திங்கள், 27 ஆகஸ்ட், 2012

ஜெயாவுக்கு வரலாற்றின் மீது கொலவெறி


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கல்யாண மண்டபமாக மாற்றியது, புதிய தலைமை செயலகத்தை பாம்பு பண்ணையாக மாற்றியது என்ற ஓராண்டு சாதனையின் ஓர் அங்கமாக இப்போது எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளை புனரமைக்க 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வேலை நடந்து வருகிறது.
அந்த இரண்டு சமாதிகளுக்கும் இப்போது என்ன கேடு வந்துவிட்டது? எந்த பிரச்னையும் இல்லாமல் சலவைக்கல் தரையுடன் பளபளப்பாகத்தான் இருக்கிறது. 
ஆனால் ஏதோ ஒரு அமைச்சரின் சிறுமூளையிலோ, ஜெயலலிதாவின் பெருமூளையிலோ நிதானம் தவறிய வேளையில் உதித்த இந்த யோசனையின் விளைவு… 7.5 கோடி ரூபாய் மக்கள் பணம் மண்ணாய் போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே நன்றாக இருந்த சமாதியின் தரைகளை பெயர்த்துப்போட்டு மறுபடியும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது புனரமைப்பு வெறும் தரையுடன் முடிந்துவிடுமா, சமாதியை தோண்டி எம்.ஜி.ஆர். எலும்புக்கூட்டையும் வெளியே எடுத்து அதையும் புனரமைப்பார்களா… தெரியவில்லை. அரசு ஒதுக்கியுள்ள 7.5 கோடி ரூபாயில் அண்ணாவுக்கு 1.20 கோடிதான். எம்.ஜி.ஆருக்குதான் 4.30 கோடி ரூபாய். இந்த வகையில் தலைவியின் மனங்கவர்ந்த பொன்மனச்செம்மல் கொடுத்து வைத்தவர்தான்.

சரி, எதற்காக இதெல்லாம்? ‘அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதிகளை பார்வையிட தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதனால் இதை புனரமைக்கிறோம்’ என்கிறது அரசு. தினம்தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கேவலத்திலும் கேவலமாக கழிவுகள் நிறைந்த குப்பைக் கிடங்காக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் எப்போதோ அரிதாக வரும் ‘வொய்ட் போர்டு’ பேருந்துக்காக பேருந்து நிறுத்தங்களில் கால்கடுக்க பலமணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
நாமம்இரண்டு நாள் தூறல் போட்டதற்கே சென்னை நகரத்தில் பல இடங்களில் சாக்கடை உடைத்துக்கொண்டு சாலையில் ஓடுகிறது. அதே எம்.ஜி.ஆர். சமாதி அமைந்திருக்கும் மெரினா கடற்கரையில் வீடற்ற பல்லாயிரக்கணக்கானோர் வாழ்கின்றனர். பகல் எல்லாம் ஊர் சுற்றி உதிரி வேலைகள் பார்த்து இரவுகளில் கொசுக்கடியிலும், குளிரிலும், குழந்தைகள், முதியவர்களுடன் வெட்டவெளியில் உறங்குகின்றனர். இந்த ஏழரை கோடி ரூபாயில் இவர்களுக்கு ஏதேனும் செய்திருக்க முடியாதா? ஆனால் ஜெயலலிதா செய்யமாட்டார். உயிருள்ள மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும், செத்துப்போன எம்.ஜி.ஆர். பொம்மையை காட்டி வித்தை காட்டுவது ஜெயலலிதாவுக்கு சுலபம்!
ஏனெனில் பாசிஸ்டுகள் தங்களது உப்ப வைக்கப்பட்ட கட்டவுட்டுகளின் பிரம்மாண்டத்தில்தான் இமேஜை காட்டுகின்றனர். அந்த இமேஜை உடைப்பதன் மூலமே நாமும் இத்தகைய 7.5 கோடி போயஸ் தோட்டத்து கொழுப்பை முறிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக