வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சகல BJP Mp க்களும் ராஜினமா செய்தால்? காங். கூட்டணி தீவிர ஆலோசனை

டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்று பாஜக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் கூடி விவாதித்தது.
நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் அமைச்சர் ப. சிதம்பரத்தையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க மறுப்பதைக் கண்டித்து அக்குழுவில் இருந்து ஒட்டுமொத்தமாக பாஜக உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இது காங்கிரஸ் கூட்டணியை அதிர்வடையச் செய்திருக்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதுபற்ரி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் இருந்து விலகி புது நெருக்கடியைக் கொடுத்திருப்பது போல்.. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஒட்டுமொத்த மக்களவை பாஜக உறுப்பினர்களுமே ராஜினாமா செய்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது என்ற கோணத்திலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 20 மாதங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பாஜகவின் 114 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது முன்கூட்டியே பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
இடைத்தேர்தலா? முன்கூட்டியே பொதுத்தேர்தலா? என்பது பற்றி நேற்றைய கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்தில் பெரும்பாலான கட்சிகள், இடைத்தேர்தலை நடத்திப் பார்க்கலாம் என்கிற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. அப்படி ஒரு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஒரு மினி பொதுத்தேர்தலாகவும் இருக்கும்.
அதாவது 114 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இல்லையில் நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறாது.. காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும். அப்படி கணிசமான இடங்கள் கிடைத்தால் அந்த வெற்றியை கணக்கில் வைத்துக் கொண்டு அடுத்து பொதுத்தேர்தலை திடமாக எதிர்கொள்ள முடியும் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளின் கணக்கு என்கிறது டெல்லி அரசியல் வட்டாரங்கள்.
பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கூட்டணியின் வியூகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த கட்ட அஸ்திரத்தை ஏவக் கூடும் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் மூழ்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக