வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மதுரை: கழிவறைக்குள் ஒரு டன் வெடி பொருட்கள் அதிர்ச்சி

மேலூர்: மதுரை, மேலூர் சிந்து கிரானைட் குவாரி அலுவலகத்தில், செடி மறைவில் உள்ள கழிவறையில், ஒரு டன்னுக்கு மேற்பட்ட வெடி பொருட்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அபாய கரமாக வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை, வெடி குண்டு நிபுணர்கள், வேறு ஒரு அறைக்கு மாற்றி, "சீல்' வைத்தனர்.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, மேலூர் தெற்கு தெரு பி.ஆர்.பி., நிறுவன அலுவலக வளாகத்திற்குள், நேற்று காலை 6:30 மணிக்கு சென்று, சில இடங்களை பார்வையிட்டார். பின்னர் கீழையூரில் உள்ள, சிசி கண்மாய், ரெங்கசாமிபுரத்தில் உள்ள ஒலிம்பஸ் குவாரி ஆகியவற்றில் மறு ஆய்வு மேற்கொண்ட அவர், திருவாதவூரில் உள்ள, சிந்து கிரானைட் வளாகத்திற்கு சென்றார். அந்த வளாகத்தின், பின் பகுதியில் உள்ள வேலியை தாண்டி சென்ற அவர், அங்கு வெடி பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிபுணர்கள் வருகை: இதை தொடர்ந்து, காலை 11 மணிக்கு வெடிகுண்டு பிரிவைச் சேர்ந்த, எஸ்.ஐ., சந்திரமுருகேசன், தலைமையிலான ஐந்து பேர் குழு, சிந்து கிரானைட் நிறுவனத்திற்கு வந்தனர். வளாகத்தின் மூலையில், சிறு வேலி கம்பிகளுக்கு பின்புறத்தில், ஒரு சிறிய அறை இருந்தது. அதில், வெடி பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில், அதன் நெடி மட்டும் வீசியது. அக் கட்டடத்தின், பின்புறம் அடர்த்தியாக வளர்ந்திருந்த செடிகளை விலக்கி பார்த்த போது, பழைய கழிவறை இருந்தது. அதற்குள் சென்று பார்த்த போது, ஏராளமான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் திரிகள், வெடி மருந்துகள் இருந்தன. அவை பாதுகாப்பாக, அருகில் உள்ள கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு, வேறு எங்கும் வெடிபொருட்கள் உள்ளதா என, நிபுணர்கள் சோதனை செய்தனர். மேலும் சில அடி தள்ளி, அடர்த்தியான செடி மறைவில் இருந்த அறையை, போலீசார் சோதனை செய்தனர். பயன்படுத்தாத குளியலறையான, அதில், மேலும் ஏராளமான வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட, வெடி மருந்து பெட்டிகள் அங்கிருந்தன. அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து, கணக்கெடுக்கப்பட்டது. பின் அவற்றை அறையில் அடைத்து, தாசில்தார் வசந்தா ஜூலியட் முன்னிலையில், வெடி குண்டு நிபுணர்கள், "சீல்' வைத்தனர். இவ்விடத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்: சிந்து கிரானைட் அலுவலகத்தை, ஆக., 26ல் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டு, அனுமதி பெறாத கட்டடப் பகுதி களை இடிக்க உத்தரவிட்டிருந்தார். அது முதல் தினமும், இவ்வளாகத்தில் தான் வருவாய் அலுவலர்கள் முகாமிட்டு, அங்குள்ள ஆவணங்கள் குறித்து சோதனையிட்டு வருகின்றனர். ஆனால், நேற்று காலை, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வந்து செல்லும் வரை, இங்கு இப்படி ஒரு வெடி கிடங்கு இருப்பது யாருக்கும் தெரியாது. அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, சோதனையிட உத்தரவிட்ட போது தான், இவ்வளவு வெடி பொருட்கள் சிக்கின. பா.ஜ., தலைவர் அத்வானி வந்த போது, திருமங்கலம் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் அடியில் வைக்கப்பட்ட வெடி பொருளில், "ஜெல் 90' என்பது, ஆர்.டி.எக்ஸ்.,வுடன் கலக்கப்பட்டிருந்தது. இதே போன்ற "ஜெல் 90', 719 கிலோ அளவிற்கு இங்கிருந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

வெடித்தால் 10 கி.மீ., காணாமல் போகும்: வெடி பொருட்கள் வைப்பதற்கான, எந்த அடிப்படை விதிகளும், இங்கு பின்பற்றப்படவில்லை. வெடி பொருட்களை காற்றோட்டமான, மின் வசதி இல்லாத இடத்தில், உறுதியான கட்டடத்தில் வைக்க வேண்டும். கட்டடத்தின் அருகில், மின் ஒயர் செல்லக்கூடாது. கட்டடத்தைச் சுற்றி, உயரமாக மண் கொட்டப்பட்டிருக்க வேண்டும். முக்கியமாக மின்னல் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காக, "இடி தாங்கிகள்' அமைக்கப்பட வேண்டும். இதில் ஒன்று கூட, வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பின்பற்றப்படவில்லை.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில், "அமோனியம் நைட்ரேட் 150 கிலோ, கன் பவுடர் 30 கிலோ, "ஜெல் 90' - 719 கிலோ, கார்டெக்ஸ் 45,250 மீட்டர், ஆர்டினரி டெட்டனேட்டர் 1,800 பீஸ், எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டர் 425, பவர் சோர்ஸ் 1, சேப்டி பியூஸ் 1,098' ஆகிய வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, 50 அடி தொலைவில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான டீசல் பங்க் உள்ளது. ஊழியர்கள் சமையல் செய்த இடமும், அதற்குள் 10க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்களும் உள்ளன. "எதிர்பாராமல், இந்த இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டால், 10 கி.மீ., தூரத்திற்கு ஒன்றுமில்லாமல் போய்விடும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக