வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கோழியை (ஈமு) காட்டிவிட்டு, பணத்துடன் பறந்துவிட்ட மயில் (சாமி)!

சீசனுக்கு சீசன் மிஸ்டர் பொதுஜனம் யாரிடமோ பணத்தைக் கொண்டுபோய் கொட்டி ஏமாந்து போவது வழக்கம். இம்முறை ஈமு கோழி ரூபத்தில் வந்துள்ளது ஏமாற்றும் தந்திரம். முதலீட்டாளர்களிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்த குற்றச்சாட்டில், ஈமு பண்ணை உரிமையாளர்களை 5 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 166 புகார்கள், சுசி ஈமு, குயின் ஈமு, அல்மா ஈமு, டி.வி.எஸ் ஈமு ஆகிய 4 நிறுவனங்கள் மீது கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி. வெண்மதி புகார்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். அதையடுத்தே, தலைமறைவாகியுள்ள ஈமு பண்ணை உரிமையாளர்களை, தேடுவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மட்டுமின்றி கடலூரில் 100 புகார்களும், கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 500 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளன. சுசி ஈமு நிறுவனத்தின் மீது மட்டும் ஈரோட்டில் 4, கோவையில் 2, கடலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகள் என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குயின் ஈமு நிறுவன மேலாளர் அன்பழகன் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், நிறுவன உரிமையாளர் மயில்சாமி எஸ்கேப்.
மோசடியில் ஈடுபட்ட ஈமு கோழி உரிமையாளர்கள் பலரும் தலைமறைவாகி விட்டனர். மொத்தம் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதாக ஒரு உத்தேசக் கணக்கு கூறப்படுகிறது.
எஸ்.பி. வெண்மதி, “மோசடி செய்த உரிமையாளர்களின் சொத்து விவரங்கள், அவர்களின் நண்பர்கள், உறவினர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்து விவரங்கள் குறித்து அறிவதற்காக பத்திரப் பதிவுத்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதேபோல வங்கி கணக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
மொத்தத்தில், கோழியைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, மயில்போல பறந்துவிட்ட மயில்சாமிக்கும் மற்றையவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் போலீஸ். மயில்கள் இப்போது எந்த மாநிலத்தில் உள்ளனவோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக