வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இந்தியா டுடே மீது ஜெயலலிதா வழக்கு! நக்கீரன், ஜூனியர் விகடன் வரிசையில்

Viru News
நக்கீரன், ஜூனியர் விகடன் வரிசையில், முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது பிரபல வார சஞ்சிகை, இந்திய டுடே. தம்மீது சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என இந்தியா டுடே நிறுவனம் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் சார்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், “இந்தியா டுடே தமிழ் வாரப் பத்திரிகையின் சமீபத்திய இதழில், ‘திருப்பிக் கொடுக்கும் நேரம், ஜெயா-சசி உறவு; முப்பதாண்டு கால வரலாறு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் செங்கோட்டையன் பதவி நீக்கம், கட்சி, மற்றும் ஆட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் மீண்டும் வருவதை காட்டுகிறது. செங்கோட்டையன் விஷயத்தில் சசிகலா ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்துவிட்டதாக கூறுகின்றனர்
என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை, முதல்வருக்கு கஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியின் மூலம், முதல்வருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக அமைச்சரை பதவி நீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவதூறு செய்தி பரப்பியதற்காக, இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியர் எம்.ஜெ.அக்பர், வெளியீட்டாளர் உட்பட 9 பேர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் இந்தியா டுடே நிறுவனம் தமது ஸ்டான்டை நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைக்குமா என்பது இன்னமும் சரியாக தெரியவில்லை. ஒருவேளை பத்திரிகை நிறுவனம் வழக்கை எதிர்த்து வாதாட முன்வந்தால், கோர்ட்டில் பல விஷயங்கள் கிளறப்படும்!
பாவம், செங்கோட்டையன். “இவரை வெளியேற்றினால்தான், அரசு எந்திரம் சிறப்பாக செயல்படும்” என்று முதல்வர் சார்பிலேயே சொல்லப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக