திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சங்கீதா தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்


 Vijayakanth S Relative Sangeetha Joins In Dmk
சென்னை: அதிமுக தரப்புக்குப் போக ஆள் சேர்ப்பதாக கூறி தேமுதிகவிலிருந்து நீக்கப்பட்ட, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண்மணியான சங்கீதா, இன்று திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணிச் செயலாளராக இருந்தவர் சங்கீதா சீனிவாசன். இவர் அதிமுக முக்கியப் புள்ளியை போய்ச் சந்தித்ததாகவும், அவரிடம் அதிமுகவில் சேர விரும்பியதாகவும், அதற்கு அந்த முக்கியப் புள்ளி, எம்.எல்.ஏக்கள் சிலருடன் தேமுதிகவுக்கு வருமாறு அறிவுறுத்தி அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், சங்கீதாவை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்குக் கருத்து தெரிவித்த சங்கீதா, தேமுதிக ஒரு கட்சி என்று நினைத்தேன். ஆனால் விளக்கம் கூட கேட்காமல் என்னை நீக்கி அது ஒரு பிரைவேட் கம்பெனி என்பதை நிரூபித்து விட்டனர் என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சங்கீதா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியைச் சந்தித்ததாகவும் திமுகவில் சேரப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதன்படி இன்று அவர் திமுகவில் இணைந்து விட்டார்.
அவருடன், மாவட்ட தேமுதிக மகளிர் அணி துணைச் செயலாளர் கஸ்தூரி, திருத்தணி நகர தேமுதிக மகளிர் அணிச் செயலாளர் சசிகலா, திருவள்ளூர் நகர மகளிர் அணிச் செயலாளர் வேளாங்கண்ணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்து கொண்டனர்.
அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் ஐக்கியமாகிக் கொண்டனர். அப்போது கனிமொழி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக