ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மனிதர்கள் - சிலைகள் - ஜாதிகள்: அவசர சட்டம் தேவை

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில், அவர்கள் தங்கள் ஆட்சியை வேரூன்றச் செய்வதற்கும், தங்களுடைய மன்னர்களை இந்திய மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கும், பிரிட்டிஷ் மன்னர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளை இந்தியாவில் நிறுவினர்.சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திர போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களின் சிலைகளை, மக்கள் எவ்வித ஜாதி வேறுபாடுமின்றி ஒற்றுமையாக வைத்து மரியாதை செலுத்தினர்.
எந்த ஜாதிக்கும் மரியாதை இல்லை:
இன்றோ நிலைமை மாறிவிட்டது. ஜாதி அமைப்புகளும், கட்சிகளும் போட்டி போட்டு சிலைகளை வைத்து வருகின்றன. தற்போது வைக்கப்படும் இத்தகைய சிலைகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எந்த ஜாதியினரும் மற்ற ஜாதிகளை மதிப்பதில்லை. ஜாதி மக்களை உசுப்பேற்றி விடுவதிலேயே தலைவர்கள் கவனமாக உள்ளனர்.ஆனால், இன்றைய அவசர உலகத்தில் மக்கள், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் யார், அவர்கள் என்ன ஜாதி என, அறியாமலே உள்ளனர். அதைத் தெரிந்து கொள்ளும் அவகாசமும் அவர்களுக்கு இல்லை. மக்கள் பொதுவாக ஜாதி, மதம் பார்க்காமல் தான் உள்ளனர்; ஏன் சில இடங்களில் ஜாதி, மதம் பார்க்காமல் திருமணம் கூட செய்து கொள்கின்றனர்.இப்படி, மக்கள் அமைதியாக வாழும் சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில், தலைவர்கள் சிலைகள் அமைவது தான் வேதனையான விஷயம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியினர், தங்கள் தலைவரின் சிலையை, மக்கள் பயன்படுத்தும் சாலையின் நடுவில் அல்லது ஓரத்தில் அமைத்து, சிலைக்கு மாலை மரியாதை செய்வது அவர்கள் விருப்பம். ஆனால், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சாலையில், அது அமைக்கப்படுவதால், மற்ற ஜாதியினர் அந்த சிலையை மதிப்பதில்லை; வெறுப்பாகவே பார்த்துச் செல்லும் நிலை உள்ளது.சிலைகளைச் சரிவர பராமரிப்பது இல்லை; அவை பொலிவிழந்து, பறவைகளின் எச்சங்கள் போன்றவற்றால், அசிங்கமாக காட்சி அளிக்கின்றன. இந்த நிலை, அனைத்து ஜாதித் தலைவர்கள் சிலைகளுக்கும் பொருந்தும்.

அவசர சட்டம் தேவை:

இனி வருங்காலங்களில் பொது இடங்களில் எவருடைய சிலைகளையும் அமைக்க, அரசு அனுமதிக்கக் கூடாது. இதற்கான அவசர சட்டத்தை, உடனடியாக பிறப்பிக்க வேண்டும். துணிச்சலுக்குப் பெயர் பெற்ற நமது முதல்வர், இந்த விஷயத்திலும் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். மக்களின் அமைதியான வாழ்வில் அக்கறையுள்ள நமது முதல்வர் இந்த நடவடிக்கையை உடனே எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.எதிர்காலத்தில் புதிய சிலைகள் அமைப்பதை, அவசர சட்டத்தின் மூலம் தடுத்து விட்டாலும், தற்போது சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை என்ன செய்வது?

நாம் செய்ய வேண்டியது என்ன?

சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, பொதுச் சொத்து சேதம், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இன்மை என்பது போன்ற, பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமான இந்த சிலைகளுக்கு, தமிழக அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும். அனைத்து தரப்பினரையும் முதல்வர் அழைத்துப் பேசி, இந்த சிலைகளை எல்லாம் அவர் பிறந்த ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து பராமரித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம், சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க ஏதுவாகிறது.அவ்வாறு வைக்கப்படும் சிலைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்படும் செலவை, அந்தந்த அமைப்புகளை அல்லது கட்சிகளை ஏற்கச் செய்ய வேண்டும்.இதை மீறுபவர்கள் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தைப் போல கண்ட இடங்களில் சிலை வைக்கும் வழக்கம், எங்குமே இல்லை. தமிழகம், அமைதிப் பூங்காவாக திகழ, சிலைகளை அகற்றி, அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க அனைத்து கட்சிகளும், ஜாதி அமைப்புகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

ஏற்படும் சங்கடங்கள்:

சாலை ஓரத்தில் அல்லது நடுவில் வைக்கப்படும் சிலைகளால், பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணமாக, சமீபத்தில் மதுரை - அருப்புக்கோட்டை- தூத்துக்குடி சாலையில், ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டதாக கூறி, தேவையற்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கலவரத்தை பயன்படுத்தும் சமூக விரோதிகள், எதிரிகளை பழிவாங்கவும், கொள்ளை அடிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். தூத்துக்குடி போன்ற தொலைதூரம் செல்லும் பயணிகள் எத்தனை சிரமத்திற்குள்ளாகி இருப்பர்.இவ்வளவுக்கும் குறிப்பிட்ட சிலை வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்று கூறுவதற்கில்லை; போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒரு வாகன ஓட்டியின் கவனக்குறைவால் கூட சிலைகள் சேதப்பட வாய்ப்புள்ளது. அப்படி யாரோ ஒருவரின் கவனக்குறைவால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சங்கடங்களைச் சந்திப்பது எப்படி நியாயமாகும்?தெருவுக்கு, தெரு ஏதாவது ஒரு சமுதாய தலைவருக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை அல்லது படம் தான் கலவரத்திற்கு மூல காரணமாகிறது.

யாருக்கு லாபம்?

சிலைகளின் மூலம் உருவாகும் கலவரத்தால் பாதிக்கப்படுவது, அனைத்து மக்களும் தான். எந்த ஜாதியிலும், எல்லாரும் கலவரத்தில் ஈடுபடுவதில்லை. ஒரு சிலர் செய்யும் அடாவடித்தனத்தால், ஒட்டுமொத்த ஜாதிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு, மற்ற ஜாதிகளுடன் பரம்பரை பகையை உண்டாக்குகிறது.இப்போது, ஜாதி துவேஷம் உருவாக தலைவர்களின் சிலைகள் காரணமாக இருப்பது வருந்ததக்கது. மக்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாக்கும் இத்தகைய சிலைகள் தேவைதானா என்பதை, பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் போலீசார், இந்த சிலைகளை பாதுகாக்கச் சென்று விட்டால். மக்களைப் பாதுகாப்பது யார்? நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் போலீசாருக்கு நேரம் வேண்டாமா?

என்ன பலன்?

சிலைகள் வைக்க தடை விதித்து, இருக்கும் சிலைகளையும் இட மாற்றம் செய்து விட்டால், முதலில் சமுதாய ஒற்றுமை ஏற்படும். உயிரிழப்பு தவிர்க்கப்படும். ரோடுகளை அகலப்படுத்தலாம். தலைவர்களை இரும்புக் கூண்டுக்குள் அடைத்து அவமானப்படுத்த வேண்டியதில்லை. முக்கிய வேலைகளை விட்டுவிட்டு, ஒரு சிலைக்காக நாள் கணக்கில்
போலீசார் காவல் இருக்க வேண்டியதில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக