திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வேண்டியவர்களுக்கு கட்சியில் பொறுப்பா?

தி.மு.க.,வில், மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்துவதற்கு முன்பே, திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை, மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.,யும் தேர்வு செய்து விட்டனர். இது தொடர்பாக, கட்சித் தொண்டர்கள், தலைமைக் கழகத்தில் புகார் கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், தி.மு.க.,வில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க, கடந்த, 15ம் தேதி கடைசி நாள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 40 பேர் பதவி வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
இதில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்ட செயலர்களின் வாரிசுகளும் விண்ணப்பித்துள்ளனர். கழக பொருளாளர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பித்தவர்களை நேரில் அழைத்து, நேர்காணல் நடத்தி, இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமிக்க உள்ளார்.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் நேர்காணல் நடத்துவதற்கு முன்பே, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி ஆகியோர் தேர்வு செய்து வருகின்றனர். "இவர்களுக்குத் தான் பதவி கொடுக்கப் போகிறோம்' என, கூறி வருகின்றனர்.இதில், 40 வயதுள்ள தொழிலதிபர்களும் அடங்கியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை சேர்ந்த லாரி அதிபரின் மகன் ஒருவர் உடந்தையாக உள்ளார். இவருக்கு சொந்தமாக, 20 லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் மண், மணல் கடத்தி வருவதாக சில கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.

லாரி அதிபரின் மகன், மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி., கார்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஒரு பெட்ரோல் பங்கில் சொல்லி வைத்து, இலவசமாக வழங்கி வருகிறார்.
இப்படி, மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் எம்.பி., சொல்லும் நபர்களை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளராக நியமனம் செய்தால், கட்சிக்காக பல ஆண்டுகளாக பாடுபடும் தொண்டர்கள், பதவி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.இந்த நியமனத்தில் கழக பொருளாளர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, கட்சிக்கு உண்மையாக பாடுபட்ட தொண்டர்களுக்கு வழங்க வேண்டும் என, தலைமை கழகத்தில் புகார் கொடுக்கவும், திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க.,வினர் பல கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். இளைஞர் அணி அமைப்பாளர் நியமனமும் முறையாக நடக்காவிட்டால், மாவட்டத்தில், தி.மு.க., பெரும் சரிவை நோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக