ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திராவிடர் இயக்கத்தை வளர்க்க அடிபட்டிருக்கிறோம், கல்லெறிபட்டுள்ளோம்! கலைஞர் பேச்சு!

பல இன்னல்களை கடந்துதான் திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் பேசினார்.

விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக கி.வீரமணி பொறுப்பேற்று, 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சென்னை பெரியார் திடலில் 25.08.2012 அன்று விழா நடந்தது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலை பத்திரிகையைப் போல, நான் 1942-ம் ஆண்டில் முரசொலி என்ற கையேட்டினை தொடங்கினேன். அதனை துண்டு அறிக்கையாக இலவசமாக வழங்கினோம். சிதம்பரத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி, வர்ணாசிரம மாநாடு நடத்தினார்கள். அந்த மாநாட்டை எதிர்த்து முரசொலியில் நீண்ட கட்டுரை எழுதினேன். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வீதிகளில் விநியோகித்தோம்.

அன்றிரவு முதலிரவுக்காக நான் சிதம்பரம் செல்ல வேண்டும். திருவாரூரில் இருந்து எனது நண்பன் தென்னனுடன் சிதம்பரம் புறப்பட்டேன். ரயிலடி உள்ளே போகக்கூடாது என்று எங்களை போலீசார் வழிமறித்தனர். ஏன் என்று கேட்டபோது, உங்களுக்கு 144 தடை உத்தரவு உள்ளது. வர்ணாசிரம மாநாட்டுக்கு எதிராக எழுதியதால் இந்த உத்தரவு என்றார்கள்.

எனக்கு முதலிரவு என்று தென்னன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவர்கள் அனுமதிக்கவே இல்லை. திருவாரூர் திரும்பிவிட்டோம். அன்று முதலிரவு இப்படித்தான் முடிந்தது. அந்த காலத்தில் கருத்துகளை வெளியிடக்கூட கடுமையான அடக்குமுறை இருந்தது என்பதை எடுத்துச் சொல்வதற்காகவே இந்த சம்பவத்தை நினைவூட்டினேன். இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளோம். அப்போதெல்லாம் நானும், வீரமணியும் பெரியாரின் கட்டளைப்படி, பெரியார் கொள்கைகள் பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு கூட்டங்களுக்கு செல்வோம். திராவிடர் இயக்கத்தை அவ்வளவு சாதாரணமாக வளர்க்கவில்லை. சொன்னோம், எழுதினோம், பேசினோம் என்று மட்டுமில்லாமல், அடிபட்டிருக்கிறோம், கல்லெறிபட்டுள்ளோம்.


ஒருதடவை பெரியார் மீது செருப்பு வீசினார்கள். இன்னொரு செருப்பை தேடிப் பாருங்கள். அதுவும் கிடைத்தால் காலில் மாட்டிக் கொள்ளலாம் என்று பெரியார் தனது பெருந்தன்மையைக் காட்டினார். இப்படியெல்லாம் வளர்த்ததுதான் திராவிடர் இயக்கம் என்ற இந்த பேரியக்கம். இப்போதும் பார்க்கிறவர்கள் அஞ்சும் அளவுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.

வீரமணி நமக்கு கிடைத்தது, நாமெல்லாம் பெற்ற பேறு. அவர் நீண்ட காலம் வாழ வேண்டும். என்னைவிட அவர் இளையவர். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நான் அவருக்கு உதவியாக இருப்பேன்.
இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக