புதன், 15 ஆகஸ்ட், 2012

கொடநாடு பற்றி பேசுவோமா?”ஜெ. கிணறு வெட்ட, கருணாநிதி காட்டிய பூதம்

Viru News,



லாஸ்ட் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன் கண்ணை மூடிக்கொண்டு பேட்டை வீசுவதுபோல, வாயை திறப்பவர்கள் அனைவர் மீதும் அவதூறு வழக்குகளை முதல்வர் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்க, விவகாரமான விஷயம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி!
“நம் அனைவர் மீதும் அவதூறு வழக்குகள் போடப்படுவது, கொடநாடு எஸ்டேட் பற்றி பேசுவதை வைத்துதானே… சரி. கோர்ட்டில் இந்த கொடநாடு எஸ்டேட் பற்றி கொஞ்சம் பேசுவோமா?” என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா? இந்த கேள்வியைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸும் கேட்டுள்ளார். அதற்கு நான் கொடுத்த பதிலில், ‘அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும்?’ என்று கூறியிருந்தேன்.

இந்தப் பதிலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்துவது போல ஏதாவது உள்ளதா? அதை, தமிழ்நாட்டு மக்கள், நடுநிலையாளர்கள்தான் கூறவேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு. ஆனால் என் மீது வழக்கு, மு.க.ஸ்டாலின் மீது வழக்கு, டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு, பத்திரிகைகள் மீதெல்லாம் வழக்கு என எத்தனை வழக்குகள்?
தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த என்னைப் பற்றியும், திருமதி சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, நரசிம்மராஜ் ஆகியோரை தரக்குறைவாக ஜெயலலிதா பேசினார். மூப்பனார், சென்னரெட்டி, ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோர் மீது பழி சுமத்தினார்.
இப்படியெல்லாம் பேசி அகில உலகப் புகழ் பெற்றவர்தான், நாம் எழுதியதால் களங்கம் ஏற்பட்டு விட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கை சந்திக்க தயார். வழக்கு வரட்டும். அப்போது இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய பல செய்திகள் வெளியே வரும்.
முதலமைச்சரே சென்று மாதக்கணக்கில் தங்கும் கொடநாடு எஸ்டேட் யாருடையது? அது எப்படி வாங்கப்பட்டது? என்ன விலை? முதலமைச்சர் தங்கும்போது அதிகாரிகள் செல்வதற்கான செலவு யாருடைய பணம்?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண்பதற்காக, வழக்கை எதிர்நோக்க தயார்” என்கிறது கருணாநிதி வெளியிட்ட அறிக்கை.
முதல்வர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ‘கொடநாட்டில் தங்கியிருக்கிறார்’, ‘கொடநாட்டில் இருந்து பைல் பார்க்கிறார்’ என்ற வாக்கியங்கள் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்குகள் ஒரு நீதிபதிக்கு முன் வரும்போது, கருணாநிதி, ஸ்டாலின் டாக்டர் ராமதாஸ், மற்றும் ஆனந்த விகடன் நிர்வாகம் ஆகியோர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள், நிச்சயமாக இந்த ‘கொடநாடு’ என்பதை பற்றிக் கொள்ள முடியும்.
கொடநாட்டில் ஜெயலலிதா தங்கியுள்ள எஸ்டேட் பற்றிய விபரங்களை கோர்ட்டில் கூறுமாறு கோர முடியும். அவ்வளவு ஏன், முதல்வர் ஜெயலலிதாவை கோர்ட்டுக்கு இழுக்கவும் முடியும். அவரது வாயால் கொடநாடு பற்றிய விளக்கங்களை கூறும்படி கோர்ட்டை கேட்டுக் கொள்ளவும் முடியும். கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் தொடர்பான ஆவணங்களை காண்பிக்க சொல்லவும் முடியும்.
முதல்வர் கூறும் விபரங்கள் தொடர்பாக அவரை, வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்யவும் முடியும்.
இதையெல்லாம் செய்யத்தான் போகிறோம் என்பதையே, தமது அறிக்கையில் மறைமுகமாக கூறியிருக்கிறார் கருணாநிதி. அவர் அப்படி கூறிய பின்னரும், அவதூறு வழக்குகள் விசாரணைக்காக கோர்ட்டுக்கு வரும் என்று நினைக்கிறீர்களா?
“முதல்வர் தைரியமானவர் அல்லவா? நிச்சயமாக கோர்ட்டுக்கு வருவார்! கொடநாடு பற்றிய ஆவணங்களுடன் வருவார்!” என்று சொல்லத்தான் எமக்கும் ஆசை.
சொல்வதற்கு முன், இதற்குப் பிறகும் மற்றொரு ‘கொடநாடு’ வழக்கு யார் மீதாவது போடப்படுகிறதா என்று பார்த்துவிட்டு சொல்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக