செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மேலங்கி அணிந்து சுயமரியாதையை நிலை நாட்டிய நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை


டி.என்.ராஜரத்தினம் உருவாக்கிய உணர்வு பட்டுப்போகவில்லை : கலைஞர் பேச்சுமுத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளையின் சார்பில் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் 114-வது பிறந்தநாள் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, பத்மஸ்ரீ என்.ரமணி தலைமை தாங்கினார். கலைமாமணி வழுவூர் ரவி வரவேற்று பேசினார். ஊமையாள்புரம் கே.சிவராமன், தஞ்சை டி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கலைஞர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூத்த கலைஞர்கள் திருவாரூர் டி.எஸ்.லட்சப்பாப்பிள்ளை (நாதஸ்வரம்), திருவிடைமருதூர் பி.கே.ராமலிங்கம் (நாதஸ்வரம்), திருக்கோகர்ணம் செல்லையா (தவில்) ஆகியோருக்கு பொற்கிழி வழங்கி பேசினார். அப்போது அவர்,  ‘’தி.மு.க. மாநாட்டில் நாதஸ்வரம் வாசித்து, ஒரு உத்வேகத்தை கூடியிருந்தவர்கள் மத்தியில் உருவாக்கியவர் ராஜரத்தினம் என்று முன்பு பேசியவர்கள் குறிப்பிட்டனர்.


இது ஒரு மாநில கட்சிக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றபோது சுதந்திர விழாவிலே, சுதந்திரம் பெற்ற அந்த நாளில், ஜவஹர் லால் நேரு பக்கத்தில் அமர்ந்து நாதஸ்வரம் வாசித்து சுதந்திர விழாவை வாசித்து தொடங்கி வைத்தவர்தான் ராஜரத்தினம்.அப்படிப்பட்ட மாமேதை இசை உலகத்தின் இணையற்ற சக்கரவர்த்தி, அவர் இன்று இல்லை என்றாலும் கூட, அவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்கிற அளவிலே நான் ஆறுதல் பெறுகிறேன்.கவிஞர் வைரமுத்து கூறியதைப்போல் இசை வேளாளர் சமுதாயத்தில் சுயமரியாதை சுடர் ஒளியை ஏற்றி வைத்தவர்கள் பெரியார், அண்ணா என்றாலும் கூட அவர்களை எல்லாம் தொடர்ந்து, ஆக்க ரீதியாக, செயல் ரீதியாக தானே முன்னிற்று சுயமரியாதை உணர்வுக்கு சுடர் ஒளியை ஏற்றியவர் மறைந்தும், மறையாத ராஜரத்தினம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.தோளில் போடும் துண்டை எடுத்து, எதிரே வரும் ஒரு முதலாளிக்கு பயந்து இடுப்பிலே கட்டிக் கொள்கிற நிலைமையை மாற்றி, நான் வாங்கிய துண்டு இதை என்னுடைய தோளிலே போட்டுக் கொள்ள எனக்கு உரிமை இல்லையா? என்று குரல் எழுப்பி, அந்த துண்டுக்கு மரியாதையை, ஏற்றத்தை, புகழை சுயமரியாதை உணர்வை ஏற்றியவர் மறைந்தும் மறையாத மாணிக்கம் டி.என்.ராஜரத்தினம்தான்.>ப்படிப்பட்ட ராஜரத்தினம் இப்போது இல்லாவிட்டாலும் அவர் உருவாக்கிய உணர்வு பட்டுப் போகவில்லை. இன்றைக்கும் அதே தன்மான உணர்வோடு, சுயமரியாதை உணர்வோடு வாழ்கிறோம் என்றால் அதற்கெல்லாம் ஆணி வேராக "இருப்பவர் மறைந்த டி.என்.ராஜரத்தினம்தான் அவர் புகழ், கீர்த்தி என்றும் வாழ்க’’ என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக