத்த பணத்தைக் கொண்டு நிறுவனங்களை மேன்மேலும் விரிவுபடுத்தினார். வெளிநாடுகளில் அவருடைய யோகா மையங்களுக்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த ராம்தேவுக்கு உலகின் பல நாடுகளில் சீடர்கள் உருவாகினர்.
பணம் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கிறது. அடுத்தது என்ன? அரசியல். அதுதான் உண்மையான இலக்கு. ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்தார். யோகா முகாம்களில் யோகக்கலை பற்றியும் வாழ்க்கைக்கலை பற்றியும் பேசிய ராம்தேவ், சமூக சீர்திருத்த விஷயங்கள் பற்றிப் பேசினார். இந்தியாவின் அதிமுக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசினார். அரசியலை ஆன்மிகம் கலந்துபேசினார்.
ஆன்மிகத்தையும் அரசியலையும் பேசிய ராம்தேவ், திடீரென பாரத் சுவாபிமான் அந்தோலன் என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பில் இலக்குகள் ஐந்து. நூறு சதவீத வாக்குப்பதிவு. நூறு சதவீத தேசிய உணர்வு. நூறு சதவீத அயல்நாட்டு நிறுவன புறக்கணிப்பு. நூறு சதவீத ஒற்றுமை. நூறு சதவீத யோகா மயமாக்கப்பட்ட தேசம்.
வெறுமனே இயக்கம் ஆரம்பித்துவிட்டால் போதாது. இயக்கம் மக்களைக் கவர வேண்டும். எனில், மக்களைக் கவரக்கூடிய விஷயங்களில் கருத்து சொல்லத் தொடங்கினார் பாபா ராம்தேவ். அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணாதீர்கள் என்றார். குளிர்பானங்கள் அனைத்தும் கழிவறையைச் சுத்தம் செய்ய மட்டுமே லாயக்கு என்றார். கேன்சர், எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு யோகாவில் தீர்வு உண்டு என்றார். பள்ளிகளில் பாலியல் கல்வியை அகற்றிவிட்டு யோகாவை அறிமுகம் செய்யவேண்டும் என்றார்.
கருத்து தெரிவித்த அனைத்து விஷயங்களும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏற்படுத்தவும் செய்தன. ஆதரவும் கண்டனமும் மாறிமாறி வந்தன. பத்திரிகைகள் அவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அவருடைய முகாம்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டன. பக்கம் பக்கமாக அவருடைய பேட்டிகள் பிரசுரமாகின. பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளில் மனித மற்றும் மிருக எலும்புத் துகள்கள் கலக்கப்படுவதாக ஒரு சர்ச்சை வெடித்தது. ஆனால் அது மெல்ல மெல்ல அடங்கிவிட்டது.
உள்ளுக்குள் அடங்கிக்கிடந்த அரசியல் ஆர்வம் ஒருநாள் அப்பட்டமாக வெளியில் வந்தது. நான் தொடங்கிய பாரத் சுவாபிமான் அந்தோலன் இயக்கம் தேர்தல் அரசியலில் இறங்கப்போகிறது. அதன் சார்பில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். சாது ராம்தேவின் மனத்துக்குள் சக்கரவர்த்தியாகும் எண்ணம் உருவாகிவிட்டது என்பது அன்றைய தினம் அம்பலமானது.
கிட்டத்தட்ட இந்தச்சமயத்தில்தான் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணம் பற்றிப் பேசத் தொடங்கின. 2009 மக்களவைத் தேர்தலின்போது தனது தேர்தல் அறிக்கையில் கறுப்புப்பண மீட்பு பற்றிப் பேசியது பாஜக. பிறகு ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியாகி, ஊழலுக்கு எதிரான கருத்துகள் வெளிவந்தன. ஊழல் ஒழிப்பும் கறுப்புப்பண மீட்பும் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பின. எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார் பாபா ராம்தேவ்.
களத்தில் இறங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த ராம்தேவுக்கு வசதியாக வந்து சேர்ந்தது லோக்பால் மசோதா விவகாரம். சமூக ஆர்வலர் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் தொடங்க, அதற்கு நாடு தழுவிய அளவில் பேராதரவு கிடைத்தது.
ராம்தேவாகப்பட்டவர் ஆன்மிகத்தில் இருந்து அரசியலுக்குள் குதித்த வரலாற்றின் சாராம்சம் இதுவே.
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக