சனி, 18 ஆகஸ்ட், 2012

பௌத்த தம்மத்தை போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார்



 போதிதர்மர் / அத்தியாயம் 4
வீரத்திலும் சரி, அறிவாற்றலிலும் சரி போதி தர்மர் தனது மூத்த சகோதரர்கள் இருவரையும்விட திறமைசாலி என்பது உண்மைதான். ஆனாலும் சகோதரர்கள் பயந்ததுபோல அவர்களை வீழ்த்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததில்லை.
சகோதரர்களின் மேற்படி பயத்தைப் பற்றி அறிந்துகொண்ட போதிதர்மர், அவர்கள் தன்னையே கொல்ல நினைக்கும் அளவுக்கு மாறிப்போனதை நினைத்து மனம் வருந்தினார். ஆசையானது தன் சகோதரர்களை கொலைகாரர்களாக ஆக்கும் ஆற்றல் படைத்தது எனக் கண்டுகொண்டார். சொந்தம், பந்தம் அனைத்தும் ஆசைக்கு முன் மண்டியிட்டுக் கிடக்கும் மாயைகளே என்பதை உணர்ந்தார். இத்தனைநாள் தான் அனுபவித்த துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும்கூடக் காரணம் ஆசையே என்பதை இனம் கண்டுகொண்டார். தன்னிடத்தில் ஆசை இருப்பதாலேயே துன்பம் இருக்கின்றது; ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பப்படுவதும் நின்றுவிடும். உலகத்தின் மீது ஆசைப்படுவதை நிறுத்த உலகையே துறக்க வேண்டும் என்று உணர்ந்த போதி தர்மர், அவ்வாறே துறப்பதற்கும் தயாரானார். அடுத்த கணம் கொஞ்சமும் யோசிக்காமல், கௌதமர் சென்ற பாதையிலேயே தானும் நடக்கத் தொடங்கிவிட்டார்.

போதிதர்மர் ஏன் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார் என்பதற்கு ஒரு சாரார் சொல்லும் கருத்து இது. இதுதவிர இன்னொரு சாரரும் இருக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை, ‘போதிதர்மர் எதற்காக அரச வாழ்வை துறந்தார் என்பதற்கு வரலாற்றில் தெளிவான ஆதாரம் இல்லை’. மேற்கத்திய ஆசிரியர்கள் அனைவரும் இந்த ரகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் போதிதர்மர் எதற்காகத் துறவியானார் என்பதை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சீனர்களும் ஜப்பானியர்களும்தான் போதிதர்மரின் துறவுக்குப் பின்னால் ஒரு பெரும் நிகழ்ச்சி இருப்பதாகக் கருதி, ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
சரி, எப்படியோ ஒருவழியாக துறவறம் மேற்கொண்ட போதிதர்மர், ப்ரஜ்னதாரா என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு புத்த பிக்குவானார்.
யார் இந்த ப்ரஜ்னதாரா?
ப்ரஜ்னதாரா காஞ்சியின் பௌத்த மடம் ஒன்றில் தங்கியிருந்த பிக்கு. சாக்கிய முனி கௌதம புத்தருக்கு முன்பிருந்த ஏழு புத்தர்கள் தொடங்கி பௌத்த மதத்தின் ஆன்மாவாகிய தியானத்தை வழிவழியாகச் சுமந்துவந்த பௌத்த சமய குருமார்களில் ப்ரஜ்னதாரா 27ஆம் தலைமுறை குரு ஆவார். இவரே போதிதாரா எனும் பெயரை போதிதர்மர் என மாற்றி தன் சீடனாக போதிதர்மரை சேர்த்துக் கொண்டவர். இதற்கு மேல் ப்ரஜ்னதாராவைப் பற்றி தகவல் ஏதும் இல்லை. அவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் கூட இல்லை!
ஓஷோ போன்ற சிலர் ப்ரஜ்னதாராவை பெண் என்றே கூறுகின்றனர். அதேநேரத்தில் சீனர்களும் மேற்கத்திய ஆசியர்களும் அவரை ஆண் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு போதிதர்மர் தன் அரச வாழ்வைத் துறந்து பௌத்த பிக்குவாகிறார். அரச வாழ்க்கை எப்படிப்பட்ட ராஜபோக வாழ்க்கை என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், பிக்கு வாழ்க்கை?
ஒரு சாமானியன் பிக்குவாகிவிட்டான் என்று இதனை ஒரே வரியில் சொல்லிவிடலாம். ஆனால், உண்மை அப்படியானதல்ல. ஒரு சாமானியன் இருபது வயதைக் கடந்து, உலகம் மாயை என்று உணர்ந்திருப்பதால் பிக்கு ஆகத் தகுதி மட்டுமே ஆகிறான். ஆனால் அவன் முழுமையான பிக்குவாகத் தொடர, நிர்வாணம் அடைய இத்தகுதிகள் போதாது. அசாதாரணமான பிக்கு வாழ்வில் 227க்கும் மேற்பட்ட விதிகள் உண்டு. இதுவே பிக்குணி (பெண் பௌத்த துறவிகள்) என்றால் 311. அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஏதாவது ஒரு விதியில் பிசகினால்கூட அவன் பிக்கு எனும் அந்தஸ்தை இழந்துவிடுவான். இப்படி ஒருமுறை தவறினால் போதும் அவனால் மீண்டும் பிக்குவாகவே முடியாது.
உண்ணல், உடுத்தல், பருகல், உறங்கல், தும்மல், இருமல், பார்த்தல், கேட்டல், படித்தல், பழகுதல் என பிக்கு வாழ்க்கையின் அனைத்து நிகழ்’தல்’களும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு திட்டமான வரையறை உண்டு. கொலை கூடாது, பொய் கூடாது, திருட்டு கூடாது, உடலுறவு கூடாது என நாம் அறிந்த கட்டுப்பாடுகளுடன் மேலும் தலை சுற்றும் அளவுக்குக் கூடாதுகள் உள்ளன.
வழக்கமாக பிக்குகள் கூட்டம் கூட்டமாக மடங்களிலும் குகைகளிலும்தான் வசிப்பர். இந்த பிக்குகளின் கூட்டத்துக்கு ‘சங்கம்’ என்று பெயர். மேலும், இந்த பிக்கு இன்ன முறையில்தான் தவம் செய்யவேண்டும், இன்ன முறையில்தான் மற்றவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று பிக்குகளின் அகவாழ்வையும் புறவாழ்வையும் நிர்வகிப்பது இச்சங்கமே.
பொதுவாக பிக்குகள் தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பர். அதுவும் பிச்சையெடுத்து. உண்மையில், பிக்கு என்பதற்கு பாலிமொழியில் பிச்சைக்காரன், யாசகன் என்பதுதான் நேரடிப் பொருள். ‘புத்தம் சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி’ எனும் மந்திரத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டே தெரு நெடுகப் போவர். கண்ணில் படும் ஏதாவதொரு வீட்டின் முன் நின்று இருமுறை மட்டும் ‘புத்தம் சரணம்’ ஓதுவர். அதற்குள் அந்த வீட்டைச் சார்ந்தவர் உணவளித்தால் ஏற்றுக்கொள்ளுவர். இல்லை என்றால் அங்கிருந்து நகர்ந்து விடுவர்.
இப்படி பிச்சையெடுக்கும் உணவை பிக்குகள் தரையில் அமர்ந்துதான் உண்ணவேண்டும். ஒரே வீட்டில் தினசரி பிச்சை எடுக்கக்கூடாது. ஏழைகளிடம் பிச்சை கேட்கக்கூடாது. பிக்குகளின் திருவோடு ஒரே அளவில்தான் இருக்கவேண்டும். திருவோட்டின் முக்கால்வாசி பகுதிக்கு மேல் உணவை யாசித்து நிரப்பக் கூடாது. ஒரு பருக்கையைக்கூட வீணடிக்கக்கூடாது. யாசிக்கச் செல்லும்போதும், திரும்பும்போதும் யாசிக்கும்போதும் பாதையையும் திருவோட்டையும் தவிர வேறு திசைகளில் பார்வையை ஓடவிடுவது கூடாது. அவனுக்கு என்ன உணவு கிடைத்துள்ளது என பக்கத்து பிக்குவின் திருவோட்டை எட்டிப்பார்க்கக்கூடாது.
பொது மக்கள் வாழும் பகுதிகளில் பலமாகச் சிரிப்பதோ சத்தம் போடுவதோ கூடாது. யாசித்து வாங்கிய உணவை அழகிய முறையில் சாப்பிட வேண்டும். சூரியன் உதிக்கும் முன்பும், அஸ்தமனத்துக்குப் பின்பும் உண்ணக் கூடாது. சங்கத்தின் அனுமதியின்றி குடில்கூட கட்டக் கூடாது. மாற்று ஆடைகள் வைத்திருக்கக் கூடாது. துறவாடையை இயற்கை பொருள்களால் தவிர வேறு பொருள்களைக் கொண்டு சாயம் போடக்கூடாது. துறவறத்துக்கு அத்தியாவசியமான பொருள்களைத் தவிர பிற பொருள்களை நாற்பத்தெட்டு மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.
ஆறு மாதத்துக்குக் குறைவாக பயன்படுத்திய போர்வைகளை (பெரும்பாலும் சணல் சாக்குகள்தான் பிக்குகளுக்குப் போர்வைகளாகப் பயன்படும்) மாற்றக்கூடாது. தீ மூட்டக் கூடாது. பிற பிக்குகளை பயமுறுத்தக் கூடாது, கிண்டலடிக்கக் கூடாது. நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது. கட்டாந்தரை தவிர வேறு படுக்கை கூடாது. அறிமுகமில்லா பிக்குணிகளிடம் பேசக்கூடாது. இது போல் இன்னும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்தது பிக்குகளின் சங்கம்.
சங்கத்தில் இணையும் இளம் பிக்குகள் இவ்விதிமுறைகளை மூத்த பிக்குகளின் நடைமுறையிலிருந்து அறிந்துகொள்வர். அடிக்கடி திரிபிடகம் ஓதுவதாலும், பிற பௌத்த நூல்களை வாசிப்பதாலும் இவ்விதிமுறைகள் பிக்குகளின் மனத்தில் உருவேறிவிடுகின்றன. மேலும், மாதத்துக்கு நான்கு அல்லது ஆறு முறை, உபசத்தா எனும் நாள், தேராவாத மற்றும் மஹாயான பிக்குகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில், ‘நான் ஒழுங்கான துறவாடையை அணிவேன்; நான் ஒழுங்கான மேலங்கியை அணிவேன், மக்கள் வசிக்கும் பகுதிகளுள் நுழையும் முன் என் அங்கிகளை ஒழுங்குபடுத்திக் கொள்வேன்; முழு கவனத்துடன் நான் யாசித்து உணவை வாங்கிக்கொள்வேன்’ எனத் தொடங்கும் நீண்ட நெடிய உறுதிமொழிகள் அடங்கிய சூத்திரம் ஒன்றை பிக்குகள் அனைவரும் சேர்ந்து ஜெபிப்பர். தாங்கள் தியானத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வர். நிர்வாணத்தை அடைய தாங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என வரையறுத்துக் கொள்வர்.
ஒரு நாளின் முக்கால்வாசி பொழுதை தியானத்திலும் மெய்யறிவதிலேயே செலவு செய்வர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் தியானம்தான். அனைத்திலும் கவனம் வேண்டும். மன ஒருமைப்பாடு வேண்டும்.  அதற்காகத்தான் இத்தனை விதிமுறைகள், கட்டுப்பாடுகள்.
உடலுக்குப் பயிற்சி அளிப்பது போல் மனத்துக்கு அளிக்கப்படும் பயிற்சி.  நாம் சொல்வதை மனம் கேட்டால் நிர்வாணம் அதாவது பிரபஞ்ச விழிப்படைவது எளிது. இதுதான் பௌத்த பிக்குகளின் வாழ்க்கை உணர்த்தும் நீதி. இவ்வாறாக, பிக்குகள் தங்கள் மனத்தைப் பயன்படுத்தி தொடர் தேடலில் ஈடுபட்டு தங்கள் நிலைகளை உயர்த்திக்கொள்வர்.
அவரவர் தியான நிலைக்கேற்றாற்போல் விதவிதமான பணிகள் ஒதுக்கப்படும். தம்மத்தை (பௌத்தத்தை) மக்களுக்குக் கொண்டுசெல்ல சிலர் ஊர் ஊராக அனுப்பி வைக்கப்படுவர். சிலர் மற்ற புத்த பிக்குகளுக்கு ஆசிரியராக, கண்காணிப்பாளாராக நியமிக்கப்படுவர். வேறு சிலர் மடத்து வேலைகளைக் கவனிப்பர்.
பிரபஞ்ச விழிப்படைய போதிதர்மரும் இப்படிப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் கடக்க வேண்டியிருந்தது. இவ்விதிகள் அவருள் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்த்திருப்பதை அவரது பின்னாளைய வாழ்க்கை படம் பிடித்துக் காட்டுகின்றது. இளவரசனாக இருந்தாலும், பௌத்த வழியில் நிர்வாண நிலையை அடைய தன் மனத்தைத் தயார்படுத்தத் தொடங்கினார்.  குரு ப்ரஜ்னதாராவும் போதிதர்மரைச் சரியான திசை நோக்கி நகர்த்திச் சென்றார்.
பல வருட மெய்ஞ்ஞானப் பயணத்தின் பலனாக  போதிதர்மர் பிறருக்கு பௌத்த தம்மத்தை போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார். அதே சமயம் அவரது சகோதரர்களோ பல்லவ நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து குடும்பம், குழந்தைகளுடன் சுகபோக வாழ்க்கை நடத்தினர்.
போதிதர்மர் வகுத்துக்கொண்ட வழியில் தொடர்ந்து முன்னேறினார்.  ப்ரஜ்னதாராவுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் போதிதர்மரை சீனாவுக்கு அனுப்பக்கூடாது?
(தொடரும்) www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக