ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

காங்கிரஸ் பாய்ச்சல்: சுரங்க ஒதுக்கீட்டில் பரபப்புக்காக அறிக்கை வெளியிடுவதா? அப்ப ராசாவை பழிவாங்கியது?

புதுடில்லி: ""சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த விஷயத்தில், தனக்குள்ள அதிகார வரம்பை மீறி, தணிக்கை அலுவலகம் செயல்படுகிறது,'' என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, காட்டமாக தெரிவித்து உள்ளார்.
"ஸ்பெக்ட்ரம்' ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், பார்லிமென்ட்டில், நேற்று முன்தினம், அறிக்கை தாக்கல் செய்தது. இந்த முறைகேட்டின் மூலம், அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மன்மோகன் சிங், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மற்ற எதிர்க்கட்சிகளும், இந்த முறைகேட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளன.

தெலுங்கு தேசம் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் நம நாகேஸ்வர ராவ் கூறியதாவது: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில், அந்த துறையின் பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் தான், கவனித்து வந்துள்ளார். எனவே, அவருக்கு தெரிந்தே, இந்த முறைகேடு நடந்ததா அல்லது அவரது கவனத்துக்கு வராமல், முறைகேடு நடந்தததா என்பதை, அவர் விளக்க வேண்டும். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமருக்கு உள்ளது. அரசுக்கு ஏற்பட்டுள்ள, மிகப் பெரிய வருவாய் இழப்புக்கு பொறுப்பேற்று, தன் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு நம நாகேஸ்வர ராவ் கூறினார்.

பாய்ச்சல்: இதற்கிடையே, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கூறிய குற்றச்சாட்டுக்கு, காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:

மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், தனக்குள்ள அதிகார வரம்பை மீறி, செயல்படுகிறது. அறிக்கை தயாரிப்பதில், இதற்கு முன் பின்பற்றிய நடைமுறைகைளை, கணக்கு தணிக்கை அலுவலகம் பின்பற்ற வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக கூறி, தொகைகளில், பூஜ்ஜியங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, யூகத்தின் அடிப்படையில், கணக்கு தணிக்கை அலுவலகம் கூறியதை, சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தாலும், கணக்கு தணிக்கை அலுவலகம் கூறிய இழப்பீட்டு தொகை குறித்து, சுப்ரீம் கோர்ட், எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு மணீஷ் திவாரி கூறினார்.

பிரதமர் மீது பழி சுமத்துவதா? மத்திய மின் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாக, மதிப்பீடாக ஒரு தொகையை, கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தொகை, மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்த விஷயங்கள், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவில் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு, பிரதமர் மீது பழி சுமத்துவது, எந்த வகையிலும் சரியானது அல்ல. இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக