புதன், 29 ஆகஸ்ட், 2012

ஆந்திராவில் ஜெகன் அலை, ம.பி, சட்டீஸ்கரில் பாஜக வெல்லும்

நாடாளுமன்றத் தேர்தல் கருத்து கணிப்பு டெல்லி: இந்தியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து என்டிடிவி ஒரு சர்வே நடத்தியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 18 பெரிய மாநிலங்களில் 125 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. Ipsos என்ற தனியார் சர்வே அமைப்புடன் இணைந்து என்டிடிவி நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் 30,000 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை நேற்று முதல் என்.டி.டி.வி. ஒளிபரப்பி வருகிறது. என்டிடிவி அதிபரும் மூத்த பத்திரிக்கையாளருமான பிரணாய் ராய் இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளை வழங்குகிறார். வரும் 31ம் தேதி வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
நேற்றிரவு ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஒடிஸ்ஸா மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் விவரங்களை பிரணாய் ராய் வெளியிட்டார்.
(இதில் சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2013) சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல ஆந்திரா மற்றும் ஒடிஸ்ஸா மாநிலங்களில் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடக்கவுள்ளது.)
இதன்படி மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக மிக, மிக வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜகவே மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேச மக்களில் 71 சதவீதம் பேர் பாஜக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளனர். முதல்வர் சிவ்ராஜ் செளகான் 3வது முறையாக மீண்டும் முதல்வராக வேண்டும் என்று 66 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 25 இடங்களை பாஜகவும், 4 இடங்களை காங்கிரசும் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 இடங்களில் பாஜகவும், 12 இடங்களில் காங்கிரசும் வென்றன.
சட்டீஸ்கர்:

சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே உள்ளது. அங்கு 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடந்த கருத்துக் கணிப்பில் 8 இடங்களை பாஜகவே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த மாநிலத்தில் பெரும்பாலானோர் பாஜக முதல்வர் ரமன் சிங்கே 3வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் வரும் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் மட்டுமே வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றிருந்தன. இப்போது பாஜகவுக்கு சிறிய சரிவு ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களை அந்தக் கட்சியே பிடிக்கும் என்று தெரிகிறது.
ஒடிஸ்ஸா:
ஒடிஸ்ஸா மாநிலத்தில் பிஜூ ஜனதாதளம் கட்சி அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. ஒடிஸ்ஸா மக்களில் 90 சதவீதம் பேர் நவீன் பட்நாயக்கே முதல்வராக நீடிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள 21 தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 14 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், இடதுசாரிகள் 1 இடத்திலும் வென்றனர். ஆனால், இப்போது தேர்தல் நடந்தால் அங்கு பிஜூ ஜனதா தளம் 16 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 4 இடங்களையும் மட்டுமே பிடிக்கும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகனின் அலை வீசுவது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அங்கு 48 சதவிதம் பேர் ஜெகன்மோகன் முதல்வராக வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 18 சதவீதம் பேரும், இப்போதைய காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு 11 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அங்கு மொத்தமுள்ள 42 இடங்களில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் 21 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 10 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், தெலுங்கு தேசத்துக்கு 2 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் 33 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 2 இடங்களிலும், தெலுங்கு தேசம் 7 இடங்களிலும் வென்றன. ஆனால், இம்முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மேலும் தேய்ந்து போய்விட்டதையே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
தனி தெலுங்கானா அமைய வேண்டுமா என்ற கேள்விக்கு தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களில் 80 சதவீதம் பேரும், பிற ஆந்திரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மற்ற மாநிலங்கள் குறித்த கருத்துக் கணிப்பு விவரங்களை அடுத்த 3 நாட்களில் பிரணாய் ராய் வெளியிடுவார். இதையடுத்து தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, அவற்றின் கூட்டணிக் கட்சிகள், பிற கட்சிகள் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பது குறித்த இறுதிக் கருத்துக் கணிப்பின் முடிவுகளையும் அவர் 31ம் தேதி வெளியிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக